“ரிஷபின் ஆட்டம் எனது விளையாட்டு கரியரின் ஆரம்ப நாட்களை நினைவு படுத்துகிறது!” - சேவாக்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்தின் ஆட்டம் தனக்கு தனது விளையாட்டு கெரியரின் ஆரம்ப நாட்களை நினைவு படுத்துவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் சொல்லியுள்ளார். ‘ஒயிட் பால்’ கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் பந்த் தான் எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி இருந்தார் பந்த். அதுவும் ஒருநாள் தொடரில் அடுதடுத்து இரண்டு அரை சதங்களையும் அவர் விளாசி இருந்தார். அவரது பங்களிப்பு இந்தியா தொடரை வெல்லவும் உதவியது.
“இந்த தொடரில் இந்திய அணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பிளஸ் என்றால் அது ரிஷப் பந்த் தான். ஏனென்றால் அவர் மிடில் ஓவர்களில் இந்திய அணிக்காக பேட் செய்ய களத்திற்கு வரும் போது தனது ரோலை உணர்ந்து விளையாடுகிறார். அவர் இந்த அணியுடன் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
அவரது ஆட்டம் எனது விளையாட்டு கெரியரின் ஆரம்ப நாட்களை நினைவு படுத்துகிறது. களத்திற்கு வரும் போது யார் என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ளாமல் ‘நான் பேட் செய்ய வந்துள்ளேன்’ என சொல்வது போல தான் அவரது ஆட்டம் உள்ளது” என சேவாக் சொல்லியுள்ளார்.

