நம்பிக்கையோடு கடைசி ஓவரை கொடுத்த கோலி - நிரூபித்து காட்டிய நடராஜன்! சுரேஷ் ரெய்னா வாழ்த்து
“இந்திய அணியின் மிகமுக்கிய வெற்றியில் எனது பங்களிப்பை எண்ணி மகிழ்கிறேன்!” என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும் தமிழகத்தைச் சேர்ந்த வீரருமான நடராஜன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2 -1 என கைப்பற்றியது. இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய நடராஜன் 73 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைபற்றி இருந்தார். இறுதி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வரும் 6 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்தார். அதில் 3 டாட் பந்துகள் அடங்கும்.
இந்தப் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடராஜன், “இந்திய அணியின் மிகமுக்கியமான வெற்றியில் எனது பங்களிப்பு இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய அணி வீரர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை, சகோதரத்துவ மிக்க பாசம், ஒருபோதும் குறையாத நம்பிக்கையும் தான் விளையாட்டில் எனக்கு தேவையானது. சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியும் இறுதி வரை வெற்றிக்காக போராடியது. அதனால் இந்த வெற்றியின் சுவை தனி ரகம். ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி” என போஸ்ட் போட்டுள்ளார்.
இந்தப் போட்டியின் இந்திய அணியின் வெற்றியை தாமதப்படுத்தியவர் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் போட்டியை ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை எடுத்துச் சென்றால். போட்டிக்கு பின்னர் சாம் கர்ரன் நடராஜனின் கடைசி ஓவர் குறித்து “இறுதி ஓவரில் ரன்களை கட்டுபடுத்துவது முடியாத காரியம். ஆனால் நடராஜன் அருமையாக வீசினார். அதன் மூலம் தான் ஏன் சிறந்த பவுலர் என்பதையும் அவர் நிரூபித்தார்” என தெரிவித்தார்.
தொடக்கத்தில் நடராஜன் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த போதும் கடைசி ஓவரை நடராஜனுக்கு நம்பிக்கையோடு கொடுத்தார் கேப்டன் விராட் கோலி. அந்த வகையில் விராட் கோலியின் நம்பிக்கையை நடராஜனும் காப்பாற்றினார். வெற்றிக்கு பிறகு கேப்டன் கோலி நடராஜனை ஆரத் தழுவினார்.
நடராஜனை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னாவும் பாராட்டியுள்ளார்.
"இறுதி ஓவரில் அந்த யாரக்கரை வீசியது அருமை" என ட்வீட் செய்துள்ளார் ரெய்னா.