மிஷன் இம்பாசிபிளும் முடிந்துவிட்டது; இனி நிரூபிக்க என்ன இருக்கு? -பெப் கார்டியோலாவின் அடுத்த இலக்கு?

முதல் சீசனிலேயே லா லிகா பட்டத்தை வென்ற கார்டியோலா, ஸ்பெய்னின் நாக் அவுட் கோப்பையான கோபா டெல் ரே கப்பையும் வென்றார்.
pep guardiola
pep guardiolaFile image

பெப் கார்டியோலா - கால்பந்து உலகின் மிகச் சிறந்த மேனேஜர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். தன் வியூகங்களுக்காகப் பெரிதும் கொண்டாடப்படுபவர். பார்சிலோனா, பேயர்ன் மூனிச், மான்செஸ்டர் சிட்டி என மிகப் பெரிய கிளப்களில் பல்வேறு பட்டங்கள் வென்று அசத்தியவர். மான்செஸ்டர் சிட்டி அணியோடு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்வாரா என்று பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த சீசன் அதை நிறைவேற்றிவிட்டார் அவர். இதற்கு மேல் அந்த ஜீனியஸ் பயிற்சியாளர் செய்வதற்கு என்ன இருக்கிறது?

samuel eto'o
samuel eto'o

புகழ்பெற்ற பார்சிலோனா அகாடெமியின் பயிற்சியாளராக இருந்த கார்டியோலா 2008ம் ஆண்டு சீனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அப்போது அந்த அணி மிகப் பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தது. பொறுப்பேற்றதுமே தன் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்தார் கார்டியோலா. ரொனால்டினியோ, டெகோ, சாமுவேல் எட்டோ போன்ற சீனியர் வீரர்களுக்குத் தன் திட்டத்தில் இடமில்லை என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தார். பெரும்பாலான சீனியர் வீரர்களை வெளியேற்றிவிட்டு, தன் அகாடெமியில் இருந்து பல வீரர்களை சீனியர் டீமுக்கு ப்ரமோட் செய்தார். மற்ற அணிகளிலிருந்து பல இளம் வீரர்கள் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். முதல் சீசனிலேயே ஒரு பெரும் புரட்சி தொடங்கியது.

அணி வீரர்களில் மட்டுமல்லாது ஆட்ட ஸ்டைலிலும் பல மாற்றங்கள் கொண்டுவந்தார். டிகி டாகா எனப்படும் ஸ்டைலை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார் அவர். இந்த முறையில் வீரர்கள் பந்தை அதிக நேரம் தங்கள் அணிக்குள்ளாகவே வைத்திருப்பார்கள். வீரர்கள் ஒருவருக்கொருவர் ஒரே டச்சில் தங்களுக்குள் பாஸ் செய்துகொண்டே இருப்பார்கள். இப்படி பால் பொசஷனை எதிரணிக்குக் கொடுக்காமல் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருப்பவர்கள், சரியான தருணத்தில் சரியான வாய்ப்பை உருவாக்கி கோல் நோக்கி முன்னேறுவார்கள். தொடர்ந்து அவர்களிடமே பந்து இருக்கும்போது, எதிரணி வீரர்கள் பந்தை மீட்க ஏதேனும் முயற்சி செய்ய, அந்த நேரத்தில் அவர்கள் அந்த வாய்ப்பை உருவாக்குவார்கள். முதல் சீசனிலேயே இது பெரிய ஹிட் ஆனது. அந்த அணிக்கு ஒரு அடையாளமும் கொடுத்தது. நல்ல முடிவுகளும் கொடுத்தது.

pep guardiola
pep guardiola

முதல் சீசனிலேயே லா லிகா பட்டத்தை வென்ற கார்டியோலா, ஸ்பெய்னின் நாக் அவுட் கோப்பையான கோபா டெல் ரே கப்பையும் வென்றார். இதையெல்லாம் விடப் பெரிதாக அந்த சீசனின் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றது பார்சிலோனா. இப்படித் தன் முதல் சீசனிலேயே லீக், கப், சாம்பியன்ஸ் லீக் என்ற 'டிரெபிள்' வென்று சரித்திரம் படைத்தார் அவர். அதுமட்டுமல்லாமல், சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற இளம் பயிற்சியாளர் (அப்போது வயது 37) என்ற சாதனையும் படைத்தார் அவர்.

