விலகினார் கம்பீர் ! டெல்லி அணிக்கு புதிய கேப்டன் !
ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கவுதம் கம்பீர், அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
2018 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி கேப்டனாக நியமிக்கப்பட்டவர் கவுதம் கம்பீர். கடந்த கால ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர், 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அந்த அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்தார். ஆனால் இந்தமுறை டெல்லி அணியால் ஏலத்திற்கு எடுக்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் சொதப்பி வந்தார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி அவற்றில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தையே பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கம்பீர் “ டெல்லி அணி தற்போது உள்ள நிலைக்கு நான் முழுப் பொறுப்பை ஏற்கிறேன். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். இது எனது தனிப்பட்ட முடிவு. இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், அணியை வழிநடத்துவார். மேலும் டெல்லி அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையும் உள்ளது” என தெரிவித்தார்.