பேட்டிங்கில் மிரட்டுவார் தோனி: பந்துவீச்சு பயிற்சியாளர் நம்பிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, விரைவில் பேட்டிங்கில் மிரட்டுவார் என்று பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித் தார்.
விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கலக்கும் தோனி, பேட்டிங்கில் கடந்த சில மாதங்களாகத் தடுமாறி வருகிறார். அவரது பேட்டிங் செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதுவும் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் சில முன் னாள் வீரர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
‘அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பைக்கு தோனி கட்டாயம் தேவை. விராத் கோலிக்கு களத்தில் தோனியின் ஆலோசனை தேவை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. 50 ஒவர் கிரிக்கெட்டில் செட்டில் ஆகி ஆடுவதற்கு கால அவகாசம் இருப்பதால் தோனி இங்குதான் முக்கியமான வராகத் திகழ்கிறார்’ என்கிறார் கவாஸ்கர்.
இந்த வருடம் 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி எடுத்த மொத்த ரன்கள் 275 மட்டுமே. இதனால் அவர் தனது ஆக்ரோஷ பேட்டிங்கை மீண்டும் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும்போது, ‘தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான். அவரது திறமை என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.
அவர் பல முறை தன்னை நிரூபித்திருக்கிறார். அவர் அனுபவமுள்ள வீரர். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்க வேண்டும். கண்டிப்பாக அசத்தலாக மிரட்டுவார்’ என்றார். அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது நன்றாக பந்துவீசுகிறார். அவர் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருவார்’ என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.