\
2026 கால்பந்து உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின் அணி
2026 கால்பந்து உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின் அணிweb

FIFA உலகக்கோப்பை | படுமோசமாக விளையாடிய அர்ஜென்டினா.. 16 ஆண்டுக்கு பின் கோப்பை வென்றது ஸ்பெயின்!

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது ஸ்பெயின் அணி.
Published on
Summary

உலகக்கோப்பை இறுதியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி எதிர்பாராத வகையில் படுதோல்வி கண்டது. 90 நிமிடங்கள் முழுவதும் கோல் போஸ்டை நோக்கி ஒரு ஷாட்டும் இல்லாமல், மிட்ஃபீல்டு முற்றிலும் செயலிழந்தது. பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்த ஸ்பெயின், கூடுதல் நேரத்தில் ஃபெர்ரன் டார்ரெஸ் அடித்த கோலால் 1-0 என வெற்றி பெற்று, 16 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை மீண்டும் கைப்பற்றியது.

உலகமே எதிர்பார்த்து காத்துக்கிடந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி எந்தவிதமான சுவாரசியமும் இன்றி முடிவுக்கு வந்துள்ளது. உலக சாம்பியனாக இறுதிப்போட்டிக்குள் களம்கண்ட மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, ஒரு படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. போட்டி நேரமான 90 நிமிடங்கள் முழுவதும் கோல் போஸ்ட்டை நோக்கி ஒரு ஷாட்டை கூட அர்ஜெண்டினா அணியால் அடிக்கமுடியாமல் போனது வேடிக்கையாக இருந்தது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்பெயின் அணி கோலடிக்கும் முயற்சியில் இருந்தபோது, அர்ஜெண்டினா அணி எந்தவிதமான எதிர் தாக்குதல்களையும் நிகழ்த்தவில்லை. மாறாக அவர்களுடைய மிட் ஃபீல்டர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற சந்தேகம் எழும் அளவு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நடப்பு உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணியாக அறியப்பட்ட ஸ்பெயின் அணி, போட்டி முழுவதும் பந்தை தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. இருப்பினும் அவர்களுடைய கோலடிக்கும் முயற்சியை எல்லாம் அர்ஜெண்டினா அணி எப்படியாவது தடுத்து நிறுத்தியது. 90 நிமிடங்கள் முழுவதும் ஆட்டத்தில் அதிக தாக்கத்தை ஸ்பெயின் அணி ஏற்படுத்தியிருந்தாலும் அவர்களால் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை.

மெஸ்ஸி
மெஸ்ஸி

போட்டி நேரம் முடிந்து கூடுதல் நேரத்தின் முதல் பாதியிலும் இரண்டு அணிகளாலும் ஒரு கோலை அடிக்க முடியவில்லை. இந்தப்போட்டி எப்படியும் அர்ஜெண்டினா நினைத்ததை போல பெனால்டி ஷூட் அவுட்டுக்கே செல்லும் என நினைத்தபோது தான், ஸ்பெயின் அணியின் ஃபெர்ரன் டார்ரெஸ் 106வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை கோலாக மாற்றி ஸ்பெயின் அணியை முன்னிலை பெறவைத்தார். மீதமிருந்த 15 நிமிடங்களில் அர்ஜெண்டினா அணி போராடினாலும் அவர்களால் ஒரு கோலை கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் 1-0 என நடப்பு சாம்பியனாக களம்கண்ட அர்ஜெண்டினாவை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்று அசத்தியது ஸ்பெயின் அணி.

2010ஆம் ஆண்டு கோப்பை வென்றிருந்த ஸ்பெயின் 2வது முறையாக 2026-ல் வென்று ஒன்றுக்கு மேற்பட்ட கோப்பைகள் வென்ற அணிகளின் பட்டியலில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மெஸ்ஸிக்கு கோல்டன் பால், கோல்டன் பூட் என எந்தவிருதும் கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com