கெய்க்வாட், சுப்மான் கில் விளாசல்: பணிந்தது வெஸ்ட் இண்டீஸ் ஏ!
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி அபாரமாக வெற்றி பெற்றது.
மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று வந்தது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய ஏ அணி, தொடரை கைப்பற்றிவிட்டது. ஆனால் நான்காவது ஒரு நாள் போட்டியில் 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் ஐந்தாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணி, 47.4 ஓவரில் 236 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக, ரூதர்போர்ட் 65 ரன்னும் அம்பரிஸ் 61 ரன்னும் எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில் தீபக் சாஹர், ராகுல் சாஹர், சைனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி, 33 ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்து 237 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய ஏ அணி கைப்பற்றியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ரிதுராஜ் கெய்க்வாட் 89 பந்துகளில் 99 ரன்னும் சுப்மான் கில், 40 பந்துகளில் 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 61 ரன்னுடனும் மணீஷ் பாண்டே 7 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர். ரிதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.