ஒரு தசாப்தமாக சொதப்பி வரும் மான்செஸ்டர் யுனைடட்! எரிக் டென் ஹாக் தலைமையில் எழுச்சி பெற்று வருகிறதா?

1992 முதல் செல்சீ, ஆர்செனல் போன்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்த மான்செஸ்டர் யுனைடட் அணி, தற்போது மீண்டும் எழுச்சிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
Manchester United
Manchester UnitedTwitter

13 முறை பட்டம் வென்ற மான்செஸ்டர் யுனைடட்!

மான்செஸ்டர் யுனைடட் - இங்கிலாந்து கால்பந்தின் ராஜாவாக இருந்த அணி, கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக பிரீமியர் லீக் கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. சர் அலெக்ஸ் ஃபெர்குசன் வெளியேறிய பிறகு லீக் பட்டம் வென்றிடாத இந்த அணி, இப்போது எரிக் டென் ஹாக் தலைமையில் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கிறது. சீரான முன்னேற்றங்கள் கண்டுவரும் யுனைடட் அணி, இந்த சீசன் நிச்சயம் சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சரியான முடிவுகளையும் கண்டுவருகிறது அந்த அணி நிர்வாகம்.

Manchester United
Manchester UnitedTwitter

1992 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் முதல் டிவிஷன், பிரீமியர் லீக் என மாறிய பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது மான்செஸ்டர் யுனைடட். சர் அலெக்ஸ் ஃபெர்குசன் தலைமையில் இங்கிலாந்தில் மட்டுமல்லாது, ஐரோப்பாவிலும் தங்கள் கொடியை நாட்டியது ரெட் டெவில்ஸ். முதல் 21 சீசன்களில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றது யுனைடட். செல்சீ, ஆர்செனல் போன்ற அணிகள் அவ்வப்போது எழுச்சி பெற்றாலும், ஒவ்வொரு முறையும் யுனைடட் அணியை எழுச்சி பெற வைத்தார் ஃபெர்குசன். ஆனால் அவர் ஓய்வு பெற்றபின் எல்லாம் தலைகீழாய் மாறியது.

அலெக்ஸ் ஃபெர்குசன் ஓய்விற்கு பிறகு தடம் மாறிய யுனைடட்!

2012-13 சீசனில் மான்செஸ்டர் யுனைடட் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றார் அலெக்ஸ் ஃபெர்குசன். அப்போது எவர்டன் அணியை சிறப்பாக வழி நடத்தி வந்த டேவிட் மாய்ஸ் தன் இடத்துக்கு சரியான ஆள் என்று கைகாட்டினார். ஆனால், அந்த சீசன் முடிவதற்கு முன்பே வெளியேற்றப்பட்டார் மாய்ஸ். அதன்பின் பல மேனேஜர்கள் வந்தும் அவர்களால் யுனைடட்டின் தலைவிதியை மாற்ற முடியவில்லை. ஜோஸே மொரினியோ, லூயி வேன் கால், ஓலே கன்னர் ஷோல்ஷர் உள்பட 6 மேனேஜர்கள் முழு நேரமாகவும் பகுதி நேரமாகவும் கடந்த 10 ஆண்டுகளாக மான்செஸ்டர் யுனைடட் கிளப்பின் மேனேஜர் பதவியில் இருந்தனர். வான் கால் FA கோப்பை மட்டும் வென்றார். மொரினியோ லீக் கப், யூரோப்பா லீக் இரண்டையும் வென்றார். ஆனால், யாராலும் லீக் பட்டம் வெல்ல முடியவில்லை.

Alex Ferguson - Ronaldo
Alex Ferguson - Ronaldo

வெற்றியை மட்டுமே பார்த்துப் பழகிய யுனைடட் ரசிகர்களால் இதை ஜீரணீக்க முடியவில்லை. போக, அவர்களின் பரம எதிரியான மான்செஸ்டர் சிட்டி வெகுண்டெழுந்து உலக கால்பந்தின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஃபெர்குசன் சென்றபிறகு மட்டுமே 6 முறை லீக் சாம்பியன் ஆகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீசன் சாம்பியன்ஸ் லீகும் வென்றுவிட்டது. இதை எப்படி அவர்களால் ஜீரணிக்க முடியும்! ஆனால், கடந்த ஆண்டு அந்த அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற எரிக் டென் ஹாக் அந்த அணியின் ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

வீரர்களை சிறப்பாக கையாண்டு எழுச்சியை கண்ட எரிக் டென் ஹாக்!

