“தெரியாத வீரர்களுக்கு பல கோடிகள்; உமேஷ் யாதவுக்கு ஒரு கோடியா?”- முன்னாள் வீரர்கள் காட்டம்
ஐபிஎல் ஏலத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை ரூ. 1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ். இதற்கு பல முன்னாள் கிரிக்கெட் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று மினி ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. அதில் பல வெளிநாட்டு வீரர்களை அதிகமான ஏலத்தொகைக்கு எடுத்தது ஐபிஎல் அணிகள். பல வெளிநாட்டு வீரர்களை 5 கோடிக்கு மேல் ஐபிஎல் அணிகள் ஏலம் எடுத்தது. உதாரணத்துக்கு கிறிஸ் மோரிஸ் ரூ.16 கோடிக்கும், மேக்ஸ்வெல் ரூ.14 கோடிக்கும், இன்னும் சிலர் ரூ.10 கோடிக்கு அருகேயும் சென்றனர். ஓப்பீட்டு அளவில் சில இந்திய வீரர்களுக்கு மட்டுமே ரூ.5 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டனர்.
இந்தியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஏலத்தில் மற்ற அணிகள் எதுவும் அவரை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா "எப்படி விளையாடுவார்கள் என தெரியாத வெளிநாட்டு வீரர்களை அதிக விலை கொடுத்த வாங்குகிறார்கள்" என சாடியிருக்கிறார்கள்.
முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் "உமேஷ் யாதவ்வை ரூ.1 கோடிக்கு ஏலம் எடுத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது" என்றார். கிரிக்கெட் வரணனையாளரான ஹர்ஷா போக்லே "உமேஷ் யாதவ் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருக்கிறார்" என்றார் வேடிக்கையாக.