தொடர்ச்சியாக நான்காவது தோல்வி.. சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?.. தேடலும் எச்சரிக்கையும்!!

தொடர்ச்சியாக நான்காவது தோல்வி.. சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?.. தேடலும் எச்சரிக்கையும்!!
தொடர்ச்சியாக நான்காவது தோல்வி.. சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?.. தேடலும் எச்சரிக்கையும்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியையும் தோற்றிருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வி இது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே சிஎஸ்கே இத்தனை மோசமாக ஒரு சீசனை தொடங்கியதில்லை. சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?

சிஎஸ்கேவின் முந்தைய தோல்விகளின் போது என்ன காரணங்கள் கூறப்பட்டதென நினைவிருக்கிறதா? டாஸில் தோற்றுவிட்டோம். முதலில் பேட் செய்துவிட்டோம். ஸ்கோரை டிஃபண்ட் செய்ய வேண்டியதாயிற்று. பனியின் தாக்கம் அதிகமிருக்கிறது என சுற்றி முற்றி சூழல்களின் மீது அத்தனை பழியும் போடப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து இந்த சாக்குபோக்குகளெல்லாம் அம்பலப்பட்டு சிஎஸ்கேவின் உண்மையான பிரச்சனைகள் வெளிப்பட தொடங்கியது.

டாஸை வென்ற போதும் முதல் பேட்டிங்கை தவிர்த்து ஸ்கோரை சேஸ் செய்த போதும், ஏன் சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்த போட்டியில் பனியின் தாக்கமே இல்லாத மாலைப்பொழுதில் இரண்டாவதாக பந்துவீசி ஸ்கோரை டிஃபண்ட் செய்ய முயன்ற போதும் கூட சிஎஸ்கே தோற்றிருக்கிறது. ஆக, சூழலையெல்லாம் ஒரு பொருட்டாக கூறுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனில், உண்மையான பிரச்சனைதான் என்ன?

உண்மையான பிரச்சனை சிஎஸ்கேவின் பவர்ப்ளே செயல்பாட்டில் இருக்கிறது. பேட்டிங் பவர்ப்ளே ஆகட்டும், பௌலிங் பவர்ப்ளே ஆகட்டும் இரண்டிலுமே சிஎஸ்கே சொதப்புகிறது. அந்த சொதப்பல் வாடிக்கையாக ஒவ்வொரு போட்டியிலும் தொடரவும் செய்கிறது. சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்த போட்டியிலும் கூட முதலில் பேட்டிங் செய்தபோது சிஎஸ்கே பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை இழந்தே 41 ரன்களை எடுத்திருந்தது. ஓப்பனர்களான ருத்துராஜ் கெய்க்வாட்டும் ராபின் உத்தப்பாவும் மீண்டும் ஒரு முறை சொதப்பியிருந்தனர். நான்காவது போட்டியிலிருந்து அடிப்பார் என நம்பப்பட்ட ருத்துராஜால் நடராஜனின் ஒரு துல்லியமான யார்க்கரை சமாளிக்க முடியவில்லை. ருத்துராஜ் சொதப்பும் பட்சத்தில் நின்று அடிக்க வேண்டிய உத்தப்பா அவருக்கு முன்பாகவே ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரின் பந்தில் வட்டத்திற்கு வெளியே இருக்கும் இரண்டே இரண்டு ஃபீல்டர்களை தேடி கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். தோனியும் ஜடேஜாவும் எப்போதும் எல்லா போட்டியிலும் விரும்பும் அந்த தொடக்க மொமண்டம் இந்த போட்டியிலும் கிடைக்கவில்லை.

பௌலிங்கிலும் அதே கதைதான். இதுவரை ஆடியிருந்த மூன்று போட்டிகளில் பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே சிஎஸ்கேவின் பௌலர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். ரன்களையும் வாரி வழங்கியிருக்கிறார்கள். இந்த போட்டியிலும் அதே சொதப்பல் தொடர்ந்தது. புதிதாக அணிக்குள் வந்திருக்கும் மஹீஸ் தீக்சனா, முகேஷ் சௌத்ரி, ஜோர்டன் மூவருமே பவர்ப்ளேயில் வீசியிருந்தனர். மூவராலுமே விக்கெட்டை வீழ்த்தியிருக்க முடியவில்லை. கேன் வில்லியம்சனும் அபிஷேக் சர்மாவும் சேர்ந்து பவர்ப்ளேயில் 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தாலும் நன்றாக செட் ஆகிவிட்டார்கள்.