இந்த வெற்றிப் பயணம் அதோடு நிற்கவில்லை. அடுத்தடுத்து 3 லா லிகா (2008-09, 2009-10, 2010-11) பட்டங்கள் வென்றார் அவர். இந்தக் காலகட்டத்தில் உலகின் மிகப் பெரிய வீரராக உருவெடுத்தார் லயோனல் மெஸ்ஸி. அவர் மட்டுமல்லாது பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் கால்பந்து உலகில் பெரும் தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கினார்கள். செர்ஜியோ பொஸ்கிட்ஸ், ஜாவி, ஆண்ட்ரே இனியஸ்டா ஆகியோர் அடங்கிய நடுகளம் கால்பந்து உலகத்தால் பெரிதாக கொண்டாடப்பட்டது. 2010-11 சீசனில் தன் இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றார் கார்டியோலா. இப்படி கால்பந்து சிகரத்தின் உச்சியில் நின்றிருந்தவருக்கு, அடுத்த சீசன் ஒரு சிறு சறுக்கல் ஏற்பட்டது. 2011-12 சீசனில் லா லிகா, சாம்பியன்ஸ் லீக் இரண்டையுமே வெல்லத் தவறியது பார்சிலோனா.

pep guardiola
pep guardiola

அதற்கு மேல் அதிர்ச்சியாக, தான் பார்சிலோனாவின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தார் அவர். தான் மிகவும் சோர்வாகிவிட்டதாகத் தெரிவித்த அவர், ஒரு வருடம் கால்பந்து பயிற்சியிலிருந்து ஓய்வெடுத்துக்கொண்டார்.

2013-14 சீசனில் ஜெர்மனியின் பேயர்ன் மூனிச் அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்றார் கார்டியோலா. அங்கு 3 சீசன்கள் பயிற்சியாளராக இருந்தவர், ஒவ்வொரு சீசனிலும் புண்டஸ்லிகா பட்டத்தை வென்றார். ஆனால், பலம் வாய்ந்த பேயர்ன் மூனிச் அணியை வைத்துக்கொண்டு அவரால் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்ல முடியவில்லை. தன் 3 வருட ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபோது, மேலும் அந்த அணியில் தொடர்வதில்லை என்ற முடிவுக்கு வந்தார் அவர். அடுத்த சீசன் மான்செஸ்டர் சிட்டி அணியின் மேனேஜராக பதவியேற்றுக்கொண்டார் அவர்.

pep guardiola
pep guardiola

மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த முதல் வருடமே அவர் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருசிலரோ, 'அவர் ஸ்பெய்ன், ஜெர்மனியில் வென்றுவிட்டார். பிரீமியர் லீக் அந்த லீக்குகள் போல் எளிதானதல்ல' என்றார்கள். முதல் சீசன் என்னவோ அவர்கள் சொன்னதுபோல் கார்டியோலாவுக்கு சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த சீசனே பிரீமியர் லீக் பட்டத்தை வென்றார். தன் வித்தைகளை இங்கிலாந்தில் இறக்கி வைத்தார் அவர். பிரஸ்ஸிங், பாஸிங் மட்டுமல்லாது, தொடர்ந்து அட்டாகிங் வீரர்கள் பொசிஷன் மாறுவது என பல்வேறு முயற்சிகள் செய்தார். 7 ஆண்டுகளில் ஐந்து முறை மான்செஸ்டர் சிட்டியை இங்கிலாந்தின் சாம்பியன் ஆக்கினார் அவர். பிரீமியர் லீகில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது சிட்டி! ஆனால், அவரால் அந்த சாம்பியன்ஸ் லீகை மட்டும் வெல்ல முடியவில்லை.

