உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஜெர்மனி அணிக்கு10-வது வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ஜெர்மனி அணி தொடர்ந்து 10 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அசர்பைஜான் அணிக்கு எதிரான தகுதிச் சுற்றில் ஜெர்மனி அணி ஐந்துக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது.
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதியை ஏற்கனவே உறுதி செய்திருந்த ஜெர்மனி அணியில், தனது பிரிவில் 30 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. F பிரிவுக்கான தகுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி 8 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்தது. இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் லித்வேனியா அணியை ஒன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. 15 புள்ளிகளுடன் ஐந்தாவது இடம் பிடித்த லித்வேனியா அணி, உலகக்கோப்பைக்கான தகுதியை இழந்தது.
மற்றொரு உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் வடக்கு அயர்லாந்து அணி ஆறாவது வெற்றியைப் பதிவு செய்தது. கடைசி லீக் போட்டியில் வடக்கு அயர்லாந்து அணி ஒன்றுக்கு-பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் நார்வே அணியை வென்றது. சி பிரிவில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடித்ததால், வடக்கு அயர்லாந்து அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெற மேலும் ஒரு வாய்ப்புள்ளது. அடுத்ததாக பிளே ஆப் சுற்றில் அந்த அணி விளையாடவுள்ளது.