கேன் வில்லியம்சன் - அபிஷேக் சர்மா இந்த கூட்டணி இந்த சீசனில் இதுவரை ஃபார்முக்கு வராமலேயே இருந்தது. ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இருவரும் இணைந்து 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். லக்னோவிற்கு எதிரான போட்டியில் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ஆனால், இந்த கூட்டணி சென்னைக்கு எதிரான இந்த போட்டியில் 89 ரன்களை எடுத்திருந்தது. 155 ரன்களை சேஸ் செய்யும்போது தொடக்கக்கூட்டணியே 60% ரன்களை எந்த சிரமமும் இல்லாமல் எடுத்தால் என்ன ஆகும்? பந்துவீசும் அணி 17.4 ஓவர்களிலேயே தோல்வியை தழுவும்.

கேன் வில்லியம்சன் டெஸ்ட் மேட்ச்சை போன்று ஆடியதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால், அந்த அணிக்கு அதுதானே தேவைப்பட்டது? தொடக்கத்தில் விக்கெட்டுகளை விடக்கூடாது. அதற்காக ரிஸ்க் எடுக்காமல் ஆட வேண்டும். அப்படி ஆடுவதற்கான சௌகரியத்தை வில்லியம்சம்சிற்கு சிஎஸ்கேவின் 154 ரன்கள் என்கிற சுமாரான டார்கெட் வழங்கியிருந்தது. இன்னொரு முனையில் ஆடிய அபிஷேக் சர்மா வேகமாக ஆடி 75 ரன்களை அடித்து ரன்ரேட்டை சமாளித்துவிட்டார். மொத்தத்தில் நம்பிக்கையளிக்கும் வகையில் ஒரு பெர்ஃபார்மென்ஸை கொடுத்து சன்ரைசர்ஸ் சரிவிலிருந்து மீண்டிருக்கிறது.

பேட்டிங்-பௌலிங் இரண்டிலுமே தொடக்கம் சரியாக அமையாமல் போனால் என்ன ஆகும் என்பதையே சிஎஸ்கே காட்டி கொண்டிருக்கிறது. முதல் கோணல் முற்றும் கோணலாக மாறாமல் இருக்கும் வகையில் அடுத்தடுத்த வீரர்களாலும் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை. தோல்வியும் தொடர்கிறது. ஒவ்வொரு போட்டிக்கு பிறகும், அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக் கொள்ள முயலுவோம். கம்பேக் கொடுப்போம் என 'கேப்டன்' ஜடேஜா கூறுகிறார். ஆனால், அந்த கம்பேக் நிகழ்ந்த மாதிரியே இல்லை.

'ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் ஒவ்வொரு சாக்குபோக்குகளை சொல்லிக்கொண்டிருந்தால், நீங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் பல போட்டிகளை தோற்றிருப்பீர்கள். தொடரை விட்டே வெளியேறியிருப்பீர்கள்' இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியது இது. 2020 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி ஒன்றிரண்டு போட்டிகளில் தோற்றிருந்த போது, போட்டிக்கு பிறகான நிகழ்ச்சி ஒன்றில் பீட்டர்சன் சென்னையை குறிப்பிட்டு இப்படி பேசியது இன்னமும் அப்படியே காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பீட்டர்சன் சொன்னதை போன்றுதான் அந்த சீசனில் நடந்திருந்தது. ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் தோனி ஒவ்வொரு காரணமாக கூறிக்கொண்டே இருந்தார். தோல்விகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. சிஎஸ்கே ப்ளே ஆஃப்ஸுக்கு கூட தகுதிப்பெறாமல் வெளியேறியது.

அந்த 2020 சீசன்தான் மீண்டும் தொடர்வதாக ரசிகர்கள் பலரும் வருந்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிஎஸ்கேவின் அந்த 2020 சீசன் சொதப்பலையும் இந்த சீசனில் சென்னை அணியின் சொதப்பலையும் ஒரே தட்டில் வைத்து அளவிட முடியுமா என்பதே குழப்பமான விஷயம்தான்.

ஏனெனில், அந்த 2020 சீசனில் சென்னைக்கு என்ன பிரச்சனை என்பதே புரிபடாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் பிரச்சனை வெளிப்பட்ட பிறகு அதற்கான தீர்வை நோக்கி செல்வதில் தோனியே சுணக்கம் காட்டியிருந்தார். எழுந்து ஓடவே மறுத்த கேதார் ஜாதவ் போன்ற குதிரைகளை பந்தயத்திற்கு அழைத்து சென்றதெல்லாம் இந்த வகையில்தான் வரும். ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பு முழுமையாக மங்கிய பிறகே தோனி பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி நகர்ந்தார். ருத்துராஜ் போன்ற வீரர்கள் அணிக்குள் வந்திருந்தனர்.

