“விமானத்தில் வந்த போது என் பேட்டை காணவில்லை” - ஹர்பஜன் சிங் வேதனை
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது பேட்டை காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார்.
ஐபில் போட்டிகள் இந்த மாதம் 29 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப் போட்டிகளுக்காக பயிற்சி பெறவேண்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில நாட்கள் முன்பு சென்னை வந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளாருமான ஹர்பஜன் சிங் தான் ஐ.பி.எல் போட்டிக்காக வைத்திருந்த பேட்டை காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் நேற்று மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கு இண்டிகோ விமானத்தில் சென்றார். இந்தப் பயணத்தில் அவரது பேட் தொலைந்து போனதாக தெரிகிறது. இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் “நான் கோயம்புத்தூரில் தரையிறங்கும் போது பேட் காணாமல் போனதை அறிந்தேன். எனது பேட் இருக்குமிடம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதே வேளை அது திருடப்பட்டதா என்றும் என்னால் உறுதியாக கூற முடியவில்லை. பயிற்சிக்குப் பிறகு எனது பையை நான் திறந்து பார்க்கவில்லை.
இந்தப் பயணத்திற்காக நான் விமானநிலையம் வந்த போது என்னிடம் இருந்த சுமையின் அளவு விமானத்தில் அனுமதிக்கப்பட்ட எடையை விட 35 கிலோ கூடுதலாக இருந்தது. இதனால் விமான அதிகாரிகள் அதற்காக 1200 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறினர்.
ஆனால் எங்களது குழுவினர், ஏற்கனவே பயணத்தின் போது கூடுதல் பொருட்களை எடுத்து செல்வதற்கான குறிப்பிட்டத் தொகையை செலுத்தி விட்டதாக கூறி மறுத்தனர். எனது பேட் காணாமல் போனதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் எனது பேட் மிக முக்கியமான விஷயம். ஏனெனில் அதனை வைத்துதான் ஐ.பி.எல் போட்டியில் நான் விளையாட இருக்கிறேன். ஆகவே நான் விமான அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன்” என்று அவரது ட்விட்டர் கூறியுள்ளார்.
இது குறித்து விமான அதிகாரிகள் கூறும் போது “ஹர்பஜன் சிங் சிரமத்திற்கு உள்ளானதற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அவரின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.