360 டிகிரி பேட்ஸ்மேன்... மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகுடம் ஏபி டிவில்லியர்ஸ்

360 டிகிரி பேட்ஸ்மேன்... மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகுடம் ஏபி டிவில்லியர்ஸ்
360 டிகிரி பேட்ஸ்மேன்... மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகுடம் ஏபி டிவில்லியர்ஸ்

அக்டோபர் 25, 2015 : மும்பை - வான்கடே ஸ்டேடியம். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி பவுலர்களின் பந்துகளை பவுண்டரிகளுக்கு பறக்க விடுவதில் மும்முரமாக இருந்தனர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள்.

ஒரு கட்டத்தில் அந்த அணி 187 ரன்களுக்கு, இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் கிரீஸுக்கு வந்தார் அந்த அணியின் அப்போதைய கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ். அந்த போட்டியில் இந்தியா தோற்றுவிடும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்த நிலையில் மைதானத்திலிருந்த ஒவ்வொரு ரசிகனும் 'ஏபிடி... ஏபிடி...' என மைதானமே அதிரும் அளவுக்கு கோஷம் எழுப்ப 'நாம இருப்பது இந்தியாவில் தானா?' என்ற சந்தேகம் டிவியில் அந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு ரசிகனுக்கும் ஏற்பட்டிருக்கும். 

பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலி படை தளபதியாக பதவி ஏற்கும்போது கேட்ட சத்தம்போல இருந்தது ஏபி டீவில்லியஸின் என்ட்ரிக்கு இந்திய ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு. அந்த போட்டியில் 61 பந்துகளில் 119 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் 'இந்திய ரசிகர்களின் வரவேற்புக்கான ரெஸ்பான்ஸ்தான் இந்த இன்னிங்ஸ்' என சொல்லி இருந்தார். 

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ஏபிடி பேட்டோடு கிரிக்கெட் மைதானத்திற்குள் களம் இறங்கும் ஒவ்வொரு போட்டியிலும், அவருக்கான வரவேற்ப்பை கிரிக்கெட் ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடுவது வழக்கம். அந்தளவிற்கு களத்தில் ஜென்டில்மேனாக ஜொலிப்பர். எதிரணியினரை வசை பாடுவது, பந்தை காட்டுத் தனமாக எறிவது என எந்தவித செயலிலும் ஈடுபடாத ஏபிடியின் அந்த குணம் தான் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வெல்ல முக்கிய காரணம். இப்படி தனக்கென தனி ரசிகர் பட்டாளமே கொண்டுள்ளவருக்கு இன்று பிறந்தநாள். 

1984 பிப்ரவரி 17-ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவின் ‘பேலா பேலா’ நகரில் பிறந்தார் ஏபிடி. பிரேடோரியா நகரில் இருக்கும் ஆப்ரிக்க பள்ளியில் தன் பள்ளி படிப்பை சகநாட்டு கிரிக்கெட் வீரரான டூப்லெஸிஸ் உடன் படித்தார். இருவருமே ஒய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேட்டும் கையுமாக மைதானத்தில் திரிந்துள்ளனர். ஏபிடியின் அப்பா ரக்பி விளையாட்டில் கைதேர்ந்தவர் என்பதால் மகனையும் ரக்பி பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளார். விளையாட்டு பிள்ளையான ஏபிடி கிரிக்கெட், ரக்பி பயிற்சியோடு கால்ப், டென்னிஸ் என மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். 

சிறு வயதில் ஏபிடி விளையாடிய விளையாட்டுகளின் லிஸ்டை குறிப்பிட ஒரு கட்டுரையே எழுதலாம். கிரிக்கெட், ரக்பி, கால்ப், டென்னிஸ் என அனைத்து விளையாட்டுகளிலும் ஏபிடி தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். 

