அடேங்கப்பா..! இத்தனை கோடிகளா? துபாயில் பிரமாண்ட சொகுசு பென்ட்ஹவுஸை விலைக்கு வாங்கும் நெய்மர்!
நவீன கால்பந்து உலகில் ஜாம்பவன் வீரர்களாக வலம்வருபவர்களில் பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரராக திகழும் நெய்மர் ஜூனியரும் ஒருவர். தனது அபார திறமையினால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வரும் இவர், பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த மறைந்த ஜாம்பவான பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார். 3 முறை உலகக் கோப்பையை வென்ற லெஜண்ட் பீலே 92 ஆட்டங்களில் விளையாடி 77 கோல்கள் அடிந்திருந்த நிலையில், நெய்மர் 79 கோல்கள் அடித்து பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
கடந்தாண்டில் தான் விளையாடிவந்த பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப் அணியிலிருந்து விலகி சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்ததின் படி 2025-ம் ஆண்டு வரை அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணிக்காக நெய்மர் விளையாடுவார் என்று சவுதி புரோ லீக் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில்தான், துபாயில் உள்ள சொகுசு பென்ட்ஹவுஸ் ஒன்றை நெய்மர் விலைக்கு வாங்கியிருப்பதாகவும், நீச்சல் குளம், கார் லிஃப்ட் போன்ற அதிநவீன வசதிகளுடன் இருக்கும் அந்த ரெசிடன்ஸியின் விலை ரூ.456 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.456 கோடியில் கண்கவரும் பென்ட்ஹவுஸ்..
அந்த பென்ட்ஹவுஸானது 44,000 சதுர அடியில் பரந்து விரிந்த கனவு இல்லமாக, லக்ஸரி லைஃப்ஸ்டலை வழங்கும் அறைகளையும் கொண்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஒரு தனியார் குளம் மற்றும் சொகுசு கார்களை நேரடியாக அவரது இல்லத்திற்கே கொண்டு செல்லும் கார் லிப்ட் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது. உடன் துபாய் நகரின் காட்சிகளையும் கண்டுகளிக்கும் வகையில் வசதிகளை வழங்குகிறது.
மேலும் புகாட்டி ரெசிடென்ஸ்ஸில் 182 குடியிருப்புகள் உள்ளன, அவை பிரெஞ்சு-ரிவியரா போன்ற கடற்கரை, உடற்பயிற்சி மையம், பரந்த காட்சிகளை வழங்கும் குளம், ஸ்பா மற்றும் செஃப் டேபிள், வாலட், ஓட்டுநர் மற்றும் வரவேற்பு சேவைகள், உறுப்பினர்களுக்கு மட்டுமேயான கிளப் மற்றும் இரண்டு கேரேஜ் முதல் பென்ட்ஹவுஸ் கார் லிஃப்ட் போன்ற கூடுதல் வசதிகள் அதன் கவர்ச்சியை அதிகரிக்கின்றன.
பிரேசிலில் மலை வாழ் மக்கள் வாழக்கூடிய மோகி தாசு குருசெசு என்ற கிராமத்தில், பள்ளிகள், கால்பந்து மைதானங்கள் என்று எதுவும் இல்லாத பகுதியில் வளர்ந்து, தானாக கால்பந்து கற்று கொண்ட நெய்மர், தன் திறமையால் உச்சத்திற்கு சென்றுள்ளார்.