அசத்தல் கம்பேக் கொடுத்த மான்செஸ்டர் யுனைடட்... இரண்டாவது பாதியில் 3 கோல்கள் அடித்து வெற்றி..!

இரண்டாவது பாதி தொடங்கியது முதலே யுனைடட் வீரர்கள் தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டனர்.
Manchester United's Rasmus Hojlund
Manchester United's Rasmus HojlundMartin Rickett

பிரீமியர் லீக் தொடரின் மிகமுக்கிய போட்டியில் ஆஸ்டன் விலா அணியை 3-2 என வீழ்த்தி அசத்தியது மான்செஸ்டர் யுனைடட். முதல் பாதியில் 0-2 என பின்தங்கியிருந்த அந்த அணி, இரண்டாவது பாதியில் அசத்தல் கம்பேக் கொடுத்து 3 கோல்கள் அடித்தது.

மான்செஸ்டர் யுனைடட் அணியின் இந்த சீசன் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. எரிக் டென் ஹாகின் இரண்டாவது சீசனில் பெரும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அந்த அணி தொடர்ந்து தடுமாறியது. பிரீமியர் லீக் தொடரில் விளையாடியிருந்த முதல் 18 போட்டிகளில் எட்டில் தோல்வியைத் தழுவியிருந்தது அந்த அணி. போர்ன்மௌத், கிறிஸ்டல் பேலஸ் போன்ற அணிகளிடமெல்லாம் தோற்றிருந்தது அந்த அணி. சாம்பியன்ஸ் லீக் தொடரிலோ கோபன்ஹேகன், கேலடஸரே அணிகளிடம் வெற்றி பெற முடியாமல் தடுமாறியது. கடைசியில் தங்கள் பிரிவில் கடைசி இடம் பிடித்து யூரோப்பா லீக் தொடருக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த குரூப்பில் அதிக கோல்கல் (12) அடித்திருந்த அணி யுனைடட் தான். ஆனால் 15 கோல்கள் வாரி வழங்கிய அந்த அணி வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. போக, லீக் கோப்பையிலும் நியூகாசில் யுனைடட் அணியிடம் தோற்று வெளியேறியிருந்தது.

தோல்விகள் ஒருபக்கமெனில், அவர்கள் டிஃபன்ஸின் சொதப்பல் ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்பட்டது. மகுயர், லிண்டலாஃப், வரான், எவான்ஸ், லூக் ஷா, கம்ப்வாலா என 6 சென்டர் பேக்குகளை பயன்படுத்திய டென் ஹாக், மொத்தம் 11 காம்பினேஷன்களை இந்த சீசனில் பயன்படுத்தினார். ஆண்ட்ரே ஒனானாவும் எதிர்பார்ப்புக்கு மாறாக சொதப்பினார். நடுகளமும் அவர்களுக்கு சரியாகக் கைகொடுக்கவில்லை. வீரர்களின் காயமும் அவர்களுக்கு கூடுதல் பிரச்சனையாக அமைந்தது. இருந்தாலும் மேனேஜர் டென் ஹாக் எடுத்த முடிவுகளும் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. கடந்த சில போட்டிகளாக இன்னொரு பிரச்னையும் முளைத்திருந்தது. போர்ன்மௌத், பேயர்ன் மூனிச், லிவர்பூல், வெஸ்ட் ஹாம் என தொடர்ந்து நான்கு போட்டிகளில் அந்த அணி கோல் அடிக்கவே இல்லை. அட்டாக்கர்களாலும் எந்தவித தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. அதனால் மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இந்நிலையில், அட்டகாசமான ஃபார்மில் இருந்த ஆஸ்டன் விலா அணிக்கு எதிராக மோதியது மான்செஸ்டர் யுனைடட்.

எதிர்பார்த்ததைப் போலவே முதல் பாதியில் மான்செஸ்டர் யுனைடட் அணி சொதப்பவே செய்தது. ஆஸ்டன் விலா தங்களுக்குக் கிடைத்த 2 செட்பீஸ் வாய்ப்புகளைப் பயன்படுத்தி 2 கோல்கள் அடித்தது. முதலில் ஃப்ரீ கிக்கை பயன்படுத்தி மெக்கின் கோல் நோக்கி செலுத்திய பந்தை யாருமே தொடாமலோ, தடுக்காமலோ விட அந்தப் பந்து நேராக கோலுக்குள் சென்றது. அடுத்த நான்கரை நிமிடங்களிலேயே இரண்டாவது கோலையும் அடித்தது ஆஸ்டன் விலா. கிடைத்த கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி பெனால்டி ஏரியாவுக்குள் மெக்கின் பந்தை செலுத்த, இரண்டாவது போஸ்ட்டுக்கு வெளியே இருந்த கிளெமென்ட் லாங்லே கோல் நோக்கி ஹெட்டர் செய்தார். அதை அற்புதமாக ஒரே டச்சில் லியான் டென்டோன்கர் கோலாக்கினார். அதனால் முதல் பாதியில் 2-0 முன்னிலை பெற்றிருந்தது ஆஸ்டன் விலா. போட்டி அவ்வளவு தான் என்று மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்கள் நினைத்திருக்க, இரண்டாவது பாதியில் எல்லாம் மாறியது.

இரண்டாவது பாதி தொடங்கியது முதலே யுனைடட் வீரர்கள் தொடர்ந்து அட்டாக்கில் ஈடுபட்டனர். 48வது நிமிடத்தில் அலஹாண்ட்ரோ கர்னாசோ. ஆனால் அவர் ஆஃப் சைடில் இருந்ததால் கோல் நிராகரிக்கப்பட்டது. இருந்தாலும் ஓயாமல் அட்டாக் செய்தது யுனைடட். அதனல் பலனாக 56வது நிமிடத்தில் முதல் கோல் விழுந்தது. மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் கொடுத்த கிராஸை கோலாக்கினார் கர்னாச்சோ. அதன்பிறகு ஆஸ்டன் விலா அணியும் சற்று எழுச்சி பெற்று ஆடியது. இருந்தாலும் யுனைடடின் அட்டாக் தொடர்ந்து கோலுக்கு முயன்று கொண்டே இருந்தது. 71வது நிமிடத்தில் அந்த அணி இரண்டாவது கோலையும் அடித்தது. இந்த கோலையும் கர்னாச்சோவே அடித்தார். ஆட்டத்தை சமன் செய்த பிறகும் கூட மான்செஸ்டர் யுனைடட் அட்டாக் செய்வதை நிறுத்தவில்லை. 82வது நிமிடத்தில் கிடைத்த கார்ன்ர் வாய்ப்பைப் பயன்படுத்தி அந்த அணி மூன்றாவது கோல் அடித்தது. சுமார் 1000 நிமிடங்களுக்கு மேல் பிரீமியர் லீக் தொடரில் விளையாடியும் கோலடிக்காத ராஸ்மஸ் ஹாய்லண்ட், தன் முதல் பிரீமியர் லீக் கோலை அடித்தார். அந்த கோல் யுனைடடின் வின்னிங் கோலாகவும் அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் 31 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டர் யுனைடட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com