இந்த முறையாவது சாம்பியன்ஸ் லீகை வெல்லுமா பிஎஸ்ஜி? சரித்திரம் படைப்பாரா லூயிஸ் என்ரீகே..!

அந்த நம்பிக்கை வருவதற்கான காரணம், இந்த சீசன் மிகப் பெரிய பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறது பிஎஸ்ஜி.
PSG Campus
PSG CampusPSG Campus

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் - ஐரோப்பிய கால்பந்து உலகின் மிகப் பிரபலமான அணிகளுள் ஒன்று. பிரான்ஸின் ஈடு இணையற்ற அணி. கடந்த இரு தசாப்தங்களாக பிரான்ஸின் லீக் 1 தொடரில் பெரும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது. டேவிட் பெக்கம் முதல் லயோனல் மெஸ்ஸி வரை பல ஜாம்பவான்கள் வந்து போய்விட்டனர். ஆனால் அவர்களின் ஒரே இலக்கான UEFA சாம்பியன்ஸ் லீக் கோப்பையை அவர்களால் கைப்பற்றவே முடியவில்லை. இந்த சீசன் அந்தக் கோப்பையை வென்ற அனுபவம் கொண்ட லூயிஸ் என்ரீகே அந்த அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றிருக்கும் நிலையில், இம்முறையாவது அந்த இலக்கை பிஎஸ்ஜி எட்டிப் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

PSG Campus
PSG CampusPSG Campus

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பயிற்சியாளர்களை மாற்றிவிட்ட பிஎஸ்ஜி இம்முறை முன்னாள் பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் மேனேஜரான லூயிஸ் என்ரீகேவை ஒப்பந்தம் செய்திருக்கிறது. பார்சிலோனாவோடு கோப்பை வென்று அசத்திய அவர் நிச்சயம் பிஎஸ்ஜி அணியை அந்த திசை நோக்கி பயணிக்க வைக்ககூடிய வெகுசிலரில் ஒருவர். அந்த நம்பிக்கை வருவதற்கான காரணம், இந்த சீசன் மிகப் பெரிய பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறது பிஎஸ்ஜி.

இத்தனை காலமாக சூப்பர் ஸ்டார் பெயர்களை பெரிதும் நம்பியிருந்தது அந்த அணி. ஆரம்ப காலத்தில் டேவிட் பெக்கம், ரொனால்டினோ, ஸ்லாடன் இப்ராஹிமோவிச் போன்ற வீரர்களை பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்ததன் மூலம் தங்களுக்கு உலக அரங்கில் நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று கருதினர். அது நிச்சயம் நடந்தது. ஆனால் சமீப காலமாகவும் அதையே தொடர்ந்துவந்திருக்கிறது அந்த அணி. இம்முறை கோப்பை வெல்ல அது பதில் என்று கருதினார்கள். நெய்மரை உலக சாதனை டிரான்ஸ்ஃபர் தொகைக்கு வாங்கினார்கள். பெரிய மாற்றங்கள் நிகழவில்லை. எம்பாப்பே வந்தார். செல்லுபடியாகவில்லை. மெஸ்ஸியையும் அழைத்து வந்தனர். எதுவும் மாறவில்லை!

கோப்பை வெல்ல முடியவில்லை என்பதைக் கடந்து இப்போது இந்த சூப்பர் ஸ்டார்கள் ஒவ்வொருவராக வெளியேறவும் தொடங்கியிருக்கிறார்கள். மெஸ்ஸி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். செர்ஜியோ ரமோஸையும் ரிலீஸ் செய்துவிட்டனர். ஒப்பந்தம் கையெழுத்திடாமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்த எம்பாப்பே இந்த ஒரு சீசனாவது அந்த அணியில் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சீசன் சூழ்நிலை தெரியவில்லை என்றாலும், அவர் இந்த சீசன் அந்த அணியில் விளையாடப்போகிறார்.

எம்பாப்பேவை விட்டுவிட்டுப் பார்த்தாலும், ஒரு சரியான சிறப்பான அணி பாரீஸில் உருவாகிக்கொண்டிருக்கிறது.

கியான்லூயி டொன்னரூமா இருப்பதால் கோல் கீப்பர் பொசிஷனில் பிரச்சனை இல்லை. கிளப் கேப்டன் மார்கீனியோஸ், துணைக் கேப்டன் கிம்பெம்பே ஆகியோர் அடங்கிய சென்டர் டிஃபன்ஸை ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் வந்திருக்கும் மிலன் ஸ்கிரினியர் பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறார். ஹகிமி, நூனோ மெண்டஸ், முகியேலி, பெர்னார்ட் என ஃபுல் பேக் இடங்கள் பக்காவாக இருக்கின்றன. இவைபோக, பெரும் தொகை கொடுத்து லூகாஸ் ஹெர்னாண்டஸையும் வாங்கியிருக்கிறார்கள். சாம்பியன்ஸ் லீக் வெல்லத் தகுந்த அனைத்து திறன்களும் இந்த டிஃபன்ஸிடம் இருக்கிறது.

