ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா- ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த எலிமினேட்டர் சுற்று ஆட்டம் மழை காரணமாக நள்ளிரவு 1 மணிக்கு மேல் தொடர்ந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘இந்த ஆட்டம் முடிய அதிகாலை 1.27 மணி ஆகி விட்டது. ரசிகர்களை அதிகாலை வரை மைதானத்தில் அமர வைத்திருந்தது சரியான நடவடிக்கை அல்ல. மழை தொடர்பான விதிமுறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஐ.பி.எல். நிர்வாகம் சிந்திக்க வேண்டும். 10 ஆண்டுகள் ஐ.பி.எல். போட்டிகள் நடந்துள்ள நிலையில், இனி வரும் சீசன்களில் மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களில் பயன்படுத்தும் விதிமுறையை மாற்றி அமைக்க வேண்டும். வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அதை மாற்ற கமிட்டி அமைக்கலாம்’ என்று கூறியுள்ளார்.