கடைசிநேரத்தில் மிரட்டிய ரஷித்.. சஞ்சு சாம்சன் செய்த ஒரே தவறு! வெற்றியின் பக்கம் இருந்து தோற்ற RR!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவுசெய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ்  - குஜராத் டைட்டன்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்முகநூல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவுசெய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதல் 4 போட்டிகளில் தோல்வியே அடையாமல் விளையாடுவதும், பின்னர் அடுத்தடுத்து ஒரு போட்டியில் வெற்றிபெறுவதற்கு கூட போராடுவதும், கடைசிவரை வெற்றிபெறுவது போல் சென்றுவிட்டு இறுதிபந்தில் தோற்பதும் என ஒவ்வொரு வருடமும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதை ஒருவேலையாகவே செய்துவருகிறது.

4 போட்டிகளில் விளையாடி ஒருபோட்டியில் கூட தோற்காத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 5 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின.

ராஜாஸ்தான் அணியின் சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ்வென்ற குஜராத் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். போட்டியில் மழை குறுக்கிட்டதால் சிறிதுநேரம் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது.

கேட்ச்சை கோட்டைவிட்ட மேத்யூ வேட்!

தொடக்கவீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் ஃபார்மில் இல்லாததால் ஒவ்வொரு பந்தும் விக்கெட் விழுவது போலவே விளையாடினர். அப்படிஇப்படி என 5 பவுண்டரிகளை விரட்டினாலும், ஒரு மோசமான ஷாட்டால் விக்கெட் கீப்பரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜெய்ஸ்வால். யஷஸ்வி வெளியேறியதும் ரசீத் கானுக்கு எதிராக ஒரு பவுண்டரி கூட அடிக்காத பட்லரை வெளியேற்ற, ரசீத்திடமே பந்தை கொடுத்து ஒரு சூப்பர் மூவ் செய்தார் குஜராத் கேப்டன் சுப்மன் கில்.

ரசீத் கானை எதிர்கொண்ட பட்லர் ரன்களை எடுக்கமுடியாமல் 3 பந்துகளை டாட் வைத்து டான்ஸ் ஆடினார், தொடர்ந்து தடுமாறிய அவர் 4வது பந்தில் கேட்ச் கொடுத்து எப்போதும் போல நடையை கட்டினார். அடுத்துவந்த ரியாக் பராக்கிற்கு எதிராகவும் ஒரு அற்புதமான டெலிவரியை ரசீத்கான் வீச, கைக்கு வந்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் (Wade) கோட்டைவிட்டார். அடுத்துவந்த இரண்டாவது கேட்ச்சையும் வேட் கோட்டைவிட, இரண்டு அற்புதமான வாய்ப்புகளுக்கு பிறகு நிதானமாக ஆடிய பராக் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் ரன்களை எடுத்துவந்தனர்.

ஸ்பின்னர்களுக்கு எதிராக சஞ்சு நின்றுவிளையாட, நூர் அகமதை அட்டாக் செய்த ரியான் பராக் சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி ரன்களை எடுத்துவந்தார். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியது. தொடர்ந்து 3 போட்டிகளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரியான் பராக் 48 பந்துகளில் 5 சிக்சர் 3 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 76 ரன்கள் எடுத்துவர, கடைசிவரை களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணியை 196 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார். 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ரசீத்கான் ராஜஸ்தான் அணியை 200 ரன்களுக்கு மேல் செல்லாமல் இழுத்துப்பிடித்தார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்திய குல்தீப் சென்!

197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய்சுதர்சன் மற்றும் கேப்டன் கில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். சுப்மன் கில் நின்று விளையாட 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய சாய்சுதர்சன் 35 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்துவந்த மேத்யூ வேட், அபினவ் மனோகர் இருவரையும் ஒரே ஓவரில் ஸ்டம்புகளை தகர்த்து வெளியேற்றிய குல்தீப் சென் கலக்கிப்போட்டார். முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை குஜராத் அணி சரியவிட, ஒருமுனையில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சுப்மன் கில் அதிரடிக்கு திரும்பினார்.

கடைசி 6 ஓவர்களுக்கு 87 ரன்கள் தேவையென போட்டிமாற, 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய சுப்மன் கில் ராஜஸ்தான் அணியின் ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் அனைவரையும் அட்டேக் செய்தார். ஒரு ஒவருக்கு 13 ரன்கள் என எடுத்துவந்த டைட்டன்ஸ் அணி, ஆட்டத்தில் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது. செம்ம டச்சில் இருந்த சுப்மன் கில் தனியாளாக போட்டியை முடித்துவிடும் எண்ணத்தில் பந்துகளை விரட்டிக்கொண்டிருக்க, 16வது ஓவரை வீசவந்த யஸ்வேந்திர சாஹல் கில்லை அவுட்டக்கி வெளியேற்றினார்.

சஞ்சு சாம்சன் செய்த அந்த தவறு..