2022-23 சீசனின் தொடக்கம் அந்த அணிக்கு சிறப்பாக அமையவில்லை. முதல் போட்டியில் ஓல்ட் டிராஃபோர்டில் பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியானிடம் தோற்றது. அடுத்த போட்டியில் பிரென்ட்ஃபோர்டுக்கு எதிராக 4 கோல்கள் வாங்கி பேரடி வாங்கியது. அடுத்த 4 போட்டிகளையும் வென்றிருந்தாலும், மான்செஸ்டர் சிட்டியிடம் 3-6 என தோல்வியடைந்தது அந்த அணி. சற்று தளர்ந்திருந்தாலும், சீசன் போகப் போக யுனைட்டடின் ஆட்ட முறையையே மாற்றினார் எரிக் டென் ஹாக். அதற்கு பிறகு சிறப்பாக ஆடத் தொடங்கிய யுனைடட், ரிவர்ஸ் கேமில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. சீசனையும் மூன்றாவது இடத்தில் முடித்தது. போக, லீக் கோப்பையையும் வென்றது. 5 ஆண்டுகள் கழித்து மான்செஸ்டர் யுனைடட் வென்ற முதல் கோப்பை இதுதான்.

Erik ten Hag
Erik ten HagTwitter

முடிவுகளைக் கடந்து அணியை, வீரர்களை டென் ஹாக் கையாண்ட விதமே ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்தது. ஸ்டார் வீரர்கள் என்று எந்த பாகுபாடும் அவர் பார்க்கவில்லை. யோசிக்காமல் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பெஞ்சில் அமர்த்தினார் அவர். கிளப் கேப்டன் ஹேரி மகுயர் தடுமாறியபோது அவரையும் அணியிலிருந்து வெளியேற்றினார். சென்டர் டிஃபண்டர்கள் காயமடைந்தபோதும் கூட மகுயரை களமிறக்காமல், லெஃப்ட் பேக் லூக் ஷா-வை சென்டர் பேக்காக ஆடவைததார். ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டிருந்த லிசாண்ட்ரோ மார்டினஸ் ஒருகட்டத்தில் அந்த அணியின் மீட்பராக மாறினார். இப்படி மிகச் சிறப்பாக வீரர்களையும் சூழ்நிலையையும் கையாண்டார் அவர்.

மீண்டும் கோப்பையை வென்று கம்பேக் கொடுக்குமா யுனைடட்?

இந்த சீசன் அந்த நம்பிக்கையை இன்னும் பலப்படுத்தும் வகையில் டிரான்ஸ்ஃபர்கள் நடந்துகொண்டிருக்கிறது. முதல் டிரான்ஸ்ஃபரே மிகப் பெரியதாகவும் அமைந்திருக்கிறது. செல்சீயின் இளம் மிட்ஃபீல்டர் மேசன் மவுன்ட்டை சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியிருக்கிறது அந்த அணி. இதன் மூலம் அந்த நடுகளத்தில் அட்டாகிங் ஆப்ஷன்களை அதிகரித்திருக்கிறது. கசமிரோ, புரூனோ ஃபெர்னாண்டஸ், கிறிஸ்டியன் எரிக்சன், மேசன் மவுன்ட் என 3 பொசிஷன்களுக்கு 4 அட்டகாச ஆப்ஷன்கள் கொண்டிருக்கிறது யுனைடட். இவர்கள் போக ஸ்காட் மெக்டோமினேய், ஃபிரெட் போன்றவர்களும் இருக்கிறார்கள். ரேஷ்ஃபோர்ட் கடந்த சீசன் வேற லெவல் ஃபார்மை எட்டிவிட்டார். ஆன்டனி மார்ஷியல், ஆன்டனி, சான்சோ, எலாங்கா, கர்னாசோ போன்ற வீரர்கள் கலக்கக் காத்திருப்பதால், அந்த ஏரியாவிலும் பிரச்சனை இல்லை.

Manchester United
Manchester United

கோல் கீப்பர் ஆப்ஷனுக்கு இன்டர் மிலனின் ஆண்ட்ரே ஒனானாவை வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறது அந்த அணி. ஸ்டிரைக்கர் இடத்தில் அடலான்டாவின் ரேஸ்முஸ் ஹ்யோல்முண்டை வாங்கவும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டால் நிச்சயம் கோப்பை வெல்வதற்கான ஒரு அணியாக மான்செஸ்டர் யுனைடட் மாறிவிடும். டென் ஹாக் நிச்சயம் யுனைடடின் அந்த பொன்னான காலத்தைத் திரும்பக் கொண்டுவருவார் என்று நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அது உடனே நடக்கவில்லையென்றாலும், அவர் கடிகார முட்களை பின்னால் திருப்பிக்கொண்டிருக்கிறார் என்பதை நிச்சயம் மறுக்க முடியாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com