கூகுள் டூடுலில் 140வது ஆண்டு விம்பிள்டன் போட்டிகள்
இன்றைய கூகுள் டூடுல் 140வது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ஜூன் 9, 1877 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுடன் 140 வது ஆண்டினை நிறைவு செய்கிறது. இதைக் கொண்டாடும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது கூகுள்.
பச்சைப்பசேல் பின்னணியில், இரண்டு டென்னிஸ் ராக்கெட்டுகள் விளையாடும் அனிமேஷனுடன், கூகுளின் 'எல்' என்னும் எழுத்து அம்பயராக வடிவமைக்கப்பட்டிருக்க, மற்ற எழுத்துக்கள் பார்வையாளர்களாக அமர்ந்து போட்டியை ரசிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
2017 விம்பிள்டன் போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், இன்று முதல் ஜூலை 16 ஆம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது. இன்றைய தொடரில் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர், உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் டோல்கபோலோவை எதிர்கொள்ள இருக்கிறார்.
முன்னணி வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா ஆகியோர் போட்டிகளில் பங்கேற்காததால், பெண்கள் பிரிவில் வெல்லப்போவது யார் என்னும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ரோஜர் ஃபெடரர் இந்தத் தொடரில் வெற்றி பெற்றால், அது ஃபெடரரின் 8வது விம்பிள்டன் பட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரிட்டனின் ஆண்டி முர்ரே தனது டைட்டிலை தக்கவைத்துக்கொள்ள கசகஸ்தானின் அலெக்சாண்டர் புப்ளிக்கை எதிர்த்து இன்று களமிறங்குகிறார்.