லா லிகா: மீண்டும் கோப்பை வெல்லுமா பார்சிலோனா? பென்சிமா இல்லாத ரியல் மாட்ரிட் சவால் கொடுக்குமா?

ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதும் போட்டி எல் கிளாசிகோ என்று அழைக்கப்படுகிறது.
பார்சிலோனா - ரியல் மாட்ரிட்
பார்சிலோனா - ரியல் மாட்ரிட்Twitter

ஸ்பெய்னின் முதல் டிவிஷன் கால்பந்து லீகான லா லிகாவின் 2023-24 சீசன் ஆகஸ்ட் 11 முதல் தொடங்குகிறது. கடந்த சீசனில் பெரிய போட்டி இல்லாமல் பார்சிலோனா சாம்பியன் பட்டத்தை வென்றது. இம்முறை பார்சிலோனாவின் ஸ்குவாட் கோப்பை வெல்லத் தகுந்ததாக இருக்கிறதா? அவர்களுக்கு சவால் கொடுக்கும் வகையில் அணியை பலப்படுத்தியிருக்கிறதா ரியல் மாட்ரிட்? அத்லெடிகோ மாட்ரிட் மீண்டும் இந்த அணிகளுக்குப் போட்டியாக இருக்குமா? இந்த சீசன் டாப் 4 இடங்கள் பிடிக்கக் கூடிய அணிகள் பற்றிய ஒரு பார்வை.

பார்சிலோனா

நடப்பு சாம்பியனான பார்சிலோனா இந்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை. அவர்களின் பொருளாதார பிரச்சனையின் காரணமாக தொடர்ந்து ஃப்ரீ டிரான்ஸ்ஃபர்கள் தான் செய்துகொண்டிருக்கிறது. மான்செஸ்டர் சிட்டியின் கேப்டனாக இருந்த இல்கே குண்டோகனை ஒப்பந்தம் செய்து நடுகளத்தை பலப்படுத்தியிருக்கிறது பார்சா. அதேபோல் அத்லெடிக் கிளப்பில் இருந்து இனிகோ மார்டினஸும் ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் வாங்கப்பட்டிருக்கிறார்.

செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ஜோர்டி ஆல்பா போன்ற சீனியர் வீரர்களை அந்த அணி மிஸ் செய்தாலும், அவர்களின் இளம் வீரர்கள் கார்டியோலாவின் காலகட்டத்தைப் போலவே மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்கள். டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கெதிரான ப்ரீ சீசன் போட்டியில், களத்தில் இருந்த 13 நிமிடங்களில் 3 கோல்களுக்குக் காரணமாக அமைந்தார் 16 வயதே ஆன லமீன் யமால். பயிற்சியாளர்கள் ஜாவிக்கு ஏற்ப பார்சிலோனா வீரர்கள் ஜொலிக்கிறார்கள். இந்த முறையும் லீக் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

ரியல் மாட்ரிட்

ஃபுல் பேக் பொசிஷன்களுக்கு ஆர்டா குலார், ஃபிரான் கார்சியா ஆகியோரையும் வாங்கியிருக்கும் அந்த அணி மற்ற அனைத்து ஏரியாக்களிலும் முழு பலத்தோடு காணப்படுகிறது. அதேசமயம், கேப்டன் கரிம் பென்சிமாவை சவுதிக்கு இழந்திருக்கும் ரியல் மாட்ரிட், இப்போது பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. ஜூட் பெல்லிங்கமை பெரும் தொகை கொடுத்து வாங்கி மிட்ஃபீல்டை பலப்படுத்தியிருக்கும் அந்த அணி, பென்சிமாவுக்கு மாற்றை வாங்கவில்லை.

எஸ்பான்யோலை சேர்ந்த சீனியர் ஸ்டிரைக்கர் ஜோசெலுவை மட்டும் லோனில் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். ஆனால் அவரால் எந்த அளவுக்கு ரியல் மாட்ரிட்டின் லெவலில் ஆட முடியும் என்று தெரியவில்லை. வினிசியஸ் ஜூனியர், ராட்ரிகோ கோஸ் இருவரின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதனால் அவர்கள் இருவரின் செயல்பாடுகளே மாட்ரிட்டின் இந்த சீசனை நிர்ணயிக்கப்போகிறது. இருவரில் ஒருவர் ஃபார்மை இழந்தாலோ, காயமடைந்தாலோ ரியல் மாட்ரிட்டின் சீசன் முடிவுக்கு வந்துவிடலாம்.

அத்லெடிகோ மாட்ரிட்

செக்லர் சோயுன்சு, சீஸர் ஆஸ்பிளிகியூடா இருவரையும் ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் ஒப்பந்தம் செய்திருக்கும் அத்லெடிகோ மாட்ரிட், வழக்கம்பொல் அவர்கள் டிஃபன்ஸை பலப்படுத்தியிருக்கிறது. ஆனால் டியாகோ சிமியோனின் அணி அட்டாக்கை இதுவரை பலப்படுத்தவில்லை.

சீஸர் ஆஸ்பிளிகியூடா
சீஸர் ஆஸ்பிளிகியூடா

பார்சிலோனா போல் இவர்களும் பொருளாதார சிக்கலில் இருப்பதால் பெரிதாக செலவளிக்க முடியாது. ஆனால் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அப்டேட் செய்தே தீரவேண்டும். அதை அத்லெடிகோ செய்யத் தவறியிருக்கிறது. பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகளோடு ஒப்பிடும்போது அணியின் தரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது அந்த அணி. நிச்சயம் இந்த சீசனில் அத்லெடிகோவால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது என்றே தோன்றுகிறது!

இந்த 3 அணிகள் நிச்சயம் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றுவிடும். ரியல் சோசிடாட், வியரியல், செவியா போன்ற அணிகள் டாப் 4 இடத்துக்கு நல்ல போட்டியாக இருக்கும்.

2022-23 சீசனுக்குப் பிறகு ரிலகேட் ஆன அணிகள்: வாலடோலிட், எஸ்பான்யோல், எல்சே

இந்த சீசன் புரமோட் ஆகியிருக்கும் அணிகள்: கிரானடா, லாஸ் பால்மாஸ், அலாவ்ஸ்

முக்கிய போட்டிகள்:

கிளப் கால்பந்து உலகின் மிகப் பெரிய போட்டியான எல் கிளாசிகோ இந்த அக்டோபர் 29, ஏப்ரல் 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதும் போட்டி எல் கிளாசிகோ என்று அழைக்கப்படுகிறது.

முதல் போட்டி கேம்ப் நூ மைதானத்திலும், இரண்டாவது போட்டி சான்டியாகோ போர்னபூ அரங்கிலும் நடக்கவிருக்கிறது. கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன.

அதேபோல் மாட்ரிட் டெர்பி செப்டம்பர் 24 (சிவிடாஸ் மெட்ரோபொலிடானா), பிப்ரவரி 4 (சான்டியாகோ போர்னபூ) ஆகிய தேதிகள் நடக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com