'ஹெலிகாப்டர் ஷாட்' நாயகனுக்கு இன்று பர்த் டே!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, தனது 36ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள தோனியின் கிரிக்கெட் பயணத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.
நீளமான தலைமுடி, மட்டையை சுழற்றி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட், என சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த போதே ரசிகர்களின் நாயகனானார் தோனி. ஆட்டத்தில் அனல் பறந்தாலும் ஆடுகளத்தில் நிதானம் குறையாது நிற்கும் தோனியை கிரிக்கெட் வல்லுநர்களே வியந்து பார்த்தனர். தனது சிறப்பான ஆட்டத்தால் அணியில் நிரந்தர இடம் பிடித்தார்.
2007ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதற்கு பரிசாக தனது அணியை கோப்பையை வெல்ல வைத்தார். நிதானமாக முடிவுகளை எடுத்து பதற்றமில்லாமல் செயல்படுவதால் கூல் கேப்டன் என்றும் பெயரெடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிப்பயணத்தை தொடர்ந்த தோனி, மற்ற இந்திய கேப்டன்கள் நிகழ்த்தாத பல சாதனைகளை நிகழ்த்தினார். 2009 ஆண்டு, ஐ.சி.சி கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் விருதை அவர் வென்றார்.
2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக இந்திய அணியை, தரவரிசையில் முதலிடம் பெற வைத்தார் தோனி.
அதிரடியான அணியை நிதானமாக வழிநடத்தி, 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்று கொடுத்து வரலாற்றில் பெயர் பதித்தார். 5 உலகக்கோப்பைகளில் விளையாடிய சச்சினின் கனவை மெய்ப்படுத்திய பெருமை தோனிக்கே உண்டு.
2013ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதன் மூலம், ஐசிசி நடத்தும் 3 வகையான சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் தோனி.
கேப்டன் பதவியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி இருந்தாலும், தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு நெருக்கடியான தருணங்களில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் தோனி. ஸ்டம்பிங் செய்யும் வேகமும், ஹெலிகாப்டர் ஷாட்டும், தோனியின் தனித்துவ கிரிக்கெட் அடையாளமாக ரசிகர்களிடம் ஆழமாகப் பதித்துள்ளது.