’ராஞ்சி ஸ்டேடியத்துக்கு தோனி பெயர்’: கவாஸ்கர் கோரிக்கை
ராஞ்சி கிரிக்கெட் மைதானத்துக்கு எம்.எஸ்.தோனியின் பெயரை வைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியை வர்ணனை செய்துவரும் கவாஸ்கர், இந்த மைதானத்துக்கு தோனி பெயரை வைக்க வேண்டும் என்று ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு கோரிக்கை வைத்தார்.
ராஞ்சியை கிரிக்கெட் வரைபடத்துக்குள் கொண்டு வந்தவர், தோனி. அதோடு பிரபலமான கிரிக்கெட் வீரர். ஜார்கண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற பிரமுகர் அவர். கிரிக்கெட்டிலும் பல சாதனைகளை செய்திருக்கிறார். இந்த மைதானத்துக்கு அவர்
பெயர் வைப்பது மிகவும் பொருத்தமானது. அதற்கு தகுதியானவர் தோனி என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ராஞ்சி மைதானத்தின் ஒரு பெவிலியனுக்கு தோனி பெயர் சூட்டப்பட்டுள்ளது. மொத்த ஸ்டேடியத்துக்குமே தோனி பெயரை வைக்க வேண்டும் என்று கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.