டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?

டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி அடுத்த தகுதிச்சுற்று போட்டியை ஆட வேண்டியிருக்கும். இப்படியான நிலையில் நடைபெறும் இந்த முதல் தகுதிச்சுற்று போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் அணி எது?

சீசன் தொடங்குவதற்கு முன்பு பலவீனமான அணியாக தெரிந்தது குஜராத் டைட்டன்ஸ்தான். எக்கச்சக்க பாக்ஸ்கள் டிக் செய்யப்படாமல் ஒரு முழுமையற்ற அணியாகவே தெரிந்தது. ஆனால், அந்த பலவீனங்களையெல்லாம் தாண்டி அந்த அணிதான் முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் சீரற்ற ஒரு அணியாகவே பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் சில போட்டிகளை சிறப்பாக வெல்வார்கள். தொடர் செல்ல செல்ல அப்படியே தலைகீழாக மோசமாக தோற்று லீக் சுற்றோடு வெளியேறுவார்கள். இதுதான் ராஜஸ்தானின் வழக்கம். ஆனால், இந்த முறை அந்த கதையெல்லாம் இல்லை. பெரிதாக சறுக்கல்களை சந்திக்காமல் 9 போட்டிகளை வென்று லக்னோவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து ப்ளே ஆஃப்ஸூக்கு தகுதிப்பெற்றது.

டாஸிலிருந்தே தொடங்கிவிடுவோம். குஜராத்தை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு டாஸ் ஒரு பிரச்சனையே இல்லை. டாஸை தோற்றாலும் ஜெயித்தாலும் பேட்டிங்கோ ஃபீல்டிங்கோ எது கிடைத்தாலும் அசத்திவிடுவார்கள். ஆனால், ராஜஸ்தானின் நிலைமை அப்படியில்லை. அவர்களுக்கு டாஸிலிருந்தே பிரச்சனை ஆரம்பித்துவிடுகிறது. 14 லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ஆடியிருக்கிறதல்லவா? இந்த 14 போட்டிகளில் வெறும் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டுமே சஞ்சு சாம்சன் டாஸை வென்றிருக்கிறார். மீதமிருக்கும் 12 போட்டிகளிலுமே டாஸில் தோற்றுதான் போயிருக்கிறார். டாஸை வெல்லும் அணிகள் சேஸ் செய்யத்தான் விரும்பும் என்பதால் ராஜஸ்தான் அணி பெரும்பாலும் முதலிலேயே பேட்டிங் செய்திருந்தது.

14 போட்டிகளில் 11 போட்டிகளில் முதலில்தான் பேட்டிங் செய்திருக்கிறது. மூன்றே மூன்று போட்டிகளில்தான் சேஸிங்கே செய்திருக்கிறது. வென்றிருக்கும் 9 போட்டிகளில் 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த போதே வென்றிருக்கின்றனர். இதனால் ராஜஸ்தானுக்கு சேசிங் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். கடைசியாக சென்னைக்கு எதிரான போட்டியிலும் கொஞ்சம் முட்டி மோதிதான் 151 என்கிற சுமாரான டார்கெட்டை எட்டிப்பிடித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் குஜராத்தும் ராஜஸ்தானும் இதற்கு முன் மோதிய போட்டியிலும் ராஜஸ்தான் அணி டார்கெட்டை சேஸ் செய்ய முடியாமல்தான் தோற்றிருந்தது. ஒருவேளை குஜராத் டாஸை வென்றால் ராஜஸ்தானை சேஸ் செய்ய சொல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

குஜராத் அணி அதிகமான போட்டிகளை வென்றிருந்தாலும் டெத் ஓவர்களை தவிர்த்து முழுமையாக அதிரடியாக அந்த அணி ஆடியிருக்கவில்லை. இந்த சீசனில் குறைவான சிக்சர்களை அடித்திருக்கும் அணியும் குஜராத்தான். மேலும், இந்த சீசனில் ஆடியிருக்கும் 14 போட்டிகளில் ஒரு முறை கூட குஜராத் அணி 200 ரன்களை கடந்ததில்லை. அதிகப்பட்சமாக சன்ரைசர்ஸூக்கு எதிராக 195 ரன்களை சேஸ் செய்திருக்கிறார்கள். அதுவும் கடைசி பந்து வரை சென்று அசாத்தியங்களை நிகழ்த்தியே வென்றிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை ஒரு 200+ ஸ்கோரோடுதான் தொடங்கியது.

