'ரெட் டெவில்ஸ்'க்கு தண்ணி காட்டிய பிரான்ஸ் ! இறுதிக்கு முன்னேறியது
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஷ்யாவில் 21 ஆவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக், நாக் அவுட் மற்றும் காலிறுதிப் போட்டிகள் முடிவடைந்து அரையிறுதிக் கட்டத்தை இப்போது எட்டியுள்ளது. அரையிறுதிப் போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா அணிகள் தகுதிப் பெற்றன. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று இரவு 11.30 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது.
இதில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் தோல்வியை சந்திக்கவில்லை என்பதால் ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காலிறுதியில் உருகுவே அணியை வீழ்த்திய தெம்பில் பிரான்ஸும், பிரேசில் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் பெல்ஜியம் அணியும் களம் கண்டது.
இந்நிலையில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தின் தொடக்கம் முதலே பரபரப்பு நிலவியது. பிரான்ஸ் - பெல்ஜியம் அணியினர் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் இருந்தது.
அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதனை சமன் செய்ய பெல்ஜியம் அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதிவரை பெல்ஜியம் அனியினரால் கோல் அடிக்க முடியவில்லை.
இதன்மூலம் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மேலும் இன்று இரவு இங்கிலாந்து - குரோஷியா அணிகள் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் வெற்றிப் பெறும் அணி, இறுதி ஆட்டத்தில் பிரான்ஸை எதிர்கொள்ளும்.