சவுதி கிளப்பில் நெய்மார்... ஆண்டு சம்பளம் ஆயிரம் கோடிக்கு மேல்..!

நெய்மாரை 90 மில்லியன் யூரோ (சுமார் 800 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியிருக்கிறது அல் ஹிலால்.
Neymar
NeymarAP

சவுதி அரேபிய கிளப்பான அல் ஹிலால் அணியில் இணைந்திருக்கிறார் பிரேசில் சூப்பர் ஸ்டார் நெய்மார். அவரை சுமார் 90 மில்லியன் யூரோவுக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியிடமிருந்து வாங்கியிருக்கிறது அல் ஹிலால். 2 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கும் நெய்மார், ஆண்டுக்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 1250 கோடி ரூபாய் ஊதியமாகப் பெறுவார் என்று கூறப்படுகிறது.

Alex Ferguson - Ronaldo
Alex Ferguson - Ronaldo

கிளப் கால்பந்து உலகில் சவுதி அரேபிய கிளப்கள் மாபெரும் எழுச்சி கண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் கிறிஸ்டியானோ ரொனால்டோ திடீரென சவுதி அரேபிய கிளப்பான அல் நசர் அணியில் இணைந்தபோது அது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் ரொனால்டோ. அப்பொது அது அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக பல முன்னணி வீரர்களும் சவுதி அரேபியாவுக்குப் படையெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பெரிய வீரரையும் சவுதி கிளப்கள் வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. அந்த முயற்சிகளின் சமீபத்திய பலன் தான் நெய்மார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்குப் பிறகு கால்பந்து உலகின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்டவர் நெய்மார். தன் அற்புத ஸ்டைலால் பெரும் ரசிகர் படையை சம்பாதித்தார். பார்சிலோனா அணியில் மெஸ்ஸியுடன் இணைந்து பல மாயங்கள் நிகழ்த்தினார். அங்கு பல கோப்பைகள் வென்றிருந்தாலும், அவரால் மெஸ்ஸி அளவுக்கான புகழை அடைய முடியவில்லை. பார்சிலோனாவில் எது நடந்தாலும் அது மெஸ்ஸியின் வெற்றியாகவே பார்க்கப்பட, தனக்கான தனி அடையாளத்தைத் தேடிக்கொள்ள முடிவு செய்தார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 222 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அவரது ரிலீஸ் கிளாஸை செலுத்தி அவரை பிரான்ஸுக்கு அழைத்துச் சென்றது. அங்கு கோப்பைகள் வென்றாலும், அவரால் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 3-4 ஆண்டுகளாக தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டார் அவர். ஒரு சீசனையும் அவரால் முழுமையாக கடக்க முடியவில்லை. நெய்மாரின் காலம் அவ்வளவு தான் என்று பலரும் பேசத் தொடங்கிய நிலையில், பிஎஸ்ஜி அணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார் அவர். மீண்டும் அவரை வாங்க பார்சிலோனா முயற்சி செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. அல் ஹிலால் அணி அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் வந்தன. இறுதியாக அவர் அல் ஹிலால் அணியில் இணைந்திருக்கிறார். அவரை 90 மில்லியன் யூரோ (சுமார் 800 கோடி ரூபாய்) கொடுத்து வாங்கியிருக்கிறது அல் ஹிலால். 2 ஆண்டுகள் அந்த அணியோடு ஒப்பந்தம் செய்திருக்கும் நெய்மாரின் ஊதியம் ஆண்டுக்கு சுமார் 1250 கோடி ரூபாய்!

அல் ஹிலால் அணிக்கு ஒப்பந்தம் செய்திருப்பது பற்றிப் பேசிய நெய்மார், "ஐரோப்பாவில் நான் பல விஷயங்களை சாதித்துவிட்டேன். நிறைய ஸ்பெஷலான தருணங்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால் நான் எப்போதுமே உலகளாவிய நட்சத்திரமாக இருக்கவேண்டும் என்றும் என்னை நானே புதிய சவால்களுக்கும் வாய்ப்புகளுக்கும் உட்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன். நான் புதிய சரித்திரம் படைக்க விரும்புகிறேன். பல தரமான வீரர்களைக் கொண்டிருக்கும் சவுதி ப்ரோ லீக், பெரும் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியம் இருக்கிறது. இந்தத் தொடரைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அங்கு விளையாடிய பல பிரேசில் வீரர்களை நான் பின்தொடர்ந்திருக்கிறேன். அல் ஹிலால் ஆசியாவின் மிகச் சிறந்த அணியாக விளங்குகிறது. இந்த கிளப்பில் இணைவது சரியான முடிவு என்று எனக்குப்பட்டது. கோல்கள் அடிப்பதும், கோப்பைகள் வெல்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை சவுதியிலும் தொடர விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அல் ஹிலால் அணியில் ஏற்கெனவே இரண்டு பிரேசில் வீரர்கள் இருக்கிறார்கள். அதிகம் பிரபலமடையாத ஃபார்வேர்டான மைக்கேலை 2022ம் ஆண்டே ஒப்பந்தம் செய்துவிட்டது அந்த அணி. மால்கமை இந்த ஆண்டு சவுதி புரட்சியின்போதுதான் வாங்கியது. அவர்கள் மட்டுமல்லாமல் டிஃபண்டர் கலிடூ கூலிபாலி, மிட்ஃபீல்டர்கள் ரூபன் நெவஸ், செர்கே மிலின்கோவிச்-சாவிச் போன்ற சூப்பர் ஸ்டார் பிளேயர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள். அவர்களோடு இணைந்திருக்கும் நெய்மார், அந்த அணியின் தரத்தை பலமடங்கு உயர்த்தவிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com