Real Madrid | வரலாற்று சாதனை படைத்த ரியல் மாட்ரிட்..!

டார்ட்மண்ட் அணியின் அட்டாக்கர் மார்கோ ரியூஸ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதனால் யார் கோப்பையுடன் விடை கொடுக்கப் போகிறார்கள் என்று பார்க்க அனைவரும் ஆர்வமாய் இருந்தனர்.
Real Madrid
Real MadridReal Madrid

கிளப் கால்பந்து அரங்கின் மிகப் பெரிய தொடரான UEFA சாம்பியன்ஸ் லீகை 15வது முறையாக வென்று சரித்திரம் படைத்தது ரியல் மாட்ரிட். லண்டனில் நடந்த இறுதிப் போட்டியில் பொருஷியா டார்ட்மண்ட் அணியை 2-0 என வீழ்த்தி ஐரோப்பாவின் சாம்பியன் ஆனது அந்து அணி. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ஐந்து முறை இந்தப் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது ரியல் மாட்ரிட்.

2023-24 சாம்பியன்ஸ் லீக் சீசனின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற வெம்ப்ளி மைதானத்தில் நடந்தது. இந்தத் தொடரில் கோலோச்சும் ரியல் மாட்ரிட் வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்தி ஃபைனலுக்கு முன்னேறியது. காலிறுதியில் கடந்த சீசனின் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் பேயர்ன் மூனிச் என இரு பெரிய அணிகளை கடைசி தருணத்தில் வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது அந்த அணி.

அதேசமயம் யாருமே எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பொருஷியா டார்ட்மண்ட். காலிறுதியில் அத்லெடிகோ மாட்ரிட், அரையிறுதியில் பி.எஸ்.ஜி என இரு பெரிய அணிகளை அப்செட் செய்தது அந்த அணி. அதனால் மாட்ரிட்டுக்கும் அந்த அணி அப்படி ஒரு அப்செட் கொடுக்கும் என்று கால்பந்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.

அதுமட்டுமல்லாமல் இரு பெரும் ஜாம்பவான்களுக்கு இது முக்கியப் போட்டியாக அமைந்தது. ரியல் மாட்ரிட் நடுகள வீரர் டோனி குரூஸ் இந்தப் போட்டிக்குப் பிறகு கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டார்ட்மண்ட் அணியின் அட்டாக்கர் மார்கோ ரியூஸ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதனால் யார் கோப்பையுடன் விடை கொடுக்கப் போகிறார்கள் என்று பார்க்க அனைவரும் ஆர்வமாய் இருந்தனர்.

போட்டி தொடங்கியதிலிருந்து மிகவும் பரபரப்பாகச் சென்றது. ரியல் மாட்ரிட் அணி பந்தை பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. ஆனால் அவர்களால் அட்டாக்கில் பெரிதாக ஈடுபட முடியவில்லை. அதேசமயம் டார்ட்மண்ட் அணியோ தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி ரியல் மாட்ரிட்டுக்கு சவால் கொடுத்தது. அடியெமி, ஃபுல்க்ரூக் ஆகியோருக்கு முதல் அரை மணி நேரத்தில் சில நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவர்களால் அதை கோலாக்க முடியவில்லை. மாட்ரிட் கோல்கீப்பர் கோர்ட்வா தன்னுடைய சாதுரியத்தால் டார்ட்மண்ட் அணியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். இறுதியில் முதல் பாதி 0-0 என முடிந்தது.

முதல் பாதியில் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தாத ரியல் மாட்ரிட் அட்டாக்கர்கள் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் டார்மண்டுக்கு தலைவலியை ஏற்படுத்தினர். ஆனால் அதை அவர்களால் கோலாக்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டு அணிகளும் போராடிக்கொண்டே இருக்க, கோல் மட்டும் வரவேயில்லை.

ரியல் மாட்ரிட் போன்ற ஒரு அணி எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் வெற்றியை வசப்படத்தக்கூடியது. காலம் காலமாக அதை அந்த அணி செய்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு அணிக்கு எந்தவொரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தாலும் அது பிரச்சனை தான். பொருஷியா டார்ட்மண்ட் ஒரு கண நேர தவறால் மாட்ரிட்டுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கிகொடுத்தது. இயான் மாட்சன் ஒரு பந்தை சரியாக கிளியர் செய்யாமல் விட, ரியல் மாட்ரிட்டுக்கு கார்னர் கிடைத்தது. 74வது நிமிடத்தில் குரூஸ் கொடுத்த கிராஸை கர்வஹல் ஹெட்டர் மூலம் கோலாக்கினார். அதன்பிறகும் மாட்ரிட் அடுத்தடுத்து சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் 83வது நிமிடத்தில் டார்மண்ட் அணியே மீண்டும் அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. இயான் மேட்சன் கொடுத்த ஒரு மோசமான பாஸ், பெனால்டி ஏரியாவுக்குள் இருந்த ஜூட் பெல்லிங்கம் கால்களுக்கு நேராகச் செல்ல, அதை அவர் வினிஷியஸுக்கு பாஸ் செய்தார். மிகவும் எளிதாக அதை கோலாக்கினார் வினிஷியஸ். ரியல் மாட்ரிட் அந்த மகத்தான கோப்பையை மீண்டும் வென்றது.

இந்த சீசன் தொடங்கியபோதே ரியல் மாட்ரிட் அணிக்கு அடி மேல் அடி விழுந்தது. அந்த அணியின் முன்னணி டிஃபண்டர்கள் டேவிட் அலாபா, எடர் மிலிடாவ், ஆன்டனி ருடிகர், கோல்கீப்பர் கோர்ட்வா என வீரர்கள் பலரும் காயத்தால் வெளியேறியிருந்தார்கள். கடைசியில் 34 வயது நாசோ, மிட்ஃபீல்டர் சுவாமெனி ஆகியோரையெல்லாம் வைத்து சமாளித்தார் கார்லோ ஆன்சலோட்டி. கிளப் கேப்டன் கரிம் பென்சிமா வெளியேறியிருந்த நிலையில், யார் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஒரு மிகப் பெரிய ஸ்டிரைக்கரின் இடத்தில் ஜூட் பெல்லிங்கம் போன்ற நடுகள வீரரைத்தான் அந்த அணி வாங்கியிருந்தது. ஆனால் அவரை வைத்து ஒரு புதிய புதிய சிஸ்டத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் ஆன்சலோட்டி. இதன்மூலம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் மேனேஜர் என்ற சரித்திரம் படைத்திருக்கிறார் அவர். அதுபோக, இந்த கடினமான சீசனில் லா லிகா கோப்பையையும் வென்று அசத்தியிருக்கிறார் 'டான்' கார்லோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com