ஜூனியர் ஹாக்கி பயிற்சி முகாம்: கோவில்பட்டியிலிருந்து 4 பேர் தேர்வு - ‘ஹாக்கி’பட்டி வரலாறு!

ஜூனியர் ஹாக்கி பயிற்சி முகாம்: கோவில்பட்டியிலிருந்து 4 பேர் தேர்வு - ‘ஹாக்கி’பட்டி வரலாறு!
ஜூனியர் ஹாக்கி பயிற்சி முகாம்: கோவில்பட்டியிலிருந்து 4 பேர் தேர்வு - ‘ஹாக்கி’பட்டி வரலாறு!

இந்திய ஜூனியர் ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியை சேர்ந்த 4 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் நடைபெறும் இந்திய ஜுனியர் ஹாக்கி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியை சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற தொடங்கியுள்ளனர். இதில் திட்டங்குளத்தினை சேர்ந்த ஏழை விவசாயி தம்பதியின் மகன் ஹாக்கி வீரர் அரவிந்த என்பவர் தேர்வு செய்யப்பட்டு கோவில்பட்டிக்கு பெருமை சேர்ந்துள்ளார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஹாக்கி அணியில் கோவில்பட்டி வீரர்கள் இடம்பெற தொடங்கியுள்ளதால் அங்கு இளம் தலைமுறையினர் புத்துணர்ச்சியுடன் ஹாக்கி விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் வரலாற்றில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு முக்கிய பங்கு உண்டு. சுமார் ஒரு நூற்றாண்டு மேலாக கோவில்பட்டி நகரில் ஹாக்கி விளையாடப்பட்டு வருகிறது. ஹாக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் தயான்சாந்த கோவில்பட்டிக்கு வந்து வீரர்களுக்கு பயிற்சி அளித்து கோவில்பட்டி ஹாக்கிக்கு மெருகூட்டியதால் கோவில்பட்டி நகரம் ’ஹாக்கிபட்டி’ என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது அதனை நிரூபிக்கும் வகையில் உலக அளவில் உள்ள ஹாக்கி கிளப்கள், இந்திய ஹாக்கி அணி மற்றும் தேசிய அளவில் புகழ்பெற்ற ஹாக்கி அணிகளில் கோவில்பட்டி வீரர்கள் விளையாடி தங்களது திறமையை நிரூபித்து வெற்றி வாகை சூடி பெருமை சேர்த்துள்ளனர்.

களிமண் மைதானத்தில் இருந்து செயற்கை புல்வெளிக்கு ஹாக்கி விளையாட்டு மாறியதும், கோவில்பட்டியில் இருந்து ஹாக்கி அணிக்கு வீரர்கள் செல்வது குறைந்து தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில்தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூவின் கோரிக்கையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையின் காரணமாக 7 கோடி 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச அளவிலான செயற்கை புல்வெளி மைதானம் மற்றும் மாணவர் விடுதி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைக்கப்பட்டது. இதன் பயனாக கோவில்பட்டி நகர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஹாக்கி வீரர்கள் இங்கு வந்து பயிற்சி பெற ஆரம்பித்தனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ந்தேதி முதல் 25ந்தேதி வரை ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஏற்பாட்டில் தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. 27 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற அந்த ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் கோவில்பட்டியை சேர்ந்த 9 வீரர்கள் விளையாடி அசத்தினர். இதில் கோவில்பட்டியை சேர்ந்த நிஷிதேவ் அருள் தான் தமிழக அணியை வழிநடத்தினர். காலியிறுதி போட்டி வரை சிறப்பாக விளையாடி அசத்தி அனைவரின் கவனைத்தினையும் ஈர்த்தனர்.

இந்த நிலையில் அதில் தமிழக அணிக்கு சிறப்பாக ஆடிய நிஷிதேவ் அருள், அரவிந்த், கவியரசன், திலீபன், நெல்லையை சேர்ந்த சதீஷ் ஆகிய வீரர்கள் பிப்ரவரி 14 முதல் அடுத்த மாதம் 31ந்தேதி வரை பெங்களூருவில் நடைபெறும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற தொடங்கியுள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பேரும் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு மாணவர் விடுதி தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளில் இதுவரை 9 பேர் இந்திய அணி மற்றும் சாய் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து கடந்த 2 ஆண்டுகளாக கோவில்பட்டியை சேர்ந்த மற்றும் கோவில்பட்டியில் பயிற்சி பெற்றவர்கள் இந்திய அணி ஹாக்கி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு வருவதால் கோவில்பட்டியில் உள்ள இளம் ஹாக்கி வீரர்களுக்கு உற்சாகவும், உத்வேகமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக கோவில்பட்டியில் இருந்து ஹாக்கி வீரர்கள் வெளியே செல்லமுடியமால் இருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சிபெற தொடங்கியுள்ளனர். விரைவில் இந்திய அணிக்கும் தேர்வு செய்யும் வகையில் அவர்களுக்கு பயிற்சி கிடைத்து வருகிறது. மேலும் போன ஆண்டு போன்று இந்தாண்டு தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் நடைபெற உள்ளது எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com