FIFA| காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தியது ஸ்பெயின்.. அரையிறுதியில் ஃபிரான்ஸ் உடன் மோதல்!
2026 ஃபிபா உலகக்கோப்பை 48 அணிகள் பங்கேற்பில் பரபரப்பாக நடைபெற்று, லீக் சுற்றுக்குப் பின் 32, பின்னர் 16 அணிகள் முன்னேறின. ரவுண்ட் 16-ல் பிரேசில், போர்ச்சுகல் வெளியேறிய நிலையில், காலிறுதியில் மொராக்கோவை வீழ்த்தி ஃபிரான்ஸ் அரையிறுதிக்கு வந்தது. இரண்டாவது காலிறுதியில் பெல்ஜியத்தை 2-1 என வீழ்த்திய ஸ்பெயின், 88வது நிமிடத்தில் மைக்கேல் மெரினோ அடித்த கோலால் ஃபிரான்ஸை எதிர்கொள்ளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
2026 ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்ற இத்தொடரானது எதிர்ப்பார்த்ததை விட அசத்தலாகவே நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் 32 அணிகள் தகுதிபெற்ற நிலையில், ரவுண்ட் 32-ல் சிறப்பாக செயல்பட்ட 16 அணிகள் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் ரவுண்ட் 16-ல் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரேசில், போர்ச்சுகல் அணிகள் வெளியேறிய நிலையில், காலிறுதிப்போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்று அசத்தியிருந்தன.
இந்தசூழலில் தான் முதல் காலிறுதியில் மொராக்கோவை வீழ்த்தி ஃபிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று அதிகாலை நடைபெற்ற 2வது காலிறுதிப்போட்டியில் ஸ்பெயின் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் இரண்டு அணிகளும் தலா 1 கோல் அடிக்க இறுதிவரை ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் 88வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ 2வது கோலடித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச்சென்றார்.
முதல் அரையிறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த 2 அணிகளான ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