தொடர்ந்து பல பட்டங்கள் வென்றுவந்திருந்தாலும் சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்லாதது அவருக்கு ஒரு குறையாகவே இருந்தது. அது ஒரு விமர்சனமாகவே முன்வைக்கப்பட்டது. 'மெஸ்ஸி, இனியஸ்டா போன்ற வீரர்களை வைத்துக்கொண்டு கோப்பை வென்றுவிட்டார். மெஸ்ஸி இல்லாத அணியை வைத்துக்கொண்டு அவரால் வெல்ல முடியவில்லை' என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், கார்டியோலா எதற்கும் பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்த புதிரை அவிழ்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டவாரே இருந்தார். 2021-22 சீசனில் தன் புதிய யுக்தியை இறக்கினார் அவர்.

pep guardiola john stones
pep guardiola john stones

எர்லிங் ஹாலண்ட் ஸ்டிரைக்கராக வந்ததும் கோல் அடிக்கும் பிரச்சனை ஓரளவு முடிவுக்கு வந்தது. இருந்தாலும் புதிய முயற்சிகளை அவர் கைவிடவில்லை. தன் அணி இணையற்ற அணியாக இருக்கவேண்டும் என்பதால் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்து வந்தார். நடுகள வீரர்கள், அட்டாகிங் வீரர்கள் தொடர்ந்து தங்கள் பொசிஷன்களை மாற்றி எதிரணிகளுக்கு குழப்பம் ஏற்படுத்துவார்கள். அதையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் அவர். டிஃபண்டர் ஜான் ஸ்டோன்ஸை நடுகளத்துக்குக் கொண்டுவந்த அவரது மாற்றம் பெரிய பலன் கொடுத்தது. யாரும் எதிர்த்து ஆட முடியாத அணியாக மான்செஸ்டர் சிட்டியை மாற்றியது. சாம்பியன்ஸ் லீகில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட் போன்ற அணிகளையெல்லாம் பந்தாடி முதல் பட்டத்தை வென்றது மான்செஸ்டர் சிட்டி. மெஸ்ஸி இல்லாத அணியை வைத்து சாம்பியன்ஸ் லீக் வென்றார் கார்டியோலா. அனைவரின் வாயையும் அடைத்துவிட்டார்.

இப்போது 2022-23 சீசன் தொடங்கிவிட்ட நிலையில், மற்ற அணிகளைப் போல் டாலர்களையும் பவுண்ட்களையும் கொட்டி பெரிதாக அட்டாகிங் வீரர்களை இன்னும் அந்த அணி வாங்கவில்லை. வெளியேறிய கேப்டன் குண்டோகனின் இடத்துக்கு மடியோ கோவசிச்சை வாங்கியது அந்த அணி. கடந்த சீசனில் டிஃபன்ஸில் தொடர்ந்து மாற்றங்கள் செய்து அதை வைத்து எதிரணிகளின் திட்டங்களில் விளையாடிய கார்டியோலா இப்போதும் அதைத்தான் செய்யக் காத்திருக்கிறார். பந்தை எதிரணியின் ஏரியாவுக்குள் கடத்திச் செல்லக் கூடிய ஜாஸ்கோ குவார்டியோலை அவர் வாங்க முற்படுவதாக செய்திகள் வந்திருக்கின்றன. கைல் வாக்கர் வெளியேறினாலும் வெளியேறக்கூடும் என்ற நிலையில், அவருக்குப் பதில் பெஞ்சமின் பவார்ட் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Benjamin pavard
Benjamin pavard

சொல்லப்போனால், கார்டியோலா புதிதாக எதுவும் செய்யவில்லை. ஒருவேளை அவர் திருப்திபட்டிருக்கலாம். 'பார்சிலோனா போன்ற ஒரு அணியில் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தது ஒரு யுகம் போல் இருக்கிறது' என்று கூறிய அவர், இப்போது 7 ஆண்டுகள் மான்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சியாளராக இருந்துவிட்டார். அனைத்தையும் வென்றுவிட்டார். அனைத்தையும் சாதித்துவிட்டார். இனி அவர் நிரூபிக்க எதுவும் இல்லை. ஒருவேளை இதே திருப்திகரமான மனநிலையோடு அவர் தொடர்வாரோ, இல்லை அடுத்த ஆண்டு புதிய ஒரு சவாலை எதிர்நோக்கிப் பயணிப்பாரோ... அது அவருக்கே வெளிச்சம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com