”இதை எட்டுவேன் என நினைக்கவே இல்லை” - பிரேசில் அணிக்காக அதிக கோல்.. பீலே சாதனையை முறியடித்த நெய்மர்!

பிரேசிலுக்காக அதிக கோல் அடித்த கால்பந்து வீரர் என்ற பீலேவின்சாதனையை முறியடித்தார் நெய்மர்.
பீலே, நெய்மர்
பீலே, நெய்மர்ட்விட்டர்

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பிரேசில் - பொலிவியா இடையேயான ஆட்டம் நேற்று (செப்டம்பர் 8) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ரோட்ரிகோ, நெய்மர் தலா இரண்டு கோல்களையும், ரஃபின்ஹா 1 கோலும் அடித்தனர்.

இதன்மூலம் 5க்கு 1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி, பொலிவியா அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நெய்மர் இரண்டு கோல்களை அடித்தார். இதன்மூலம் பீலேவை பின்னுக்குத் தள்ளி பிரேசில் அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை நெய்மர் பெற்றார். இந்த போட்டி தொடங்கி 17வது நிமிடத்தில் பீலேவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு நெய்மருக்கு கிடைத்தது.

அவரது அணி அவருக்கு ஒரு ஸ்பாட் கிக் வழங்கியது. இருப்பினும் நெய்மரின் பெனால்டி ஷாட்டை பொலிவியன் கோல்கீப்பர் கில்லர்மோ விஸ்காரா தடுத்தார். ஆனால் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, நெய்மருக்கு அந்த பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அதைச் சரியாக பயன்படுத்திக்கொண்ட நெய்மர், பந்தை பொலிவியாவிற்கு எதிராகக் கோலை பதிவு செய்தார்.

பொலிவியாவுக்கு எதிரான ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக நெய்மர் தனது 78வது கோலை அடித்தார். 5-1 என்ற கணக்கில் பிரேசிலின் நான்காவது கோலாக இது பதிவானது. நெய்மருக்கு காயம் ஏற்பட்டபோதிலும் பிரேசிலின் கடைசி கோலையும் அடித்தார்.

இதன்மூலம், பிரேசில் அணிக்காக நெய்மர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது. இதனால் பிரேசில் அணி தகுதிச்சுற்றில் அபார வெற்றிபெற்றது. 31 வயதான நெய்மர், தற்போது, தனது அணிக்காக 125 போட்டிகளில் 79 கோல்களை அடித்து, பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

பீலேவின் சாதனையை முறியடித்ததற்காக பிரேசிலிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் எட்மண்டோ ரோட்ரிக்ஸ், நெய்மருக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். அதன்பிறகு பேசிய நெய்மர், “நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த சாதனையை நான் எட்டுவேன் என்று நினைக்கவே இல்லை” என்றார். நெய்மர் கடந்த மாதம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்பில் இருந்து வெளியேறி, சவுதி அரேபிய கால்பந்து கிளப்பான அல்-ஹிலாலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கால்பந்து வீரராகக் கருதப்படும் பீலே, 1957ஆம் ஆண்டுமுதல் 1971ஆம் ஆண்டுவரை பிரேசில் அணிக்காக 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்து உள்ளார். பீலே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது 82வது வயதில் காலமானார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com