'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனியின் பேட்டிங் திறன் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், ஆசியக் கோப்பை போட்டியிலும் தோனியின் பேட்டிங் எடுபடவில்லை. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இப்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.
முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியை நேற்று அறிவித்தது பிசிசிஐ. அதில், தோனியுடன் மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தோனிக்கு வைக்கப்பட்ட "செக்" ஆகவே பார்க்கப்படுகிறது. 2019 ஆம் உலகக் கோப்பை போட்டிக்கு செல்லும் அணியில் விக்கெட் கீப்பர்க்கான இடத்தில் தோனிதான் முதல் சாய்ஸ் என அணி தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்.
ஆனால், தோனியின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருவதால் இப்போது ரிஷப் பன்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரர் கவுதம் காம்பீர் " இந்திய அணிக்காக யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களே அணியில் தொடர்ந்து இடம்பிடிக்கலாம். சிறப்பாக விளையாடுவதற்கு வயது ஒரு தடையே இல்லை. எனக்கு நன்றாக தெரியும் தோனி அசத்தலாக விளையாடவும், தன் பேட்டிங் திறனை நிரூபிக்கவும் காத்துக்கொண்டு இருக்கிறார். அதன் மூலம் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளியும் வைப்பார்".
மேலும் தொடர்ந்த காம்பீர் " ஏற்கெனவே தினேஷ் கார்த்திக்கு தேவையான வாய்ப்புகளை வழங்கிவிட்டோம். இப்போது பன்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர் திறமையை நிரூபிப்பார். பின்பு யார் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்பதை காலம் பதில் சொல்லும்" என கூறியுள்ளார் அவர்.