ஹர்திக் அதிரடி அரைசதம்! ஆஸி., பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்தியா

ஹர்திக் அதிரடி அரைசதம்! ஆஸி., பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்தியா
ஹர்திக் அதிரடி அரைசதம்! ஆஸி., பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரில் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஓப்பனர்களாக கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

பாட் கம்மின்ஸ் வீசிய 2-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய ரோகித், ஹசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் 11 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களத்திற்கு விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் கைகோர்த்து நிதானமாக விளையாடத் துவங்கினார். ஆனால் நாதன் எல்லீஸ் வீசிய 5-வது ஓவரில் வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் கோலி.

அடுத்து களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், துவக்கம் முதலே அதிரடியாக விளையாடத் துவங்கினார். இந்நிலையில் ராகுலும் கேமரூன் க்ரீன் வீசிய 8வது ஓவரில், பவுண்டரி, சிக்ஸராக விளாசி அதிரடிக்கு திரும்பத் துவங்கினார். அடுத்து சில சிக்ஸர்களையும் பறக்கவிட்ட ராகுல் 32 பந்துகளை மட்டும் சந்தித்த நிலையில் அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து ஹசில்வுட் வீசிய பந்தில் பவுண்டரி விளாசிவிட்டு, அதற்கு அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து 55 ரன்கள எடுத்த நிலையில் நடையைக் கட்டினார் ராகுல்.

இதையடுத்து அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் கைகோர்த்தார் சூர்யகுமார். ஆடம் சம்பா வீசிய ஓவரில் 2 சிக்ஸரை விளாசிய சூர்யகுமார். அடுத்து க்ரீன் வீசிய ஓவரிலும் ஒரு சிக்ஸர் விளாசிவிட்டு 46 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் சூர்யகுமார். அடுத்து அக்சருடன் ஜோடி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தார் ஹர்திக்.

ஆறு ரன்களில் அடுத்து அக்சர் பெவிலியன் திரும்ப, ஹர்திக்குடன் கைகோர்த்தார் தினேஷ் கார்த்திக். பாட் கம்மின்ஸ் வீசிய ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் விளாசி ஹர்திக் அதகளம் செய்து கொண்டிருக்க, அதே ஆறு ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினார் தினேஷ் கார்த்திக். இருப்பினும் நாதன் எல்லீஸ் வீசிய ஓவரில் பவுண்டரி விளாசியபடி, 25 பந்துகளை மட்டும் சந்தித்த நிலையில் அரைசதம் கடந்து அதிர வைத்தார் ஹர்திக்.

இறுதியாக க்ரீன் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸர் பவுண்டரிகளாக ஹர்திக் விளாச, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களை விளாசி 71 ரன்கள் எடுத்து அசத்தினார். தற்போது 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com