முதலிடத்தில் லிவர்பூல், தடுமாறும் யுனைடட், செல்சீ... பிரீமியர் லீக் Half Time ரிவ்யூ!

சீசன் தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பு பயிற்சியாளர் ஜூலன் லோபடூகியை வெளியேற்றிவிட்டு கேரி ஓ நீலை ஒப்பந்தம் செய்தது வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணி.
Liverpool
LiverpoolJon Super

பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீகின் முதல் பாதி முடிவடைந்திருக்கிறது. 38 போட்டிகள் கொண்ட சீசனில் 19 சுற்றுகள் முடிவடைந்துவிட்டன. இந்தக் கட்டத்தில் ஒவ்வொரு அணிகளும் எந்த இடத்தில் இருக்கின்றன, யாரெல்லாம் பட்டத்துக்கு போட்டியிடுகின்றனர், எந்த அணிகள் தங்கள் சீசனை சிறப்பாகத் தொடங்கியிருக்கின்றன, எத்தனை மேனேஜர்கள் தங்கள் பதவியை இழந்திருக்கின்றனர்... ஓர் அலசல்.

யார் டாப்?

Jon Super

முதல் 19 சுற்றுகள் முடிவில் லிவர்பூல் அணி 42 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. சீசன் தொடக்கத்தில் அந்த அணியின் புதிய நடுகளம் மீது பெரும் கேள்விகள் இருந்தன. ஆரம்ப கட்ட போட்டிகளில் அது வெளிப்படையாகவும் தெரிந்தது. ஆனால், அதையெல்லாம் சிறப்பாகக் கையாண்டு தன் அணியை நன்கு கட்டமைத்துவிட்டார் ஜார்ஜன் கிளாப். டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறது அந்த அணி. அதிலும் கூட 2 வீரர்கள் ரெட் கார்ட் பெற்றிருந்த லிவர்பூல், கடைசி வரை சமனிலையை தக்கவைத்திருந்தது. அந்த அளவுக்கு இந்த சீசன் முழுவதுமே போராட்ட குணத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது அந்த அணி. வழக்கம்போல் அந்த அணியின் சூப்பர் ஸ்டார் முகமது சலா 12 கோல்கள் அடித்து அவர்களின் துருவநட்சத்திரமாய் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

லிவர்பூல் சிறப்பாகத் தொடங்கியிருந்தாலும், அந்த அணிக்கு கடும் போட்டி நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. முந்தைய சுற்று வரை ஆர்செனல் தான் முதலிடத்தில் இருந்தது. கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் அட்டகாசமாக சீசனைத் தொடங்கிய ஆர்டேடாவின் அணி, கடைசி 4 போட்டிகளில் மட்டும் 8 புள்ளிகளை தவறவிட்டிருக்கிறது. அதுவே அவர்கள் இரண்டாவது இடத்துக்குப் பின்தங்க காரணமாக அமைந்திருக்கிறது. கடந்த சீசன் கடைசி கட்டத்தில் இப்படித்தான் அந்த அணி சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பின்வாங்கியது. இப்போது அது முன்பே நடக்கத் தொடங்கியிருக்கிறது.

Kirsty Wigglesworth

நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டியும் கூட நல்ல தொடக்கத்துக்குப் பிறகு கடந்த சில வாரங்களாக சில புள்ளிகளை இழந்திருக்கிறது. ஒடுகட்டத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் அந்த அணி ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்தது. கடைசி 7 போட்டிகளில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது சிட்டி. இப்போது 37 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது அந்த அணி. இருந்தாலும் மற்ற அணிகளை விட ஒரு போட்டி குறைவாகவே ஆடியிருக்கிறது. அதனால் அந்த வெற்றி அவர்களை இரண்டாவது இடத்துக்குக் கொண்டுவரக்கூடும். இருந்தாலும், மான்செஸ்டர் சிட்டி இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்றே ஆகவேண்டும். கெவின் டி புருய்னா, எர்லிங் ஹாலண்ட், டொகு என முன்னணி வீரர்களின் காயமும் அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது. நடுகளத்தில் ராட்ரி இல்லையென்றால் அவர்களின் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிகிறது. அதையெல்லாம் கார்டியோலா அடுத்த பாதியில் சரியாகக் கையாளவேண்டும்.

