கிளப் உலகக்கோப்பை| வெளியேறியது இன்டர் மியாமி.. 1 கோலில் Ronaldo-ன் உலக சாதனையை தவறவிட்ட மெஸ்ஸி!
2025 கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரானது ஜூன் 14 முதல் ஜூலை 13 வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதற்குமுன்பு ஏழு அணிகள் பங்கேற்ற இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 32 அணிகள் பங்கேற்கும் தொடராக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த திட்டமிட்டு நடைபெற்றுவருகிறது.
லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி இத்தொடரில் இடம்பெற்றிருந்த நிலையில், PSG அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4-0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்த இன்டர் மியாமி நடப்பு FIFA கிளப் உலகக் கோப்பையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
இந்நிலையில் ஒரு கோல் வித்தியாசத்தில் ரொனால்டோவின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மெஸ்ஸி இழந்துள்ளார்.
உலக சாதனையை முறியடிக்க தவறிய மெஸ்ஸி..
லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமியை 4-0 என தோற்கடித்த PSG காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது. இப்போட்டியில் ஒரு கோலை அடிக்க முடியாத மெஸ்ஸி மற்றும் இன்டர் மியாமி சோகமுகத்துடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதன்மூலம் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக, 7 கோல்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார் ரொனால்டோ. 6 கோல்களுடன் லிஸ்ட்டில் பின்தங்கியிருக்கும் மெஸ்ஸி, ரொனால்டோவின் சாதனையை முறியடிக்க தவறினார்.
தற்போது கிளப் உலகக்கோப்பை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பதால், 38 வயதாகும் மெஸ்ஸி இதற்குமேல் கிளப் உலகக்கோப்பையில் பங்கேற்க வாய்ப்பில்லை. இதனால் கிளப் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஒரே வீரராக ரொனால்டோ முன்னிலையில் நீடிக்கிறார்.
நடப்பு கிளப் உலகக்கோப்பை தொடரில் ரொனால்டோ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.