20 ஆண்டுகளுக்குப் பின்... மீண்டும் எழுகிறதா ஆர்செனல்?

கால்பந்து உலகின் மிகப்பெரிய கிளப் அணியான ஆர்செனல், பல்வேறு சறுக்கல்களை கடந்து தற்போது மீண்டும் ஏறுமுகத்தை கண்டுள்ளது.
Arsenal Football Team
Arsenal Football TeamTwitter

ஆர்செனல் - கால்பந்து உலகின் மிகப் பெரிய கிளப். இங்கிலாந்தில் பல கோப்பைகள் வென்று உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் இந்த அணி, கடந்த சில ஆண்டுகளாக சில சறுக்கல்களைச் சந்தித்தது. 2003-04 சீசனுக்குப் பிறகு பிரீமியர் லீக் அருகில் கூட செல்லத் தடுமாறியது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகக் காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு இந்த சீசன் ஒரு விடையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிக்கான அந்த திசையில் சரியாகவும் பயணித்துக்கொண்டிருக்கிறது அந்த அணி.

38 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காமல் ஆதிக்கம் செலுத்திய ஆர்செனல்!

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிரீமியர் லீகில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது ஆர்செனல். 1997–98, 2001–02, 2003–04 சீசன்களில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதிலும் குறிப்பாக 2003-04 சீசனில் ஒரு தோல்விகள் கூட அடையாமல் 'Invincible'-ஆக முடித்தது ஆர்செனல். பிரீமியர் லீக் வரலாற்றில் 38 போட்டிகளில் ஒன்றில் கூடத் தோற்காமல் தொடரை வென்ற ஒரே அணி ஆர்செனல் தான். தியரி ஆன்றி, ராபர்ட் பெரஸ், பேட்ரிக் வியரா ஆகியோர் அடங்கிய அந்த ஐகானிக் அணியை எந்த கால்பந்து அணியின் ரசிகராலும் மறக்க முடியாது. மேனேஜர் ஆர்சென் வெங்கரின் தலைமையில் ஐரோப்பாவின் மாபெரும் சக்திகளுள் ஒன்றாக உருவெடுத்தது ஆர்செனல்.

Arsenal Football Team
Arsenal Football Team

அந்தக் காலகட்டத்தில் ஆர்செனல் - மான்செஸ்டர் யுனைடட் அணிகளுக்கு இடையிலான யுத்தம் பெருமளவு ரசிக்கப்பட்டது. வெங்கருக்கும், மான்செஸ்டர் யுனைடட் மேனேஜர் அலெக்ஸ் ஃபெர்குசனுக்குமே டச் லைனிலும், பிரஸ் மீட்களிலும் தனி யுத்தம் நடக்கும். ஆனால், அந்த 'இன்வின்சிபிள்' சீசனுக்குப் பிறகு ஆர்செனலின் செயல்பாடு சரியத் தொடங்கியது. செல்சீ, மான்செஸ்டர் சிட்டி அணிகளின் எழுச்சியால், அந்த அணியால் பட்டத்துக்குப் போட்டியிட முடியவில்லை. சீனியர் வீரர்கள் ஒவ்வொருவருத்தராகச் சென்றபின் அவர்களால் சாம்பியன் மோதலில் பங்கேற்க முடியவில்லை. இருந்தாலும் எப்படியேனும் டாப் 4 இடங்களுக்குள் முடித்து சாம்பியன்ஸ் லீக் தொடருக்காவது தகுதி பெற்றுவிடும். ஆனால், வெங்கரின் ஓய்வுக்குப் பிறகு அதுவும் மாறியது!

வீரர்களை தக்கவைப்பதில் சொதப்பிய ஆர்செனல்! மாறிக்கொண்டே இருந்த பயிற்சியாளர்கள்!

17 சீசன்கள் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெற்றுவந்த ஆர்செனலின் பயணம் வெங்கரின் கடைசி சீசனில் முடிவுக்கு வந்தது. 2017-18 சீசனில் ஐந்தாவது இடமே பிடித்த அந்த அணி சாம்பியன்ஸ் லீகுக்கு தகுதி பெறத் தவறியது. ஆனால், அது ஒரிரு சீசன்களில் நடந்த விஷயம் அல்ல. அதற்கு முன்பாகவே பல ஆண்டுகளாக அந்த அணி மீது பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அவர்களின் டிரான்ஸ்ஃபர் பாலிசி. முன்னணி வீரர்களை வாங்குவதிலும், அவர்களை தக்கவைத்துக்கொள்வதிலும் சொதப்பியது ஆர்செனல். அதுவே அவர்கள் லீக்-ஐ வெல்ல முடியாமல் இருந்ததற்கும் காரணமாக அமைந்தது. அதனால், வெங்கரும் அணியின் நிர்வாகமுமே கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அது வெகுகாலம் மாறாமலேயே இருந்தது.

Arsene Wenger
Arsene WengerArsenal Football Team Coach

வெங்கர் ஓய்வுக்குப் பிறகு அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார் உனாய் எமரி. அவர் தலைமையில் ஓரளவு சுமாராகவே விளையாடியது ஆர்செனல். இருந்தாலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காததால், ஒன்றரை ஆண்டுகளிலேயே அவரை வெளியேற்றியது ஆர்செனல். அதன்பிறகு அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஆர்டேடா பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தலைமையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டது அவ்வணி.