கில் வெளியேறியதும் யார் ஸ்பின்னர்களை அடிக்கப்போகிறார்கள் என அடுத்த ஓவரில் அஸ்வினை கொண்டுவந்த சஞ்சு சாம்சன், போட்டியில் ஒரேயொரு தவறை செய்து மாட்டிக்கொண்டார். இம்பேக்ட் வீரராக களத்திற்கு வந்த சாருக் கான் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறந்த ஸ்டிரைக்கர் என்பதால், அஸ்வின் ஓவரில் சிக்சர் பவுண்டரி என பறக்கவிட, 17வது ஓவரில் 17 ரன்களை எடுத்துவந்தது டைட்டன்ஸ் அணி. என்னதான் அதிகரன்கள் கொண்ட ஓவர் என்றாலும் 18வது ஓவரை வீசவந்த சாஹல், சாருக்கானை வெளியேற்றியது மட்டுமல்லாமல் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கியது.

கடைசி 2 ஓவர்களுக்கு 35 ரன்கள் தேவையென போட்டி மாற, களத்தில் ரசீத்கான் மற்றும் திவேத்தியா இருவரும் இருந்தனர். முக்கியமான 19வது ஓவரை வீசிய குல்தீப் சென் அழுத்தத்தில் ஒரு மோசமான ஓவராக வீசினார், நோ-பால் வீசி சொதப்பிய குல்தீப் சென்-னை துவைத்தெடுத்த திவேத்தியா மற்றும் ரசீத் கான் இருவரும் 3 பவுண்டரிகளை விரட்ட 19வது ஓவரில் 20 ரன்களை எடுத்துவந்தது குஜராத் அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ்  - குஜராத் டைட்டன்ஸ்
"மரியாதையாக நடத்தும் வேறுஅணிக்கு ரோகித் சர்மா செல்வார்" - 2025 ஐபிஎல் வர்த்தகத்தை உறுதிசெய்த ராயுடு!

அவ்வளவுதான் கடைசி 6 பந்துக்கு 15 ரன்கள் என மாறியது போட்டி. கடைசிஓவரை வீசிய ஆவேஷ் கானுக்கு எதிராக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய ரசீத்கான் பவுலருக்கு அழுத்தம் போட்டார். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன்கள், ஒரு பவுண்டரி என விரட்டிய ரசீத்கான் கிட்டத்தட்ட போட்டியை முடித்தே விட்டார்.

கடைசி பந்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்ற ரசீத் கான்!

ஆனால் 4வது பந்தில் 1 ரன்னை மட்டுமே ஆவேஷ் கான் விட்டுக்கொடுக்க கடைசி 2 பந்துக்கு 4 ரன்கள் என போட்டி மாறியது. 5வது பந்தை பவுண்டரிக்கு தூக்கி அடித்த திவேத்தியா 2 ரன்களை முடித்துவிட்டு 3வது ரன்னுக்கு ஓடும்போது ரன் அவுட்டாகி வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது. கடைசி 1 பந்துக்கு 2 ரன்கள், ஸ்டிரைக்கில் ரசீத்கான் நிற்கிறார். டாட் பந்தாக வீசினால் ராஜஸ்தான் வெற்றி, 2 ரன்கள் அடித்தால் டைட்டன்ஸ் அணி வெற்றி, ஒருவேளை 1 ரன் எடுத்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற விறுவிறுப்பான கட்டத்திற்கு போட்டி மாறியது. ”கடைசில இப்படி மாறிடுச்சே போட்டி - ஒருவேள சூப்பர் ஓவர் வருமோ” என ரசிகர்கள் அனைவரும் சீட் நுனிக்கே செல்ல, களத்தில் ஸ்டெடியாக நின்ற ரசீத்கான் இறுதிபந்தை பவுண்டரிக்கு விரட்டி குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இறுதிவரை அனல்பறந்த ஆட்டமானது ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தது. பந்துவீச்சிலும் 4 ஓவரில் 18 ரன்கள் 1 விக்கெட் என வீழ்த்திய ரசீத் கான், பேட்டிங்கிலும் 11 பந்துகளுக்கு 24 ரன்கள் என விரட்டி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்  - குஜராத் டைட்டன்ஸ்
டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி இருப்பாரா? அஜித் அகர்கர் மறைமுக பதில்!

சாருக்கானுக்கு எதிராக அஸ்வினுக்கு பந்தை கொடுத்த சஞ்சுசாம்சன் கோட்டைவிட்டார், ஒருவேளை டிரெண்ட் போல்ட்டுக்கு அந்தஓவரை தந்திருந்தால் போட்டி ராஜஸ்தான் அணியின் பக்கம் சென்றிருக்கும். எப்போதும் ராஜஸ்தான் அணியின் பலமாக இருந்துவரும் அஸ்வின் மற்றும் சாஹல் இருவரும், இந்தப்போட்டியில் 83 ரன்கள் விட்டுக்கொடுத்தது போட்டியின் தோல்விக்கு காரணமாக மாறியது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வென்ற ராஜஸ்தான் அணி, தங்களுடைய முதல் தோல்வியை பதிவுசெய்தது. 3 போட்டிகளை வென்றிருக்கும் டைட்டன்ஸ் அணி, பிளே ஆஃப்க்கான ரேஸில் உத்வேகம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com