Liverpool FC-ஐ மீண்டும் சாம்பியன் ஆக்குவாரா கிளாப்? புதிய நடுகளம் உயிர் கொடுக்குமா?

Liverpool FC-ல் பல மாற்றங்களை செய்து எழுந்து வேகமாக ஓட வைத்தவர் ஜார்ஜன் கிளாப். மீண்டும் அணியில் சிக்கல்கள் எழுந்துள்ளதால் மீண்டும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
liverpool fc
liverpool fcptweb

கால்பந்தாட்ட உலகில் பிரீமியர் லீக் அரங்கில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த லிவர்பூல் கடந்த ஆண்டு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கோப்பை வெல்லாவிட்டாலும், எதிரணிக்கு தொடர்ந்து சவால் கொடுத்துக்கொண்டிருந்த, சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டிருந்த அந்த அணி, 2022-23 சீசனின் பிரீமியர் லீக் தொடரில் ஐந்தாவது இடம் பிடித்து சாம்பியன்ஸ் லீக்கில் பங்குபெறுவதை தவறவிட்டிருக்கிறது.

இந்நிலையில் இனி நடக்க இருக்கும் சீசனில் மீண்டும் டாப் 4 இடங்களுக்குள் நுழையவேண்டும் என்பது அந்த அணியின் இலக்காக இருக்கும். சொல்லப்போனால், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லவேண்டும் என்றும் அந்த அணி இலக்கு வைத்திருக்கும். அதற்கு ஏற்றதுபோல், களத்தின் நடுவே - மிட்ஃபீல்டில் பல முக்கிய மாற்றங்களைக் கண்டுகொண்டிருக்கிறது லிவர்பூல்.

 ஜார்ஜன் கிளாப்
ஜார்ஜன் கிளாப்

மீண்டும் முதலிருந்து துவங்கும் கிளாப்...

2015ம் ஆண்டு லிவர்பூல் அணியின் மேனெஜராக ஜார்ஜன் கிளாப் பதவியேற்றபோது அந்த அணி தடுமாறிக்கொண்டிருந்தது. சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறுவதே பெரிய விஷயமாக இருந்தது. பிரீமியர் லீக் பட்டத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்தார்கள் அந்த அணியின் ரசிகர்கள்.

கிளாப்பின் வருகை அதை மாற்றியது. தன்னுடைய முதல் முழு சீசனில் அவர் செய்த முக்கிய விஷயம், தன் திட்டத்தில் இல்லாத வீரர்களை ஒட்டுமொத்தமாக வெளியே அனுப்பினார். அதன்பிறகு தன் ஸ்டைலுக்கு செட் ஆகக் கூடிய சரியான வீரர்களை வாங்கி அந்த அணியை சிறப்பாகக் கட்டமைத்தார். அதன் பலனாகத்தான் லிவர்பூல் அணி ஒரு பிரீமியர் லீக் பட்டம் வென்றது. மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் பைனலுக்கு முன்னேறி, அதில் ஒரு முறை சாம்பியனும் ஆனது.

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த அந்த அணிக்கு கடந்த ஆண்டு சரியாகச் செல்லவில்லை. முக்கிய வீரர்கள் பலர் அடுத்தடுத்து காயமடைந்தனர். அந்த அணியின் நடுகள வீரர்கள் எதிர்பார்த்தது போல் செயல்படவில்லை. அது அந்த அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பாதித்தது. விளைவாக ஐந்தாவது இடமே பிடித்து சாம்பியன்ஸ் லீக்கை தவறவிட்டது அந்த அணி. இப்போது அதை சரிசெய்யும் விதமாக மீண்டும் முதலிடத்தில் இருந்து தொடங்கியிருக்கிறார் கிளாப்.

 ஜேம்ஸ் மில்னர்
ஜேம்ஸ் மில்னர்

மாற்றங்கள்...