உடனடி முடிவுகள் இல்லாவிட்டாலும், வீரர்களின் செயல்பாட்டில் சில முன்னேற்றங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்துக்கான ஒரு நல்ல அணியை உருவாக்குவது என்ற சரியான திட்டத்தோடு கிளப் செயல்படத் தொடங்கியது. கேப்ரியல் மார்டினெல்லி, புகாயோ சகா, எமில் ஸ்மித்-ரோ போன்ற அகாடெமியின் இளம் வீரர்கள் ஜொலிக்கத் தொடங்கினார்கள். முதல் இரு ஆண்டுகள் நல்ல முடிவுகளை கண்ட பிறகு ஆர்டேடாவின் மீது நம்பிக்கை வைத்து அதிக முதலீடும் செய்யத் தொடங்கியது ஆர்செனல் நிர்வாகம். 2022-23 சீசனுக்கு முன்பாக கேப்ரியல் ஜீசுஸ், ஜின்சென்கோ, ஃபேபியோ வியரா போன்ற வீரர்களை வாங்கியது. எதிர்பார்த்தை விடவுமே அந்த சீசனை சிறப்பாகத் தொடங்கியது ஆர்செனல்.

கம்பேக் கொடுத்த ஆர்செனல்! ஆனாலும் எட்டாக்கனியான சாம்பியன் பட்டம்!

சகா, மார்டினெல்லி, ஜீசுஸ், கேப்டன் ஓடகார்ட் ஆகியோர் கோல் மழை பொழிந்தனர். அவர்களின் டிஃபன்ஸும் கைகொடுக்க தொடர்ந்து வெற்றிகள் பெற்றது அந்த அணி. தொடர்ச்சியான வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலும் நீடித்தது. இந்த சீசன் எப்படியோ ஆர்செனல் வெற்றி பெற்றுவிடுமோ என்று அந்த அணி ரசிகர்கள் நினைத்திருக்க, கடைசி கட்டத்தில் வழக்கம்போல் சொதப்பியது அந்த அணி. கடைசி சில போட்டிகளில் வெற்றி பெறத் தவற, மான்செஸ்டர் சிட்டி வழக்கம்போல் சாம்பியன் ஆனது. ஆர்செனல் இரண்டாவது இடத்தில் முடித்தது. சுமார் 248 நாள்கள் பிரீமியர் லீக் ரேஸில் முதலிடத்தில் இருந்த ஆர்செனல், சாம்பியன் பட்டம் வெல்லாமல் அதிக நாள்கள் முதலிடத்தில் இருந்த அணி என்ற சாதனையும் படைத்தது.

Arsenal Football Team
Arsenal Football Team

இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் ஆர்செனல் இதுபோல் விளையாடிப் பார்த்திடாத ஆர்செனல் ரசிகர்களுக்கு இந்த சீசன் ஒரு பெரும் நம்பிக்கையை கொடுத்தது. அந்த சீசனின் முன்னேற்றத்தை சிறப்பாக்கும் வகையில் இந்த சீசனில் இன்னும் சிறப்பாக பிசினஸ் செய்துகொண்டிருக்கிறது ஆர்செனல். அதன் முதல் படியாக 67.5 மில்லியன் பவுண்ட் கொடுத்து செல்சீயிடம் இருந்து ஹாவர்ட்ஸை வாங்கியிருக்கிறது ஆர்செனல். ஏற்கெனவே ஜீசுஸ், மார்டினெல்லி, சகா, ஓடகார்ட், லியாண்ட்ரோ டிரொசார்ட் போன்ற அட்டாகிங் வீரர்கள் இருக்கும்போதும் ஒரு மிகப் பெரிய தொகையை முதலீடு செய்திருப்பது அந்த அணி சரியான பாதையில் பயணிப்பதைக் குறிக்கிறது.

நல்ல வீரர்களை அணிக்குள் கொண்டுவர போராடி வரும் ஆர்செனல்!

அதுமட்டுமல்லாமல் பல ஆண்டு காலமாக அந்த அணிக்குப் பிரச்னையாக இருக்கும் மிட்ஃபீல்டை சரிசெய்ய டெக்லன் ரைஸை வாங்க உறுதியோடு போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது ஆர்செனல். சுமார் 105 மில்லியன் பவுண்ட் கொடுத்து வெஸ்ட் ஹாம் யுனைடட் அணியிலிருந்து அவரை வாங்க முயற்சி செய்துவருகிறது அந்த அணி. அவரை வாங்குவதற்கான போட்டியில் மான்செஸ்டர் சிட்டியையே வென்றிருக்கிறது. மேலும், டிஃபன்ஸையும் பலப்படுத்த இளம் வீரர் யுரியன் டிம்பரை ஒப்பந்தம் செய்யும் முயற்சியும் நடந்துகொண்டிருக்கிறது. இப்படியான பெரும் முதலீடு கடந்த 10 ஆண்டுகளில் ஆர்செனல் செய்திடாத ஒன்று. அதிகபட்சம் ஒரு டிரான்ஸ்ஃபர் விண்டோவுக்கு ஒரு 50 மில்லியன் பவுண்ட் கொடுத்து ஒரு வீரரை வாங்குவார்கள்.

ஆனால், இப்போது வெறும் 3 வீரர்களுக்காக ஒரே விண்டோவில் 250 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறது. ஆர்டேடாவின் புரட்சி அடுத்த கட்டத்தை அடைந்துகொண்டிருக்கிறது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக பிரீமியர் லீக் பட்டம் வென்ற அந்த அணி, இப்போது அதை வெல்வதற்கு சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com