பேட்டிங்கிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா! முதன்முறையாக மகுடம் சூடியது குஜராத்!

பேட்டிங்கிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா! முதன்முறையாக மகுடம் சூடியது குஜராத்!
பேட்டிங்கிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா! முதன்முறையாக மகுடம் சூடியது குஜராத்!

கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் அசத்தியதோடு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ரன்கள் குவித்ததால் முதன்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது குஜராத் அணி!

இரண்டு மாதங்களாக களைகட்டிய 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமேக்ஸ் இன்று. ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

ஷமி வீசிய முதல் ஓவரில் இருவரும் நிதானித்து விளையாட, யாஷ் தயாள் வீசிய 2வது ஓவரில் அட்டகாசமாக பவுண்டரி ஒன்றை விளாசினார் பட்லர். யாஷ் தயாள் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் ஜெய்ஸ்வால். அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன், பெர்குசன் வீசிய அதிவேகப்பந்து ஒன்றை பவுண்டரிக்கு விரட்டினார். அந்த ஓவரில் 157.3 கீ.மீ வேகத்தில் பட்லருக்கு வீசினார் பெர்குசன். இந்த ஐபிஎல் சீசனில் மிக அதிவேகமாக வீசப்பட்ட பந்து இதுவாகும்.

பெர்குசன் வீசிய 7வது ஓவரில் பட்லர் 2 பவுண்டரிகளை விளாசி அதகளம் செய்தார். ஆனால் ரஷீத் ஓவரில் பட்லர் திணறுவதை உணர்ந்த ஹர்திக் அவரையே அடுத்த ஓவரையும் வீசச் செய்தார். விளைவு ஒரு பவுண்டரி கூட விளாச இயலாமல் ரன் ரேட் சரியத் துவங்கியது. அடுத்து கேப்டன் ஹர்திக் வீசிய ஓவரில் கேப்டன் சாம்சன் தன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த படிக்கல் நிதானமாக ஆட, பட்லர் ஷமீ வீசிய ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு திரும்ப முயன்றார். அதே வேளையில் 25 ரன்களை கடந்தபோது ஒரே சீசனில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த டேவிட் வார்னரின் சாதனையை (848 ரன்கள்) முறியடித்தார். ஆனால் மறுமுனையில் படிக்கல் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித்திடம் சிக்கி வெளியேறினார்.

அடுத்து நன்றாக ஆடிக் கொண்டிருந்த பட்லர் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணியை கடும் நெருக்கடிக்கு தள்ளினார் ஹர்திக் பாண்டியா. இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த அஸ்வின், ஹெட்மேயர் அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். ஆனால் 6 ரன்கள் எடுத்த நிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார் அஸ்வின். அடுத்து வந்த போல்ட் அதிரடியாக விளையாட முயன்று, ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு அதற்கு அடுத்த பந்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த ரியான் பராக், ஒபெட் மெக்காய் ஆகியோர் கடுமையாக முயற்சித்த போதிலும் ஸ்கோரை பெரிதாக உயர்த்த முடியாமல் போய்விட்டது. கடைசி ஓவரில் மெக்காய் ரன் அவுட்டாகி நடையைக் கட்ட, ரியான் பராக்கை க்ளீன் போல்டாக்கி மிரட்டினார் ஷமி. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே குவித்தது ராஜஸ்தான் அணி.

கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சாய் கிஷோரும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ராஜஸ்தானின் பேட்டிங் ஆர்டர் நிலைகுலைந்து போய்விட்டது. தற்போது 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடியது குஜராத் அணி. ஆனால் போல்ட் வீசிய முதல் ஓவரில் சுப்மன் கில் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தார் சஹால்!

பிரஷித் கிருஷ்ணா வீசிய 2வது ஓவரில் விருத்திமான் சஹா க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களத்திற்கு வந்த மேத்யூ வேட் பொறுமையாக விளையாடினார். 3வது ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் மெய்டனாக்கி அசத்தினார் போல்ட். பிரஷித் வீசிய 4வது ஓவரில் சிக்ஸர் ஒன்றை விளாசி அசத்தினார் மேத்யூ வேட். ஆனால் போல்ட் வீசிய அடுத்த ஓவரில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வேட்.

அடுத்து களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் விளையாட ஆரம்பித்ததால் ரன் ரேட் உயரத் துவங்கியது. சஹால் ஓவரில் சுப்மான் கில் பவுண்டரி விளாசி அசத்தினார். பிரஷித் வீசிய 9வது ஓவரில் ஹர்திக், கில் இருவரும் தலா ஒரு பவுண்டரி விளாச, குஜராத் கூடாரத்தில் நம்பிக்கை பரவத் துவங்கியது. மெக்காய் ஓவரில் ஹர்திக் தன் பங்குக்கு மற்றொரு பவுண்டரியும் அடிக்க இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது குஜராத் அணி.

அஸ்வின் வீசிய 12வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி வான வேடிக்கை காட்டினார் ஹர்திக் பாண்டியா. ஆனால் சஹால் பந்துவீச்சில் ஹர்திக் அவுட்டாக ராஜஸ்தான் பக்கம் வீசத் துவங்கியது. ஆனால் அந்த காற்றை கில்லராக வந்து தடுத்து நிறுத்தினார் டேவிட் மில்லர். மெக்காய் ஓவரில் ஒரு பவுண்டரியை சிதறடித்த மில்லர், அஸ்வின் ஓவரில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசி அசத்தினார்.

பிரஷித் ஓவரிலும் இரு பவுண்டரிகளை விளாசி தாம் “கில்லர்” என்பதை மில்லர் உணர்த்த இலக்கை நோக்கிய குஜராத்தின் பயணம் மிக எளிதாக அமைந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மில்லர், மெக்காய் வீசிய ஓவரில் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தார். 11 பந்துகளை மீதம் வைத்த நிலையில் 18.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி. அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை முத்தமிட்டது குஜராத் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com