இந்த சீசனில் நிலைமை அப்படியில்லை. தொடக்கத்திலேயே சிஎஸ்கேவிற்கு என்ன பிரச்சனை என்பது தெரிந்துவிட்டது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே தீபக் சஹார் இல்லாததால் பவர்ப்ளேயில் சிக்கலை சந்திக்கப்போகிறோம் என்பதை சிஎஸ்கே உணர்ந்திருந்தது. பேட்டிங்கில் ருத்துராஜையே பெரிதாக நம்பியிருக்கிறோம் என்பதும் அறிந்ததே.

பிரச்சனைகள் என்ன என்பதை உணர்ந்த பிறகு அவற்றுக்கான தீர்வை தேடியும் சிஎஸ்கே நகர்ந்திருக்கிறது. துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி என அடுத்தடுத்து பவர்ப்ளேயில் தீபக் சஹாரின் இடத்தை நிரப்பும் பொருட்டு இளம் பௌலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் சொதப்பிய சமயத்தில் நன்றாக ஆடிய ப்ரெட்டோரியஸை ட்ராப் செய்துவிட்டு பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட்டான மஹீஸ் தீக்சனாவே உள்ளே கொண்டு வந்தனர். பேட்டிங்கிலும் ருத்துராஜுக்கு ஒத்துழைக்கும் வகையில் உத்தப்பாவை அவருக்கு விருப்பப்பட்ட ஓப்பனிங் ஸ்பாடிலேயே இறக்கியிருக்கிறார்கள்.

ஆக, 2020 சீசனை போல அல்ல. இந்த சீசனில் சிஎஸ்கேவிற்கு என்ன பிரச்சனை என்பதை தொடக்கத்திலேயே உணர்ந்திருக்கிறார்கள். அதற்கான தீர்வை நோக்கியும் நகர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தீர்வாக முன்வைப்பது உண்மையிலேயே சரியான தீர்வாக இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வி. இளம் வீரர்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை என்பது சிஎஸ்கே மீதான குற்றச்சாட்டு. ஆனால், வாய்ப்பை பெற்ற துஷார் தேஷ்பாண்டேவும் முகேஷ் சௌத்ரியும் தீக்சனாவும் என்ன செய்திருக்கிறார்கள்?

ஆனால், இப்படி ஒருதரப்பை கைநீட்டி கேள்வி கேட்பதிலும் ஞாயம் இல்லை. ஏனெனில், சென்னை ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வரும் இளம் வீரர்களுக்கெல்லாம் பெரும்பாலும் இந்த சீசன் தான் அறிமுக சீசனாக இருக்கிறது. அவர்கள் மீது அளவுக்கு அதிகமான பொறுப்பை தூக்கி வைப்பது சுமையாகவே மாறும். தீபக் சஹார், ருத்துராஜ் என ஒன்றிரண்டு வீரர்களை மட்டுமே நம்பியிருக்கும் வகையிலான அணிக்கட்டமைப்பையும் அதற்கு காரணமான நிர்வாகத்தையும் கூட கேள்வி எழுப்ப வேண்டும்.

இவர்கள்தான் சிஎஸ்கேவின் தோல்விகளுக்கு காரணம் என தனித்து அடையாளப்படுத்தும் சூழல் இப்போது இல்லை. இயற்கை, ஜடேஜாவின் தலைமை, வாய்ப்பை பெற்றும் பிரகாசிக்க மறுக்கும் வீரர்கள், அணி நிர்வாகம் தோல்விக்கறை படிந்திருக்கிறது.

ஆடியிருக்கும் நான்கு போட்டியிலும் சென்னையின் ப்ளேயிங் லெவன் மாறியிருக்கிறது. இது சென்னையின் இயல்பே கிடையாது. ஆனாலும் இனியும் ப்ளேயிங் லெவன் மாறத்தான் செய்யும். பிரச்சனைக்கு முகமே காட்டாமல் இருந்த 2020 சீசனை ஒப்பிடும் போது இதுதான் பிரச்சனை என தெரிந்து தீர்வை நோக்கி தேடுதலை தொடரும் இந்த சீசன் எவ்வளவோ பரவாயில்லை!

-உ.ஸ்ரீராம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com