ரணதுங்காவின் மேட்ச்பிக்ஸிங் குற்றச்சாட்டு… காம்பீர், நெஹ்ரா தாக்கு
இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச்பிக்ஸிங் செய்யப்பட்டதாக ரணதுங்கா கூறுவது அடிப்படை ஆதாரமற்ற புகார் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களான கவுதம் காம்பீர் மற்றும் ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய காம்பீர், கிரிக்கெட் உலகின் முக்கியமான புள்ளியாகக் கருதப்படும் ரணதுங்கா இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல் எழுப்பக் கூடாது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் பொதுவெளியில் எடுத்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் காம்பீர்.
அதேபோல 2011 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஆசிஷ் நெஹ்ரா கூறுகையில், இதுபோன்ற கருத்துகளை நாம் காதுகொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை. ரணதுங்காவின் குற்றச்சாட்டுகளுக்கு மதிப்புக் கொடுத்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. 1996ல் இலங்கை அணி கோப்பை வென்றது குறித்து நான் கேள்வி எழுப்புவது சரியாக இருக்குமா?. அதேநேரம் ரணதுங்கா போன்றவர்களிடமிருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது வருத்தமளிக்கக் கூடியதாகவே இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டதாக 1996ல் உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியின் கேப்டனாக இருந்த ரணதுங்கா குற்றம்சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.