14 போட்டிகளில் 3 போட்டிகளில் 200 க்கும் அதிகமான ரன்களையும் எடுத்திருக்கின்றனர். பவர்ப்ளே மற்றும் 7-15 மிடில் ஓவர்கள் இந்த இரண்டு பகுதிகளிலுமே குஜராத்தின் ரன்ரேட் 8 க்கும் கீழ்தான் இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்களை எடுத்து டெத் ஓவர்களை கொஞ்சம் கிடுக்குப்பிடியாக வீசினால் ராஜஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகும். ஆனால், அதிலும் பிரச்சனை இருக்கிறது. ராஜஸ்தான் அணியின் டெத் ஓவர் ரன்ரேட் 11 க்கும் நெருக்கமாக இருக்கிறது. இதை கொஞ்சம் கட்டுப்படுத்தும் வகையில் வீசினால் சிறப்பாக இருக்கும்.

ராஜஸ்தான் 200+ ரன்களை எடுக்க வேண்டுமாயின் பட்லர் நன்றாக ஆடியாக வேண்டும். அவர் முதல் பாதியில் ஆடிய வேகத்தோடு இரண்டாம் பாதி சீசனில் ஆடியிருக்கவில்லை. முதல் 7 போட்டிகளில் 491 ரன்களை எடுத்தவர் அடுத்த 7 போட்டிகளில் 176 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். பட்லர் மீண்டும் அதிரடிக்கு திரும்பியே ஆகவேண்டும். அவருக்கு ஒத்துழைக்கும் வகையில் ஜெய்ஸ்வால், படிக்கல், சாம்சன் போன்றோர் ஆடியாக வேண்டும். அஷ்வின் சென்னைக்கு எதிராக மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடியிருந்தார். அதனால் அவரை நம்பர் 3 க்கு மீண்டு ப்ரமோட் செய்துவிடுகிறோம் என்கிற விபரீத முடிவையெல்லாம் சாம்சன் எடுத்துவிடக்கூடாது. அஷ்வின் போட்டிகளை வென்று கொடுப்பார். ஆன எல்லா போட்டிகளையும் வென்று கொடுப்பாரா என்பது சந்தேகமே. ஆகவே, சாம்சன் ரிஸ்க் எடுக்காமல் அவரே நம்பர் 3/4 இல் இறங்கி ஆட வேண்டும்.

பௌலிங்கை பொறுத்தவரைக்கும் ராஜஸ்தான் டெத் ஓவர்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி, பவர்ப்ளே மற்றும் மிடில் ஓவர்களில் போல்ட், பிரசித் கிருஷ்ணா, அஷ்வின், சஹால் ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர். அஷ்வின் மற்றும் சஹால் இருவரும் மட்டும் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். எக்கானமியும் 7 ஐ சுற்றித்தான் இருக்கிறது. ஏற்கனவே கொஞ்சம் மந்தமாக இருக்கும் குஜராத்தின் மிடில் ஓவர்களை இவர்கள் கூடுதலாக மந்தப்படுத்தினால் டெத் ஓவர்களில் அந்த அணிக்கு மேலும் அழுத்தம் ஏறும்.

குஜராத் அணியின் முதுகெலும்பாக ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். இந்த சீசனில் அந்த அணிக்காக அதிக ரன்களை அடித்திருக்கும் வீரர் அவர்தான். ஹ்ரித்திக்கின் விக்கெட் முக்கியமானதாக இருக்கும். ஹர்த்திக்கின் விக்கெட்டை வீழ்த்திவிட்டால் குஜராத்தை சரித்துவிடலாமா என்றால் அதுதான் இல்லை. பத்து தலை ராவணனாக அணியின் ஒவ்வொரு வீரருமே குஜராத் அணியின் வெற்றிக்காக முட்டி மோதுகிறார்கள். ஹர்திக்கால் வென்று கொடுக்க முடியவில்லையா மில்லர் வென்று கொடுப்பார். மில்லரால் முடியவில்லையா திவேதியா இருக்கிறார். திவேதியாவாலும் முடியவில்லையா ரஷீத்கான் இருக்கிறார். இதுதான் அந்த அணியின் பலம். குஜராத் அணி மிகச்சிறந்த அணியா என்றால் அதற்கு பதிலே கிடையாது. ஆனால், இது வெல்லக்கூடிய அணி. வெற்றிக்காக எந்த அசாத்தியத்தையும் நிகழ்த்தக்கூடிய அணி. யாருமே தலையெடுக்க முடியாதபடிக்கு மொத்தமாக வீழ்த்தினால்தான் குஜராத்தை வெல்ல முடியும். பௌலிங்கிலும் ரஷீத்கான், ஷமி, ஃபெர்குசன், சாய் கிஷோர் போன்ற முக்கியமான வீரர்கள் வலுவாக வீசிக்கொண்டிருக்கின்றனர்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. மழை குறுக்கிடலாம் எனவும் கூறப்படுகிறது. மழைப்பொழிவு மட்டும் இல்லையேல் ஒரு தரமான போட்டியை கண்டுகளிக்கலாம். தங்களின் பலவீனங்களை அதிகம் வெளிக்காட்டக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொள்ளாத அணி இந்த போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு செல்வது நிச்சயம்!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com