நூறுநாள் திட்டத்தில் வேலை பார்க்கும் வீல் சேர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்..!
உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ராய்கோட்டில் வசித்து வருகிறார் இந்தியாவின் வீல் சேர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஜேந்திர சிங் தாமி.
கொரோனாவினால் தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் அவர்.
“கொரோனாவுக்கு முன்பு வரை ருத்ராபூரில் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமுள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி கிரிக்கெட் விளையாட நான் பயிற்சி கொடுத்து வந்தேன். ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் எனது பெற்றோர் வசிக்கும் ராய்கோட்டுக்குத் திரும்பினேன்.
குஜராத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் எனது சகோதரர் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கினால் அது பூட்டப்பட்டதை தொடர்ந்து எங்கள் குடும்பமே வருமானம் ஏதுமின்றி தவித்தது. அதனால் நான் இப்போது எங்கள் ஊரில் கிடைக்கின்ற கூலி வேலையை செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார் அவர்.
மூன்று வயதில் பக்கவாதம் காரணமாக கால்களில் பாதிப்பு ஏற்பட்டது தாமிக்கு. சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்தி இந்தியாவுக்காக விளையாடி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அவர் நூறு நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறார். நடிகர் சோனு சூட் அவருக்கு நிதி உதவியும் அளித்துள்ளார்.