இந்தியாவில் ஆடப்போகிறார் நெய்மார்! AFC சாம்பியன்ஸ் லீக் ஒரே பிரிவில் அல் ஹிலால், மும்பை சிட்டி!

ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிளப்கள் மோதும் இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில், இந்தியாவின் சார்பில் இந்த சீசனில் விளையாட மும்பை சிட்டி அணி தகுதி பெற்றிருக்கிறது.
afc champions league
afc champions leaguept web

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் வீரரான நெய்மார் இந்த ஆண்டு இந்தியாவில் வந்து விளையாடப் போகிறார். இது ஏதோ காட்சிப் போட்டியில்லை, ஆசியாவின் மிகப் பெரிய தொடரான AFC சாம்பியன்ஸ் லீக் போட்டிக்காக!

நெய்மார் தற்போது இணைந்திருக்கும் அல் ஹிலால் அணியும், இந்தியாவின் மும்பை சிட்டி அணியும் 2023-24 சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. அதனால் மும்பை சிட்டிக்கு எதிரான போட்டியில் விளையாட நெய்மார் இந்தியா வரவிருக்கிறார்.

AFC சாம்பியன்ஸ் லீக்:

ஆசியாவின் மிகப் பெரிய தொடராகக் கருதப்படும் AFC சாம்பியன்ஸ் லீக். ஐரோப்பாவில் நடக்கும் UEFA சாம்பியன்ஸ் லீக் போல, ஆசியாவின் சாம்பியன்ஸ் லீக் தொடர் இது. ஆசியாவின் முன்னணி கால்பந்து கிளப்கள் பங்கேற்கும் இந்தத் தொடர் கடந்த 56 ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஆனால் 32 அணிகளுக்கு மாற்றாக, இந்தத் தொடரில் 40 அணிகள் பங்கேற்கும். அந்த அணிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு 2 போட்டிகளில் (ஹோம் மற்றும் அவே ஃபார்மட்) மோதும். முதலிடம் பெறும் 10 அணிகள் நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற, இரண்டாவது இடம் பிடித்த கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தலா 3 அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சீசனுக்கான AFC சாம்பியன்ஸ் லீக் வரும் செப்டம்பர் 18 முதல் 2024 மே 18 வரை நடக்கிறது. 32 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்த நிலையில், மீதமிருக்கும் 8 அணிகளைத் தேர்வு செய்வதற்கு தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. ஆகஸ்ட் 15 முதல் 22 வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நசர் அணி கூட இந்தத் தகுதிச் சுற்றில் மோதி தான் AFC சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெற்றது. 40 அணிகளும் உறுதியாகியிருந்த நிலையில் இன்று காலை 10 பிரிவுகளில் இடம்பெறும் அணிகளை முடிவு செய்யும் டிரா நடந்தது.

மும்பை சிட்டி எஃப்சி & அல் ஹிலால்:

ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிளப்கள் மோதும் இந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில், இந்தியாவின் சார்பில் இந்த சீசனில் விளையாட மும்பை சிட்டி அணி தகுதி பெற்றிருக்கிறது. கடந்த 2022-23 ஐஎஸ்எல் சீசனில் லீக் பட்டம் வென்றதால், இத்தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது மும்பை சிட்டி. இந்நிலையில், இன்று டிரா நடைபெறுவதாக இருந்ததால், இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

ஏனெனில், இந்தத் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நசர் அணி, நெய்மாரின் அல் ஹிலால் அணி, கரிம் பென்சிமாவின் அல் இட்டிஹாட் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்தன. கடந்த சில மாதங்களாக சவூதி அரேபிய கிளப்கள் பெரும் தொகை செலவளித்து சூப்பர் ஸ்டார்களை வாங்கி வருவதால், அந்த சூப்பர் ஸ்டார்களோடு இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க முடியும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் மும்பை சிட்டியின் ஹோம் லீக் போட்டியில் விளையாட அவர்கள் இந்தியா வரவிருக்கும் என்பதால் ரொனால்டோவோ நெய்மாரோ இல்லை மென்சிமாவோ இந்தியா வந்தால் நன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற AFC சாம்பியன்ஸ் லீக் டிராவில் மும்பை சிட்டி எஃப்சி அணி நெய்மாரின் அல் ஹிலால் அணியோடு 'டி' பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. அதனால் நெய்மார் இந்தியா வருவது உறுதியாகியிருக்கிறது. நெய்மார் மட்டுமல்ல, ஐரோப்பிய கால்பந்தில் கோலோச்சிய கலிடு கூலிபாலி, அலெக்சாண்டர் மிட்ரோவிச், செர்கே மிலின்கோவிச்-சாவிச், ரூபென் நெவவஸ், மால்கம், யூனுஸ் பூனு என பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அதனால், அவர்கள் அனைவரும் மும்பை சிட்டி அணியோடு மோதுவதை நம்மால் கண்டுகளிக்க முடியும்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com