கிறிஸ் கெய்ல் எனும் புயல் !

கிறிஸ் கெய்ல் எனும் புயல் !

கிறிஸ் கெய்ல் எனும் புயல் !
Published on

உலகக் கோப்பை தொடருக்குப் பின், ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். இந்நிலையில் யார் இந்த கிறிஸ் கெய்ல் என்று பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல். கிறிஸ் கெய்ல் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது அதிவேக ஆட்டமும், பலமான தோற்றமும் தான். ஜமைக்காவை பூர்வீகமாகக் கொண்ட கெய்ல் தனது அதிரடியால், உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர். இவர் இடது கை ஆட்டக்காரர். பந்தை லாவகமாக பவுண்டரிகளுக்கு திருப்பி அனுப்புவதில் வல்லவர். கெய்ல் தனது முதலாவது சர்வேதச கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகத் தான் விளையாடினார். 1999-ஆம் ஆண்டு கெய்ல் அறிமுக வீரராக இந்தியாவிற்கு  எதிராக டொராண்டோ நகரில் நடந்த ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரானார் கிறிஸ் கெய்ல்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 284 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 23 சதங்களுடன் 9 ஆயிரத்து 727 ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் 165 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். குறிப்பாக கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் போட்டியில் இவரது ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்றது. இவர் தனது அதிரடி ஆட்டத்தை ஒரு நாள் போட்டியில் மட்டும் காட்டாமல் டெஸ்ட் போட்டிகளிலும் காட்டியுள்ளார். குறிப்பாக கடந்த 2004-ஆம் ஆண்டு கேப்டவுனில்  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 79 பந்துகளில் சதமடித்து தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்தார். அதேபோல் தன்னுடைய பொறுப்பான ஆட்டத்தால் 2009-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏழரை மணி நேரம் நின்று விளையாடி 165 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோல்வியிலிருந்து மீட்டார். 

அதற்குபின் 2010-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 10 மணி நேரம் நின்று விளையாடி இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்து 333 ரன்கள் எடுத்தார். அதிலிருந்து கெயில் தாம் விளையாடும் போட்டிகளில் 333 என்ற எண்ணைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் உடையை அணிந்து வருகிறார்.

இதேபோல டி20 போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டி20 கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் முதல் சதத்தை அடித்தவர் கிறிஸ் கெய்ல் தான். இந்த சாதனையை அவர் 2007-ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் படைத்தார். அந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அவர் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 57 பந்துகளில் 117 ரன்கள்  விளாசினார். 


 
அதற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முடிசூடா மன்னனாக கிறிஸ் கெய்ல் வலம் வந்தார். இதுவரை 56 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 2 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களுடன் 1607 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் மட்டுமில்லாது இந்தியாவில் மிகவும் பெரிதாக ரசித்து பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிகளிலும், கிறிஸ் கெய்ல் அதிரடி காட்டியுள்ளார். 2013-ஆம்  ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசி சின்னசாமி மைதானத்தை அதிரவைத்தார். 

ரசிகர்களால் 'Gayle Storm' என்று அழைக்கப்படும் கெய்லின் ஆட்டம் ஒருநாள் போட்டிகளில் முடிவுக்கு வர இருந்தாலும் அவர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com