சவால் கொடுத்த குட்டி அணி.. போராடி வென்றது அர்ஜென்டினா.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தசூழலில், இன்று அதிகாலை தொடங்கிய ரவுண்ட் ஆஃப் சுற்று 32 போட்டி ஒன்றில் நம்பர் ஒன் அணியான மெஸ்ஸியின் அர்ஜென்டினா, குட்டித் தீவு நாடான கேப் வெர்டேவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே லியோனல் மெஸ்ஸி கோல் அடித்து முன்னிலையை ஏற்படுத்தினார். எனினும், ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில், கேப் வர்டேவின் டெராய் டுவார்டே கோல் அடித்த நிலையில், ஆட்டத்தில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, போட்டியின் இறுதி வரை எந்தவொரு அணியும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டம் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, 30 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் 92-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.தொடர்ந்து, 103 ஆவது நிமிடத்தில் கேப் வர்டே அணியின் கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தில் மீண்டும் சமநிலை ஏற்பட்டது.
இந்தசூழலில் தான், போட்டியின் 111-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கிறிஸ்டியன் ரொமேரோவின் கோல் முயற்சி , கேப் வெர்டேவின் டினே போர்ஜஸ் மீது பட்டு 'ஓன் கோல்' ஆக மாறியதால் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா, எளிதாக வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கத்துக் குட்டியான கேப் வெர்டேவிடம் போராடியே வென்றிருக்கிறது.
அர்ஜென்டினா அணி அடுத்த ஆட்டத்தில் எகிப்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

