FIFA WC 2026 | ரொனால்டோ ஆட்டத்தால் ரசிகர்கள் ஏமாற்றம்.. மெஸ்ஸியுடன் ஒப்பிட்டு மீம்ஸ்!
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் 48 அணிகளும் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடி உள்ளன. பிரிவுக்கு 4 அணிகள் வீதம் மொத்தம் 12 பிரிவுகளாக குரூப் சுற்று நடைபெறுகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்த படியே ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஜோவா நெவாஸ்(João Neves), போர்ச்சுகல் அணிக்காக முதல் கோல்-ஐ பதிவு செய்தார்.
இந்த ஆட்டத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடினார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்ட நேரத்தில் சுமார் 75 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போர்ச்சுகல். அதன் மூலம் சுமார் 769 பாஸ்களை களத்தில் மேற்கொண்டது. இதில் மூன்று ஷாட்களை மட்டுமே ஆன் டார்கெட்டில் போர்ச்சுகல் அணி வைத்தது.
மறுபக்கம் காங்கோவின் தடுப்பாட்டம் அற்புதமாக இருந்ததோடு கிடைக்கும் வாய்ப்பில் அட்டாக்கிங் கேமும் ஆடி அசத்தியது. முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் காங்கோ அணி Goal பதிவு செய்தது. காங்கோ அணிக்காக ஜோவன் விசா அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். அதன் பின்னர் இரு அணியும் Goal பதிவு செய்யவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற Goal கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் பந்தை மொத்தம் 25 முறை டச் செய்திருந்தார் ரொனால்டோ. இதில் 19 பாஸ்களை போட்டிருந்தார். பந்தை ஆன் டார்கெட்டை நோக்கி ஒரு ஷாட் கூட அவர் இந்த ஆட்டத்தில் ஆடவில்லை.
41 வயதான அவருக்கு இது ஆறாவது உலகக் கோப்பை தொடராகும். மற்ற அணிகளில் உள்ள நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் ஆகியோர் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கோல் பதிவு செய்த நிலையில் ரொனால்டோ தனது Goal கணக்கை தொடங்காமல் உள்ளது அவரது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், அல்கெரியா அணிக்கு எதிராக விளையாடிய அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்-ஐ அடித்தது அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரொனால்டோவின் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளதால், ரொனால்டோவையும் மெஸ்ஸியையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சனங்களையும் மீம்ஸ்-களையும் பறக்கவிட்டு வருகின்றனர்.