அந்த அணிக்கு மிகப் பெரிய குறையாக இருந்தது நடுகளம் தான். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மிட்ஃபீல்டர்களை வாங்கிக்கொண்டிருக்கிறது அந்த அணி. இருந்தாலும் அது சரியான விடை கொடுத்ததில்லை. இப்போது அந்த அணியின் நம்பிக்கையாக விளங்கிய மார்கோ வெரட்டியும் கத்தாருக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் 60 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டிருக்கும் மானுவேல் உகார்டே அந்த இடத்தை நிரப்பிவிடுவார். ஃபேபியன், விடினியா, கார்லோஸ் சோலர், ஜாவி சிமோன்ஸ் என என்ரீகேவுக்கு ஏற்ற வீரர்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள்.

அட்டாக்கில் காங் இன் லீ, மார்கோ அசான்சியோ ஆகியோரை இந்த சீசன் ஒப்பந்தம் செய்திருக்கிறது பிஎஸ்ஜி. வெளியேறியிருக்கும் மார்கோ இகார்டியின் இடத்தை, கொன்சாலோ ரமோஸை லோனில் ஒப்பந்தம் செய்து நிரப்பியிருக்கிறார்கள். கடைசி சில வாரங்களில் டிரான்ஸ்ஃபர் விண்டோவில் அதிரடியாக செயல்பட்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முன்கள வீரர்களான ஓஸ்மான் டெம்பளே, ரேண்டல் கோலோ முவானி, பிராட்லி பிரகோலா ஆகியோரை மொத்தமாக சுமார் 200 மில்லியன் யூரோவுக்கு வாங்கியிருக்கிறது அந்த அணி.

வெளிநாட்டு சூப்பர் ஸ்டார்களை நம்பியிருந்த அந்த அணி, மற்ற நாடுகளைச் சேர்ந்த பெரிய கிளப்களைப் போல் இப்போது பிரான்ஸை சேர்ந்த நட்சத்திர வீரர்களை வாங்கிக் குவித்திருக்கிறது. லூயிஸ் என்ரீக்கே விரும்புவது போல திறமையான இளம் அணி ஒன்றை ஒன்றிணைத்திருக்கிறது பிஎஸ்ஜி நிர்வாகம். இந்த லீக் 1 சீசனின் முதலிரு போட்டிகளில் தடுமாறியிருந்த அந்த அணி (முதலிரு போட்டிகளில் 2 டிராக்கள்), அதன்பிறகு சிறப்பாக விளையாடிவருகிறது. எம்பாப்பேவின் கம்பேக் காரணம் என்றாலும், ஒரு அணியாகவும் அவர்களின் செயல்பாடு மேம்பட்டு வருகிறது.

PSG Campus
INDvPAK | ஆட்டநாயகன் விருதை கோலிக்கு கொடுத்திருக்கக் கூடாது! - கவுதம் கம்பீர் விளக்கம்

திடமான டிஃபன்ஸ், நம்பிக்கை மிகுந்த நடுகளம், துடிப்பான அட்டாக் என லீக் கோப்பை வெல்வதற்கான ஒரு அணி என்ரீக்கே வசம் இருக்கிறது. எப்படியும் அந்த அணி வழக்கம்போல் லீக் 1 பட்டத்தை வென்றுவிடும். இருந்தாலும் சாம்பியன்ஸ் லீக் கொஞ்சம் சந்தேகம் தான். போதாக்குறைக்கு இந்த சீசன் சாம்பியன்ஸ் லீகின் குரூப் பிரிவிலேயே ஏசி மிலன், பொருஷியா டார்ட்மண்ட், நியூகாசில் யுனைடட் கிளப்கள் பிஎஸ்ஜி இடம்பெற்றிருக்கும் குரூப்பில் இருக்கின்றன. அதனால் முதல் சுற்றே அந்த அணிக்குக் கடினமாக இருக்கப்போகிறது. மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் மூனிச், ரியல் மாட்ரிட் போன்ற அணிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிச்சயம் சாம்பியன்ஸ் லீக் வெல்வதற்கான அணியாக பிஎஸ்ஜி-ஐ கருத முடியாது. இருந்தாலும் இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவை அவர்கள் அணுகியிருக்கும் விதமும் என்ரீக்கே இருப்பதும் நிச்சயம் இனிவரும் சீசன்களில் அவர்களுக்கு அந்தக் கோப்பையை வென்று தரலாம். இந்த சீசன் அதற்கான நம்பிக்கையை நிச்சயம் விதைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com