ஐபிஎல் 2022: ‘இவரால் தான் தோனிக்கு பெரும் தலைவலி’ - முன்னாள் சென்னை வீரர் அதிரடி

ஐபிஎல் 2022: ‘இவரால் தான் தோனிக்கு பெரும் தலைவலி’ - முன்னாள் சென்னை வீரர் அதிரடி
ஐபிஎல் 2022: ‘இவரால் தான் தோனிக்கு பெரும் தலைவலி’ - முன்னாள் சென்னை வீரர் அதிரடி

சென்னை அணியின் கேப்டன்சி விவகாரத்தில் தோனிக்கு, ரவீந்திர ஜடேஜா தலைவலியாக இருப்பதாக, அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 வருடங்களாக முழுமையாக இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டி நடைபெறாதநிலையில், இந்த ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் ஆட்டம், மும்பை மற்றும் புனேவில் கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றன.

பல்வேறு மாற்றங்களுடன் நடைபெற்று இந்தப் போட்டியில், 2021-ம் ஆண்டு சாம்பியனான சென்னை அணி, ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முன்பாக கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியநிலையில், ஜடேஜா புதிய கேப்டனாக பதவியேற்றார்.

ஆல்ரவுண்டராக சாதித்த ஜடேஜா கேப்டனாகவும் சாதிப்பார் என்று எதிர்பார்த்தநிலையில், சென்னை அணி இந்த தொடரை மிக மோசமாக துவங்கியுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி, அடுத்ததாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3-வது போட்டியில் வெற்றி கணக்கை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சென்னை அணி டாஸில் வென்றதாலும், பஞ்சாப் அணியை 180 ரன்களில் கட்டுப்படுத்தியதாலும், சென்னை அணி இந்த போட்டியில் அசால்டாக வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணிஇந்த போட்டியில் படு மோசமாக பேட்டிங் செய்து 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “களத்தில் இப்போதும் தோனியே கேப்டனாக செயல்படுகிறார். சென்னை அணியின் கேப்டனான ஜடேஜா, தனக்கும் கேப்டன் பதவிக்கும் சம்பந்தமே இல்லாததை போன்று பவுண்டரி லைனில் நின்று பீல்டிங் செய்து வருகிறார். பவுண்டரி லைனில் நின்று பீல்டிங் செய்தால் எந்த கேப்டனாலும் தனது அணியை வழிநடத்த முடியாது.

இதனால் தோனிக்கு தான் தேவையற்ற தலைவலி என்றே தோன்றுகிறது. ஜடேஜாவின் வேலையை வேறு வழியின்றி தோனியே சுமக்க வேண்டியுள்ளது. ஜடேஜா இதுபோன்று தனது சுமையை மற்றவர் மீது சுமத்திவிட்டு விட்டு இருக்கக்கூடாது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். ஜடேஜா அதீத நம்பிக்கையுடைய வீரர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அபாரமானதிறமையை வெளிப்படுத்துவார்.

அவரால் சென்னை அணியை சிறப்பாக வழிநடத்த முடியும். ஜடேஜா அதற்கு துணிந்து முன்வர வேண்டும். சில விஷயங்களை அவர் வாய்திறந்து பேச வேண்டும். கேப்டனாக அவரை நிரூபிக்க வேண்டும். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சென்னை அணி முன்னேற வேண்டும். தோனி விளையாடும் இந்த தொடரிலேயே அவரிடம் இருந்து நிறைய விசயங்களை ஜடேஜா கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன்சியில் தோனியின் தலையீடு அதிகம் உள்ளது தான் காரணம் என முன்னாள் வீரர்கள் பலர் பேசி வரும் நிலையில், அந்த அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com