சர்ப்ரைஸ் பேக்கேஜ்

இந்த சீசனின் சர்ப்ரைஸ் பேக்கேஜாக அமைந்திருப்பது ஆஸ்டன் விலா. 39 புள்ளிகளுடன் தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது உனாய் எமரியின் அணி. அட்டகாசமாக அட்டாக் செய்யும் அந்த அணி, ஆர்செனல், மான்செஸ்டர் சிட்டி, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் போன்ற முன்னணி அணிகளையெல்லாம் வீழ்த்தி அசத்தியிருக்கிறது. கடந்த 2 சுற்றுகளாக வெற்றி பெறத் தவறியிருக்கும் அந்த அணியின் கடிவாளத்தை எமரி இழுத்துப் பிடித்தால் நிச்சயம் சாம்பியன்ஸ் லீகை உறுதி செய்திடலாம்.

சொல்லப்போனால் டாட்டன்ஹாம் ஹாட்ஸபர் கூட இந்த சீசனில் சர்ப்ரைஸ் தான். ஹேரி கேன் வெளியேறியது, புதிய பயிற்சியாளர் போன்ற விஷயங்கள் அந்த அணியை பின்தங்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய பயிற்சியாளர் ஆஞ்சி போஸ்டகாக்லூ தன் அட்டாகிங் கேம் மூலம் அணியை சிறப்பாக ஆடவைத்துக்கொண்டிருக்கிறார். அனைவருமே அந்த அணியின் கேமை ரசிக்கும்படி மாற்றியிருக்கிறார்.

தடுமாற்றங்கள்

போன சீசனில் நடந்தது தான் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. மான்செஸ்டர் யுனைடட், செல்சீ அணிகள் இந்த சீசன் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவருகின்றன. யுனைடட் அணி ஏழாவது இடத்தில் இருந்தாலும் 8 போட்டிகள் தோற்றிருக்கிறது. அந்த அணியின் ரசிகர்கள் பெரும் விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றனர். செல்சீ அணியோ கடந்த சீசனின் தடுமாற்றத்தை இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிறிய அணிகளிடமும் கூட வெற்றி பெற தடுமாறுகிறது. டென் ஹாக், பொஷடினோ இருவருமே தங்கள் அணியின் செயல்பாட்டை மேம்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

ரிலகேஷன் யுத்தம்

கடைசி 3 இடங்களில் லுட்டன் டவுன் (15 புள்ளிகள்), பர்ன்லி (11 புள்ளிகள்), ஷெஃபீல்ட் யுனைடட் (9 புள்ளிகள்) அணிகள் இருக்கின்றன. தொடக்கத்தில் பெரிய அளவு தடுமாறிய லுட்டன் டவுன், ஹோம் ஆட்டங்களில் சிறப்பாக செயல்படத் தொடங்கியிருக்கிறது. அதனால் ஓரளவு புள்ளிப் பட்டியலில் முன்னேறிவிட்டது. மேலே இருக்கும் அணிகளை விட அந்த அணி 1 ஆட்டம் குறைவாக வேறு விளையாடியிருக்கிறது. அதனால் அதுவும் அவர்களுக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. 10 புள்ளிகள் குறைக்கப்பட்டதால் எவர்டன் 16 புள்ளிகளுடன் 17வது இடத்தில் இருக்கிறது. வழக்கம்போல் ஷான் டைச் தன் அணியை ரிலகேஷனில் இருந்து காப்பாற்றிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேனேஜர் மாற்றங்கள்

சீசன் தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பு பயிற்சியாளர் ஜூலன் லோபடூகியை வெளியேற்றிவிட்டு கேரி ஓ நீலை ஒப்பந்தம் செய்தது வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் அணி. நிர்வாகத்தோடு லோபடூகி பிரச்னையில் ஈடுபட்டதால் அவர் வெளியேற்றப்பட்டார். ஷெஃபீல்ட் யுனைடட் அணி தொடர்ந்து தடுமாறியதால், அந்த அணி தங்கள் பயிற்சியாளர் பால் ஹெக்கிங்பாட்டத்தை நீக்கிவிட்டு முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ் வைல்டரை மீண்டும் ஒப்பந்தம் செய்தது. சீசனின் நடுவே நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணி புள்ளிகளைத் தவறவிட்டதால், ஸ்டீவ் கூப்பர் வெளியேற்றப்பட்டார். முன்னாள் வோல்வ்ஸ் பயிற்சியாளர் நூனோ எஸ்பரிட்டோ சான்டோ அவர் இடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com