சிஎஸ்கே VS கொல்கத்தா: கவனிக்க வேண்டிய 5 மேட்ச் வின்னர்கள்

சிஎஸ்கே VS கொல்கத்தா: கவனிக்க வேண்டிய 5 மேட்ச் வின்னர்கள்
சிஎஸ்கே VS கொல்கத்தா: கவனிக்க வேண்டிய 5 மேட்ச் வின்னர்கள்
14 -வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகுடம் சூடப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் பிரமாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரு முறையும் வீழ்த்தியுள்ளது. தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 9-வது ஐபிஎல் இறுதிப்போட்டி இது. கொல்கத்தா அணிக்கு இது ஐபிஎல்லில் 3-வது இறுதிப்போட்டி. கொல்கத்தா அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. சென்னை அணி 3 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.
ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளிலும் சேர்த்து 5 மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
வெங்கடேஷ் ஐயர்
நடப்பு ஐபிஎல் தொடரின் முதலாவது பாதியில் 7 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணியானது 2 வெற்றிகளை மட்டுமே பெற்று பின்தங்கியிருந்தது. இச்சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கிய இரண்டாவது பாதியில் வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி ஓப்பனராக களமிறக்கியது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட வெங்கடேஷ் ஐயர், 9 போட்டிகளில் 40 ரன்கள் சராசரியுடன் 320 ரன்கள் குவித்து மிரட்டலாக விளையாடி வருகிறார். மேலும் இதில் அவர் 3 அரை சதங்களையும் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 26 வயதான ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதுமட்டுமின்றி பந்து வீச்சிலும் அசத்த கூடியவராக இருக்கிறார்.
ருதுராஜ் கெய்க்வாட்
நடப்பு ஐபி­எல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி­யின் புதிய நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக உரு­வெ­டுத்­துள்­ளார் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட். ப்ளே-ஆஃப் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 70 ரன்களை விளாசிய ருதுராஜ், அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு நிறுத்திவிட்டு ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடர்களில் ஒரே சீசனில் 600 ரன்களுக்கும் மேல் விளாசிய மூன்றாவது சிஎஸ்கே வீரர் என்ற சாதனையை ருதுராஜ் நிகழ்த்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் 13 போட்டிகளில் 626 ரன்களுடன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் முதலிடம் வகித்து ஆரஞ்சு தொப்பியை பெற்றுள்ளார். ராகுலுக்கு அடுத்தபடியாக ருதுராஜ் 15 ஆட்டங்களில் ஆடி 603 குவித்துள்ளார். இன்றைய போட்டியில் ருதுராஜ் ஆரஞ்சு தொப்பியை நிச்சயம் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்எஸ் தோனி
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் ஆட்டத்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது சிஎஸ்கே அணி. கடைசிக்கட்டத்தில் ஜடேஜாவுக்கு முன்பு களமிறங்கிய தோனி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறக்க முடியாத வெற்றியை அளித்தார். இந்த ஆட்டத்தின் மூலம் சிறந்த 'பினிஷர்' என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி அடுத்த வருட ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல்கள் பரவிவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஐபிஎல் கோப்பையை வென்று கம்பீரமாக விடைபெற முயற்சிக்கலாம்.
ராகுல் திரிபாதி
கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் மிடில் ஆர்டர் வரிசையில் நம்பிக்கை நாயகனாக வலம் வருபவர் ராகுல் திரிபாதி. இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணிக்கு இறுதியில் 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலை நேர்ந்தது. அவ்வேளையில் 5வது பந்தில் எளிதாக சிக்சர் அடித்து ராகுல் திரிபாதி கொல்கத்தா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இன்றைய போட்டியிலும் ராகுல் திரிபாதி சிறப்பாக சோபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால சுழற்பந்துவீச்சு, இன்றைய சிஎஸ்கே அணிக்கெதிரான இறுதி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசையை உருக்குலைக்க அவர் முயற்சிக்கக் கூடும். வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் மிடில் ஸ்டெம்பை நோக்கி வரும் பந்து எந்தப் பக்கம் செல்லும் என அறியாவிடாமல் பேட்ஸ்மேன்களை குழப்புவதில் வித்தகர். நடப்பு ஐபிஎல் தொடரில் 16 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை கைப்பற்றி, சிறப்பான எகானமி ரேட்டை வைத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com