’கேரளாவிற்கு வரும் மெஸ்ஸி..' நட்பு போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா! உறுதிசெய்த AFA!
கேரளாவில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நட்புப் போட்டியில் விளையாடவுள்ளது. கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். AFA-வும் இதை உறுதிசெய்துள்ளது. கேரளா ரசிகர்கள் இதை பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.
கால்பந்து விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் மெஸ்ஸி, தேசம் கடந்து பல்வேறு உலக ரசிகர்களை கொண்டுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல்முறையாக கால்பந்து உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் மெஸ்ஸி, 17 வருட போராட்டத்திற்கு பிறகு உலகக்கோப்பையை முத்தமிட்டார். அவருடைய நம்பமுடியாத ஆட்டத்திறனுக்கு இந்தியாவின் கேரளாவில் அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை வென்றதிலிருந்தே அர்ஜென்டினா அணியை கேரளாவிற்கு அழைத்துவரும் முயற்சியில் கேரளா அரசு ஈடுபட்ட வந்த நிலையில், தற்போது அர்ஜென்டினா கேரளாவிற்கு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் விளையாடவிருக்கும் மெஸ்ஸி..
உலக சாம்பியனான லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, வரும் நவம்பர் 10 முதல் 18 வரையிலான இடைப்பட்ட ஒருநாளில் கொச்சியில் நட்புப் போட்டியில் விளையாடும் என கேரளா விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துர்ரஹ்மான் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “பெருமையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். அர்ஜென்டினா அணி கேரளாவிற்கு வருகிறது! கடவுளின் சொந்த நாட்டிற்காக ஒரு வரலாற்று கால்பந்து தருணம் காத்திருக்கிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதை அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் (AFA) உறுதிசெய்துள்ளது. தங்களுடைய கால்பந்து ஹீரோ மெஸ்ஸி கேரளாவிற்கு வருவதை கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.