ஹர்திக் பாண்டியா 2.0..! மீண்டும் ஆல் ரவுண்டர் ஜாம்பவானாக உருவெடுத்த கதை!

ஹர்திக் பாண்டியா 2.0..! மீண்டும் ஆல் ரவுண்டர் ஜாம்பவானாக உருவெடுத்த கதை!
ஹர்திக் பாண்டியா 2.0..! மீண்டும் ஆல் ரவுண்டர் ஜாம்பவானாக உருவெடுத்த கதை!

2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் ஆல் ரவுண்டராக அறிமுகமானார் ஹர்திக் பாண்டியா. 2017 ஆம் ஆண்டில் மூன்று வடிவங்களிலான ஆட்டங்களும் சேர்த்து மொத்தம் 811 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். அதே வருடத்தில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக உருவெடுத்தார். அதற்கடுத்த வருடங்களிலும் சிறப்பாக விளையாடி வந்த பாண்டியாவின் ஆட்டத்திற்கு ஸ்பீட் பிரேக்கராய் வந்தது கொரோனாவும் காயங்களும்.

தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்த அவர் ஒரு கட்டத்தில் பந்து வீசுவதை தவிர்த்து வெறும் பேட்ஸ்மேனாக களமிறங்கும் சூழல் ஏற்பட்டது. 2020 ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு போட்டியில் 92 ரன்கள் குவித்தபோதும், விக்கெட் வீழ்த்தாத பவுலிங் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் வெறும் 4 ஓவர்கள் மட்டும் வீசிய ஹர்திக் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். இதையடுத்து முழு ஆல் ரவுண்டராக பரிணமிக்க அவர் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை பயன்படுத்திக் கொண்டார்.

2022 ஐபிஎல்லில் ஜொலித்த ஹர்திக்:

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸை கோப்பையை நோக்கி அழைத்து வந்தது வேறு யாருமல்ல! ஹர்திக் தான்! மிக நெருக்கடியான போட்டிகளை எல்லாம் அசால்டாக வென்ற அந்த அணிக்கு ராஜஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டி சிம்ம சொப்பனமாக அமைந்தது. களத்தில் நிலைப்பெற்று கொண்டு ரன் குவிக்க துவங்கிய சஞ்சு சாம்சனை வீழ்த்தியது, தொடர் நாயகனான பட்லரை அசால்டாக வீழ்த்தியது, அதிரடி வீரர் ஹெட்மேயரை துவம்சம் செய்தது என அனைத்தையும் கணக்கச்சிதமாக செய்து முடித்தார் பவுலர் பாண்டியா. மொத்தமாக 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 பெரும் தலைகளின் விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார் ஹர்திக்.

அடுத்து குஜராத் அணி பேட்டிங் செய்யும்போது 23 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்தார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி 34 ரன்கள் சேர்த்து இலக்கு நோக்கி அணியின் பயணத்தை எளிதாக்கி கோப்பையை கையில் ஏந்தினார் பாண்டியா. ஒரு கேப்டனாக பேட்ஸ்மேனாக பௌலராக ஃபீல்டராக என அத்தனை விதத்திலும் சிறப்பாக செயல்பட்டு குஜராத் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வெல்ல ஹர்திக் பாண்ட்யா பெரும் திருப்தியை அளிக்கும் வகையில் ஒரு பெர்ஃபார்மென்ஸை கொடுத்தார்.

மீண்டும் ஆல் ரவுண்டராக அணிக்கு திரும்பினார்:

ஐபிஎல் தொடருக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கினார் ஹர்திக். ஆனால் ஹர்திக் இத்தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அத்தொடரில் கேப்டனாக இந்திய அணியை ஹர்திக் தான் வழிநடத்தினார். 2 போட்டிகளையும் அவர் வென்று தொடரைக் கைப்பற்றிய போதிலும், அவரது இயல்பான ஆட்டம் வெளிப்படாமலேயே இருந்தது.

தனது முழு ஆற்றலையும் அவர் மீண்டும் காட்டியது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தான்! சவுத்ஹாம்டனில் நடைபெற்ற டி20 போட்டியில் அரைசதம் விளாசிய ஹர்திக், பவுலிங்கிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை கலங்கடித்தார்.

அரைசதம் நோக்கி அற்புதமாக ஆடிக் கொண்டிருந்த ஜேசன் ராய், நிலைபெற்று ஆடத்துவங்கிய பென் ஸ்டோக்ஸ் இருவரது விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தை திகைக்க வைத்தார். இதனால் அவரது பந்துகளை இங்கிலாந்து பேட்டர்கள் தவிர்க்கவே அவர் வீசிய ஓவர்கள் மெயிடன்களாக மாறத் துவங்கின. பின்னர் மீண்டும் ரன்குவிப்பில் இங்கிலாந்து ஈடுபட்ட நிலையில் அங்கு எமனாக வந்தார் ஹர்திக்.

அரைசதம் விளாசி களத்தில் செட்டில் ஆகியிருந்த ஜோஸ் பட்லர், அதிரடிக்கு தயாராகிக் கொண்டிருந்த லிவிங்ஸ்டன் ஆகிய இருவரையும் பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. இங்கிலாந்தும் ஆல் அவுட் ஆக, இந்திய அணியின் 2வது இன்னிங்சிலும் விக்கெட்டுகள் விறுவிறுவென சரிந்த போது அதை பண்ட் உடன் சேர்ந்து தடுத்து நிறுத்தினார் ஹர்திக் பாண்டியா.

தடுப்பாட்டத்தை கையிலெடுத்து பண்ட் அரைசதம் கடந்த நிலையில், அதிரடியை கையிலெடுத்து பாண்டியாவும் அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்தார். இருவரும் சேர்ந்து 133 ரன்கள் குவித்த நிலையில் இந்த ஜோடியை பிரைடன் கார்ஸ் பிரித்தார். 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 71 ரன்கள் குவித்த நிலையில் பெவிலியன் திரும்பினார் பாண்டியா. இதையடுத்து ஜடேஜாவுடன் கைகோர்த்த பண்ட் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். தொடர் நாயகன் விருதினை தட்டிச் சென்றார். இவரது நேற்றைய ஆட்டத்தை பலரும் வியந்து பாராட்டினர். ஆல் ரவுண்டராக புதிய உச்சத்தை நோக்கி அவர் சென்று கொண்டிருப்பதாக கருத்துக்கள் கூறப்பட்டன.

உலகக் கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்தாரா பாண்டியா?

தற்போது இந்திய அணியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் பாண்டியா அடுத்தடுத்த தொடர்களிலும் இந்திய அணியில் தவறாமல் இடம்பெற்று வருகிறார். வரும் நாட்களில் “காயம்” எதுவும் ஏற்படாமல் இருக்கும்பட்சத்தில், 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வுக்குழு ஆல் ரவுண்டர் ஹர்திக் பெயரை டிக் செய்துவிட்டு மீதமுள்ள 10 இடங்களில் யாரை இறக்கலாம் என்பதை முடிவெடுக்கும் பணியில் தாராளமாக ஈடுபடலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com