லிவர்பூல் அணியின் மிகமுக்கிய அங்கமாக விளங்கிய ஜேம்ஸ் மில்னர், ஃபிர்மினோ போன்ற வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது லிவர்பூல். 37 வயதாகிவிட்ட மில்னர், ‘பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான்’ அணிக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த அணியின் ஹீரோவாக உருவெடுத்த ஃபார்வேர்ட் ஃபிர்மினோ சவுதி பக்கம் சென்றுவிட்டார். அடிக்கடி காயத்தால் அவதிப்பட்ட நடுகள வீரர் அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பர்லைனும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார்.

மற்றொரு நடுகள வீரரான நபி கீடாவும் அணியிலிருந்து வெளியேறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் அணியின் கேப்டன் ஜோர்டான் ஹெண்டர்சன், சவுதியின் அல் இட்டிஃபாக் அணியோடு விரைவில் இணையப்போகிறார். அதுமட்டுமல்லாமல் டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் ஃபெபினியோவும் சவுதி கிளப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அந்த அணியின் ஒட்டுமொத்த மிட்ஃபீல்டும் மொத்தமாக வெளியேறியிருக்கிறது.

நிறைய நடுகள வீரர்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு சரியான மாற்றுகளையும் ஒப்பந்தம் செய்துவருகிறது லிவர்பூல். பிரைட்டன் அண்ட் ஹோவ் அணியில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த அலெக்சிஸ் மெகேலிஸ்டரை ஒப்பந்தம் செய்திருக்கிறது அந்த அணி. அதுமட்டுமல்லாமல் ஒரு பெரிய தொகை கொடுத்து ஹங்கேரியின் இளம் மிட்ஃபீல்டர் டொமினிக் சொபோஸ்லாயையும் வாங்கியிருக்கிறது அந்த அணி.

அடுத்ததாக சௌதாம்ப்டனின் ரோமியோ லேவியாவை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துவருகின்றன. இவர்களோடு இளம் வீரர்கள் கர்டிஸ் ஜோன்ஸ் மற்றும் ஹார்வி எலியாட் ஆகியோர் கடந்த சீசனில் சற்று நம்பிக்கை அளித்திருப்பதால் அவர்களை அட்டாகிங் ஆப்ஷனாக கிளாப் பயன்படுத்திக்கொள்வார். இன்னும் ஸ்பெய்ன் நடுகள வீரர் தியாகோவின் நிலை மட்டும் தெரியவில்லை. அவர் லிவர்பூல் அணியில் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.

Trent Alexander-Arnold
Trent Alexander-Arnold

கிளாப்பின் இந்த மிட்ஃபீல்ட் புரட்சிக்கு புதியதொரு பரிமாணம் கொடுப்பது டிஃபண்டர் டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னால்ட். அவரை கடந்த சீசனில் மிட்ஃபீல்டுக்குள் கட் இன் செய்து ஆடும் 'இன்வெர்டட் ஃபுல் பேக்' ரோலில் பயன்படுத்தினார் கிளாப். அது அந்த அணிக்குப் பெரிய அளவில் உதவியது. அட்டாக்கில் அவருடைய பங்களிப்பு அபரிதமாக இருந்தது. அதனால் சீசனின் கடைசி கட்டத்தில் சற்று எழுச்சி கண்டது லிவர்பூல்.

இங்கிலாந்து பயிற்சியாளர் கேரத் சவுத்கேட் கூட சர்வதேச போட்டிகளில் அலெக்சாண்டர் ஆர்னால்டை நடுகளத்தில் பயன்படுத்தினார். அது அந்த அணியின் நடுகளத்தை நன்கு பலப்படுத்தியது. அதனால், கிளாப் அந்த திட்டத்தை இந்த சீசனும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். டிரென்ட் நடுகளத்தில் விளையாடும்போது சமயங்களில் கிளாப்பால் ஒரு அட்டாக்கரை அதிகமாகப் பயன்படுத்த முடியும். ப்ரீ சீசன் போட்டிகளில் கூட கோடி கேக்போவை அவர் நடுகளத்தில் விளையாட வைத்து பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் நடுகளத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்து தன் லிவர்பூல் பயணத்தின் புதிய அத்தியாத்தை தொடங்கவிருக்கிறார் ஜார்ஜன் கிளாப். அது எந்த அளவுக்கு அவருக்குக் கைகொடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com