ஒலிம்பிக் லயான்
ஒலிம்பிக் லயான்Twitter

"அந்த ஜெர்ஸியின் பெருமை கெடுத்துவிடாதீர்கள்" மைதானத்திலேயே மைக் எடுத்து வீரர்களை விமர்சித்த ரசிகர்!

இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கும் லயான் அணியின் ரசிகர்கள் சமீபத்திய தோல்விக்குப் பிறகு வீரர்களை களத்திலேயே எச்சரித்திருக்கிறார்கள்!

ஒலிம்பிக் லயான் - பிரான்சை சேர்ந்த கால்பந்து கிளப். லீக் 1 தொடரில் விளையாடிவரும் அந்த அணி பிரான்ஸின் முன்னணி அணிகளுள் ஒன்றாகப் பெயரெடுத்தது. 7 முறை லீக் பட்டத்தை வென்ற அணி எப்படியும் டாப் 4 இடங்களுக்குள் முடித்துவிடும்.

எப்படியும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெற்றுவிடும். சமீபமாக 2019-20 சாம்பியன்ஸ் லீக் தொடரில் கூட அரையிறுதி வரை முன்னேறியிருந்தது அந்த அணி. கரிம் பென்சிமா, ஹூகோ லோரிஸ், மைக்கேல் எசியன் என பல முன்னணி சூப்பர் ஸ்டார்கள் அந்த அணிக்காக விளையாடியிருக்கிறார்கள்.

பெருமை வாய்ந்த இந்த அணிக்கு கடந்த சில சீசன்கள் சிறப்பாகச் செல்லவில்லை. 2021-22 சீசனில் எட்டாவது இடம் பிடித்த அணி, 2022-23 சீசனில் ஏழாவது இடமே பிடித்தது. அதன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது சீசனாக புதிய பயிற்சியாளரோடு களமிறங்கியது அந்த அணி. இருந்தாலும் இந்த சீசன் அந்த அணிக்கு சிறப்பாக அமையவில்லை. இதுவரை இந்த சீசனில் விளையாடிய 4 லீக் 1 போட்டிகளில் ஒரு டிரா, 3 தோல்வி என வெறும் 1 புள்ளி மட்டுமே பெற்றிருக்கிறது அந்த அணி.

இந்த சீசன் அந்த அணியின் பல முன்னணி வீரர்கள் அந்த அணியிலிருந்து வெளியேறிவிட்டனர். ஹசம் அவோர், பிராட்லி பிரகோலா, ரோமன் ஃபாய்வ்ரே, ரோமன் லுகாபா என பல முன்னணி வீரர்கள் அந்த அணியிலிருந்து வெளியேறிய நிலையில், சொல்லிக்கொள்ளும்படியான பெரிய வீரர்களை அந்த நிர்வாகம் வாங்கவும் இல்லை. சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது அந்த அணி.

புள்ளிகள், முடிவுகளை விட அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 4 போட்டிகளில் 10 கோல்கள் வாங்கியிருக்கும் அந்த அணி, ஹோம் கிரவுண்டில் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே தலா 4 கோல்கள் வாங்கியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை பிஎஸ்ஜி அணிக்கு எதிராக தங்கள் ஹோம் கிரவுண்டில் நடந்த போட்டியை 1-4 என தோற்றது லயான்.

இந்தப் போட்டியில் லயான் அணியின் செயல்பாடு மிக மிக மோசமாக இருந்தது. முதல் பாதியிலேயே 4 கோல்களையும் வாங்கியது அந்த அணி. இரண்டாவது பாதியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் வீரர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் விளையாடியதால் 4 கோல்களோடு தப்பியது அந்த அணி.

இந்தப் போட்டி முடிந்ததும் லயான் வீரர்கள் போட்டியைக் காண மைதானம் வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு ரசிகர் ஒலிப்பெருக்கியை எடுத்து வீரர்களை நோக்கிப் பேசத் தொடங்கினார்.

"2023-24 ஒலிம்பிக் லயான் வீரர்களே இது உங்களுக்காகத் தான் சொல்கிறேன். இவர்களுள் ஒருசிலர் டிரஸ்ஸிங் ரூமில் லீடர்களாக இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு தெளிவான மெசேஜ் சொல்கிறேன். இந்த அணியில் தலைவர்கள் என்று சிலர் இருந்தால், இதற்கும் மேல் அவர்கள் அமைதியாக இருக்க முடியாது.

நீங்கள் பெருமை மிகுந்த ஒலிம்பிக் லயான் ஜெர்ஸியை அணிந்திருக்கிறார்கள். உங்களுக்கு முன் அந்த ஜெர்ஸியை அணிந்த வீரர்கள் அதற்குப் பெருமை சேர்த்தார்கள். அதை நாசமாக்கும் உரிமை உங்களுக்கு இல்லை.

டிரான்ஸ்ஃபர் விண்டோ முடிந்துவிட்டது. இதுதான் ஸ்குவாட் என்று உறுதியாகிவிட்டது. இப்போது நாங்கள் உங்கள் பின்னால் இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அதை உங்கள் செயல்பாடு தான் உறுதி செய்யவேண்டும். அந்த ஜெர்ஸி மீது பெரும் காதலும் மரியாதையும் இருக்கிறது.

நாங்கள் உங்களிடம் கேட்பதெல்லாம் உங்கள் பெயரை கோஷமிடும் வகையில் விளையாடுங்கள் என்பதுதான். உங்கள் பெயரை நாங்கள் மரியாதையோடு பாடவேண்டும். ஏனெனில் நீங்கள் நேசத்தோடு விளையாடுகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த ஜெர்ஸியை நீங்கள் மதிக்கவேண்டும், களத்தில் இருங்கும்போதெல்லாம் உங்கள் சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கவேண்டும் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார் அவர்.

அவர் பேசும்போது லயான் வீரர்கள் அதை முழுமையாக கேட்டார்கள். ரசிகர்களின் வலியை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தாலும் திடீரென்று ரசிகர் ஒருவர் ஒட்டுமொத்த அணியையும் காரசாரமாக விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com