''ஐபிஎல் பாஸ் கேட்டேன்; மரியாதைக்குக் கூட பதில் இல்லை'' - டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனுக்கு வந்த கடிதம்!

''ஐபிஎல் பாஸ் கேட்டேன்; மரியாதைக்குக் கூட பதில் இல்லை'' - டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனுக்கு வந்த கடிதம்!
''ஐபிஎல் பாஸ் கேட்டேன்; மரியாதைக்குக் கூட பதில் இல்லை'' - டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனுக்கு வந்த கடிதம்!

ஐபிஎல் பாஸ் பெற முயற்சித்தபோது முறையாக பதிலளிக்காமல் நிர்வாக உதவியாளர் தன்னை அலைக்கழித்ததாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் தலைவருக்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 30-ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்போட்டிக்கான பாஸ் பெற முயற்சித்தபோது முறையாக பதிலளிக்காமல் நிர்வாக உதவியாளர் தன்னை அலைக்கழித்ததாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் தலைவருக்கு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணை செயலாளர் கோபால் கிருஷ்ணன் குப்தா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ கடந்த 30-ஆம் தேதி கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற இருந்தது. இதற்கான பாஸ் பெற கடந்த 29-ஆம் தேதி தங்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். தங்களது நிர்வாக உதவியாளரான சப்னா சோனி இது குறித்து என்னிடம் பேசினார். பாஸ் எனக்குத் தான் வேண்டுமா..? இல்லை வேறு ஏதும் சிறப்பு விருந்தினருக்கு வேண்டுமா எனக் கேட்டார். அதன்மூலம் எந்தவகையான இருக்கை ஒதுக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியும் என தெரிவித்தார். என்னுடைய வீட்டு முகவரியையும், என்னுடைய முதன்மை தனிச் செயலாளரின் தொலைபேசி எண்ணையும் பெற்றுக்கொண்டார்.

அதன்மூலம் பாஸ் வீடு தேடி டெலிவரி செய்யப்படும் என்றார். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம்.  அதன்பின் உங்கள் அலுவலகத்தில் இருந்தும், சப்னா சோனியிடம் இருந்தும் எந்த பதிலும் இல்லை. ஐபிஎல் பாஸ் வந்துசேரவும் இல்லை. ஐபிஎல் போட்டி நடைபெற இருந்த அன்று மதியம் 12 மணிக்கு என்னுடைய முதன்னை தனிச் செயலாளர் மீண்டும் பாஸ் தொடர்பாக தொடர்பு கொண்டார். அப்போதுதான் பாஸ் இல்லை என்று அங்கிருந்து பதில் வருகிறது.

இந்த முழு விவரத்தை தங்களிடம், நிர்வாக உதவியாளர் தெரிவித்தாரா..? இல்லையா என்பது எனக்கு தெரியாது. நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், உங்கள் அலுவலர்கள் சரியான நேரத்தில் மரியாதை நிமித்தமாக பதில் அளிக்க வேண்டும் என்பதைதான். நாம் வகிக்கும் பதவிகளுக்கு பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும் என கருதுகிறேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com