இந்திய அணியின் 'ஹிட்மேன்':ரோகித் சர்மாவின் சாதனைகளில் சில! #HappyBirthdayRohitSharma

இந்திய அணியின் 'ஹிட்மேன்':ரோகித் சர்மாவின் சாதனைகளில் சில! #HappyBirthdayRohitSharma
இந்திய அணியின் 'ஹிட்மேன்':ரோகித் சர்மாவின் சாதனைகளில் சில! #HappyBirthdayRohitSharma

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், ரோகித் சர்மாவின் 15 வருடகால  சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் படைத்துள்ள முத்தான ஏழு சாதனைகளை தற்போது காணலாம்.

சாதனை 1: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் ரோகித் சர்மாதான். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்த ரோகித் சர்மா, அந்த போட்டியில் 209 ரன்களை குவித்தார். அதன்பின்னர் 2014ல் இலங்கைக்கு எதிராக 264 ரன்களை குவித்து அசாத்திய சாதனையை படைத்தார். மீண்டும் 2017ல் இலங்கைக்கு எதிராக இரட்டை சதமடித்தார். 2017ல் மொஹாலியில் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் 208 ரன்கள் விளாசி ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதே போன்று சர்வதேச ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிபட்ச ஸ்கோர் (264 ரன்கள்) அடித்தவர் என்ற சாதனையும் ரோகித் பெயரில் உள்ளது.

சாதனை 2: 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா, இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டார். மொத்தம் 8 போட்டிகளில் பங்கேற்ற இவர், 5 சதங்களை விளாசி, ஒரு உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அதற்குமுன் இலங்கையை சேர்ந்த குமார் சங்கக்காரா, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் 4 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. 2019 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடியபோது சதம் அடித்து அசத்தினார்.

சாதனை 3: ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தவர் ரோகித் சர்மா. கடந்த 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற அவர், கடந்த 2009-ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் இடம் பிடித்திருந்தார். இதன்மூலம் 6 கோப்பைகளுடன் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அவரை தவிர வேறு எந்த வீரரும் 6 சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது.

சாதனை 4: இந்திய மண்ணில் 17 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள கேப்டன் ரோகித் சர்மா அவற்றில் 16 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இதுதான் சொந்த மண்ணில் ஒரு கேப்டன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெற்ற அதிகபட்ச வெற்றி.

சாதனை 5: டி20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் ரோகித் சர்மா. இதுவரை அவர் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் சோயிப் மாலிக் 124 சர்வதேச டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளார்.

சாதனை 6: டி20 தொடரில் எதிரணிகளை அதிக முறை ஒயிட்வாஷ் (முழுமையாக) வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பவர் ரோகித் சர்மா. 2017-இல் இலங்கையை அணியையும், 2018-இல் வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 2021-இல் நியூஸிலாந்தையும், 2022-இல் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ்  அணியையும் ஒயிட்வாஷ் செய்தார்.

சாதனை 7: கடந்த 2015 ஜனவரி முதல் எடுக்கப்பட்ட பட்டியலின்படி,  சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக அதிக ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ரோகித் சர்மா மொத்தம் 230 ஒருநாள்  போட்டிகளில் விளையாடி, 9283 ரன்கள் குவித்துள்ளார். இதில் 44 அரை சதங்களும், 29 சதங்களும் அடங்கும்.  டி20யில் 125 போட்டிகளில் ஆடி 3,313 ரன் எடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டிகளில் 3,076 ரன் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடித்துள்ள ரோகித் டெஸ்டில் 14 அரை சதங்கள் மற்றும் 8 சதங்களையும் அடித்துள்ளார்.

ரோகித்தின் இந்த சாதனைகள் அனைத்தும் முறியடிக்க சற்று கடினமான சாதனைகள் ஆகும். இன்னும் சில ஆண்டுகள் ரோகித் விளையாட வாய்ப்புள்ளதால் மேலும் பல சாதனைகளை அவர் படைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வரும் இவ்வேளையில், அவரை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது ஐசிசி. அந்த வீடியோவில்  ரோகித் அடித்த சில அற்புதமான ஷார்ட் கொண்ட தொகுப்புகளை 3.33 நிமிடம் கொண்டு வீடியோவாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

இதையும் படிக்கலாம்: 'இழப்பதற்கு எதுவும் இல்லை': எழுச்சி பெறுமா மும்பை? - ராஜஸ்தானுடன் இன்று மோதல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com