இப்படி தன் பால்யத்தை வெவ்வேறு விளையாட்டுகளில் செலவிட்டு வந்த ஏபிடி விளையாட்டை தனது  கெரியராக அமைத்துக் கொள்ள முடிவு செய்தபோது அவர் தேர்தெடுத்ததுதான் கிரிக்கெட். அதற்காக அயராமல் உழைத்து தீவிர பயிற்சி மேற்கொண்டு தென்னாப்பிரிக்க அணியில் இடம் பிடித்தார். அதன் மூலம் 2004-இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் ‘போர்ட் எலிசபெத்’ மைதானத்தில் தனது ரன் வேட்டையை ஆரம்பித்தார் ஏபிடி.

விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், பவுலர், துடிப்பான பீல்டர் என ஆல் ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுக்க அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் தவிர்க்கமுடியாத பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். அணியில் ஏபிடி இருப்பதை பெரிய பலமாக எடுத்து கொண்டார் தென்னாப்பிரிக்காவின் அப்போதைய கேப்டன் கிரேம் ஸ்மித்.

டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், பின் வரிசையில் அதிரடி பினிஷர் என தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அதிரடி ரன் குவிப்பில் அசத்தினார். வழக்கமான கிளாசிக் கிரிக்கெட் ஷாட்களோடு, அன் ஆர்தடாக்ஸ் முறையில் பந்தை தனக்கு தோது வந்தார்போல் அடித்து துவம்சம் செய்வதுதான் ஏபிடியின் பேட்டிங் ஸ்டைல். 

கிரிக்கெட் புக்கில் புதியதாக இடம் பிடித்துள்ள அன் ஆர்தடாக்ஸ் ஷாட்களை உருவாக்கியதும் ஏபிடி தான். 

"அவர் பந்தை எந்தப்பக்கம் அடிப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அவருக்கு பீல்டிங் செட் செய்வது ரொம்பவும் கஷ்டம்" என ஒருமுறை இந்தியாவின் மகேந்திர சிங் தோனியே சொல்லியுள்ளார். தான் விளையாடிய பெரும்பாலான இன்னிங்ஸில் ஏபிடி சராசரியாக 50 ரன்களை சர்வசாதாரணமாக அடித்து அணியின் வெற்றிக்கு உதவுவது அவர் பாணி. 

இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் என சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக அதிரடியாக ஆடி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அவர் ஒரு ரவுண்டுவந்துள்ளார். 

ஏபிடிக்கு 2011இல் தன் அணியை வழி நடத்தி செல்லும் கேப்டன் பதவியும் கொடுக்கப்பட்டது. எந்த சிக்கலும் இல்லாமல் அணியை சிறப்பாக வழி நடத்தி சென்றார். அவரது கேப்டன்சி திறனை பார்த்து அசந்துபோன கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் இந்த நூற்றாண்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஏபிடியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது என புகழ்ந்தனர். எப்படியும் 2015 உலகக் கோப்பையை தென் ஆப்ரிக்க அணிக்கு வாங்கி கொடுக்கும் நோக்கத்தோடு ஆஸ்திரேலியா பறந்திருந்தார் ஏபிடி. அரை இறுதி வரை முன்னேறி தோல்வியோடு நாடு திரும்பிய பின்னர் காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதிவியிலிருந்து ஒய்வு பெற்றார். தொடர்ச்சியாக 2018இல் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வு பெற்றார் . அந்த நிலையில் தான் சொந்த நாட்டுக்காகவும், கவுண்டி கிரிக்கெட்டிலும், ஐபிஎல் மாதிரியான லீக் ஆட்டங்களிலும் அசத்தி வந்தார். 

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவித போட்டிகளையும் சேர்த்து  420 ஆட்டங்கள் ஆடியுள்ளார் ஏபிடி. அதன் மூலம் 20,014 ரன்களை குவித்துள்ளதோடு 47 சதங்களையும்  கடந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொடுக்கும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை மூன்று முறை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் வெறும் 31 பந்துகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரரும் இவர் தான். தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

-எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com