2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!

2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!
2014-ஆம் ஆண்டில் வாங்க ஆள் இல்லை; 2022இல் கோப்பையை வென்ற கேப்டன்! இது ஹர்திக்கின் கதை!

2014-ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுக்கப்படாமல் “UNSOLD" ஆன ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாகி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.

ஹர்திக் பாண்டியா தற்போது “இந்திய நட்சத்திரமாக” ஜொலித்து வருகிறார். ஆனால் துவக்கத்தில் ஹர்திக் பாண்டியா என்றால் ஒரு சாதாரண பரோடா நகரை சேர்ந்த பையன்தான். உள்நாட்டு வட்டாரத்தில் தெரியாத முகம். ஐபிஎல் 2014 ஏலத்தில் விற்கப்படாமல் “UNSOLD" ஆனார். ஆனால் 2015 ஏலத்தில் அவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்கள், அவரது அடிப்படை விலையான ரூ 10 லட்சத்திற்கு வாங்கினர். 2015 முதல் 2021 வரை, ஹர்திக் 153.91 ஸ்ட்ரைக் ரேட்டில் 1,476 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் 42 விக்கெட்டுகளை எடுத்தார். மும்பை அணி சாம்பியன் ஆன 2015, 2017, 2019 மற்றும் 2020 சீசன்களில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

ஐபிஎல் 2022க்கு முன், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று நான்கு முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் பாண்டியா பங்கேற்று இருந்தார். அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் 2014 இல் விற்பனையாகாத வீரராகத் தொடங்கி, ஒரு அணியை டைட்டில் வெற்றிக்கு அழைத்துச் சென்ற முதல் கேப்டன் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஹர்திக் பாண்டியா.

மும்பையுடன் (2015, 2017, 2019, 2020) நான்கு முறை கோப்பையை வென்ற பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ஒரு கோப்பையை வென்றார். இதன்மூலம் நான்கு பட்டங்களை வென்ற எம்எஸ் தோனியை (2010, 2011, 2018, 2021) முந்திச் சென்றார் ஹர்திக் பாண்டியா. இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்று அனில் கும்ப்ளே மற்றும் ரோஹித் சர்மாவின் சாதனையை ஹர்திக் பாண்டியா சமன் செய்தார்.

முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் ஹர்திக் பாண்டியா குறித்து பேசுகையில், “அவர் அணியை வழிநடத்திய விதம், அவர்களை ஒன்றிணைத்த விதம் எல்லாம் அற்புதமானது. அவர் தலைமைப் பண்புகளைப் பெற்றுள்ளார். உங்களிடம் தலைமைப் பண்பு இருந்தால், எதிர்காலத்தில் இந்திய தேசிய அணிக்கு கேப்டனாக இருக்க கதவு தானாகவே திறக்கப்படும்” என்று கூறினார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான பாண்டியா இந்தியாவுக்காக 11 டெஸ்ட், 63 ஒரு நாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு முதுகில் ஏற்பட்ட காயம் அவர் அணியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் நடப்பு சீசனில் 487 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளுடன் தனது உடற்தகுதியை நிரூபித்து ஆல்ரவுண்டராக மீண்டும் திரும்பிவந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com